ஐஸ்லாந்தில் மீண்டும் எரிமலை சீற்றம்: விமான சேவை பாதிப்பு
ஐஸ்லாந்தில் மீண்டும் எரிமலை சீற்றத்துடன் புகையை கக்கத் தொடங்கியுள்ளதால் அருகில் உள்ள ஸ்பெயின், போர்ச்சுக்கல்லில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை கடந்த மாதம் வெடித்து சிதறியதில் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் விமான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக சீற்றம் குறைந்து காணப்பட்ட இந்த எரிமலை, மீண்டும் பெரிய அளவில் புகையை கக்கத் தொடங்கியுள்ளது. எரிமலையில் இருந்து வெளிவரும் புகை அண்டை நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுக்கல் வான்பரப்பில் பரவி இருப்பதால் அந்நாடுகளில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அயல்நாடுகளில் இருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல்லுக்கு வரும் விமானங்களும், அங்கிருந்து பிற நாடுகளுக்கு செல்லும் விமானங்களும் தாமதமாக செல்கின்றன. இந்த விமானங்கள் வழக்கமான பாதைகளுக்கு பதிலாக வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.
ஐஸ்லாந்து எரிமலையில் இருந்து வெளிவரும் புகை வான்பரப்பில் பரந்து இருப்பதால் ஸ்பெயின் நாட்டின் உள்ள மூன்று விமான நிலையங்கள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன. அங்கு வரும் விமானங்கள் அனைத்தும் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment