Monday, May 31, 2010

லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது தாக்குதல்,

ஜேவிபி.ஆதரவுப் பத்திரிகையான லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக அதன் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த தெரிவித்துள்ளார். மொனராகலையில் கலை விழா ஒன்றிற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்த போதே உள்ளுர் ஆளும்கட்சி அரசியல்வாதியின் குண்டர் படையால் இவர் தாக்குதலுக்குள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வூடகவியலாளரைத் தாக்கிய காடையர்கள் அவருடைய கைத்தொலைபேசியையும் எடுத்துச் சென்றுள்ளனர். தாக்குதலுக்கு வந்த குண்டர்களுடைய வாகனத்தையும் அவ்வூடகவியலாளர் படம் பிடித்துள்ளார். பொலிஸாரின் தலையீட்டை அடுத்து இரு தரப்பினருக்குமிடையே சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டது. லங்கா ஊடகவியலாளர்களின் பணிகளுக்கு எதிர்காலத்தில் எவ்வித இடையூறும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அவ்வரசியல்வாதி உறுதி வழங்கியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களினால் ஜனநாயகம் குறித்து பிழையான கருதுகோள்கள் சமூகத்தில் உருவாகும். ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களினால் ஜனநயாகம் குறித்து பிழையான கருதுகோள்கள் சமூகத்தில் உருவாகக் கூடிய அபாயம் காணப்படுவதாக அடக்குமுறைக்கு எதிரான ஊடகவியலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கப்படாவிட்டால் சமூகத்தில் எதிர்மறையான எண்ணக்கருக்கள் உருவாக வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது நடத்திய தாக்குதல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. லங்கா பத்திரிகையின் அனுசரணையில் நடைபெறவுள்ள கலை விழா தொடர்பான பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் லங்கா ஊடகவியலாளர் மொனராகலை பிரதேசத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். மொனராகலை பிரதேச சபையின் தலைவர் ஆர்.எம்.ரட்ணவீரவின் வாகனத்தில் பயணித்த நபரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஊடக அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com