கருத்துச் சுதந்திரமும் - பத்திரிக்கைச் சுதந்திரமும்.
தேர்தல் நடத்தி, அதன் மூலம் மக்கள் தங்களுடைய வாக்குச் சுதந்திரத்தை பயன்படுத்தி, தங்களை ஆள ஒரு அரசை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அவர்களுக்கு அளிப்பதனால் மட்டுமே ஒரு நாட்டை ஜனநாயக நாடாக உறுதி செய்திட முடியாது.
அந்த நாட்டில் மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் முறையாக காப்பாற்றப்படுகின்றனவா? கண்ணியத்துடனான வாழ்வுரிமை, கல்வியுரிமை, தொழிலுரிமை, பாதுகாப்பு ஆகியன மட்டுமின்றி, அவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் முழுமையாக உள்ளதா? என்பதைத் தீர்மானித்தே அந்த நாட்டை முழுமையான ஜனநாயக நாடாக ஒப்புக்கொள்ள முடியும்.
கருத்துச் சுதந்திரத்தை அடிப்படை மனித உரிமை என்கிறது ஐ.நா.வின் மனித உரிமைப் பிரகடனம். “சுயமான கருத்தைக் கொள்ளவும், வெளிப்படுத்தவும் ஒவ்வொரு மனிதருக்கும் உரிமை உள்ளது. எவ்வித புறத் தலையீடுமின்றி ஒரு கருத்தைக் கொண்டிருக்கவும், தகவல்களை கோரவும், பெறவும் மட்டுமின்றி, எவ்வித எல்லைக்கும் உட்படாமல் தகவல்களையும், கருத்துக்களையும் எந்தவொரு ஊடகத்தின் வாயிலாகப் பெறுவதும் இந்த உரிமைக்கு உட்பட்டதாகும்” என்று ஐ.நா.வின் மனித உரிமைப் பிரகடனம் (Universal Declaration of Human Rights 1948) கூறுகிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படி வாழ்வுரிமை, சுதந்திரம், பாதுகாப்பு ஆகியன அடிப்படை உரிமையாகிறோ அதே அளவிற்கு கருத்துச் சுதந்திரம் முக்கியமானதாகிறது. கருத்துச் சுதந்திரம் முழுமையாக உறுதிப்படுத்தப்படும் நாட்டில்தான் ஜனநாயகம் உண்மையாக தழைத்தோங்குகிறது. அதனால்தான் பத்திரிக்கைகளை ஜனநாயகத்தின் ஒரு (நான்காவது) தூணாக கருதப்படுகிறது.
ஆனால், கருத்துச் சுதந்திரம் எந்த அடிப்படையில் நிறைவேறுகிறது? அது பத்திரிக்கைகள் உட்பட்ட ஊடகங்களின் சுதந்திரமான செயல்பாட்டினால்தான் நிறைவேறுகிறது. அதனால்தான் பத்திரிக்கைச் சுதந்திரம் ஒரு நாட்டில் எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு அந்த நாட்டில் கருத்துச் சுதந்திரம் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படும் நாட்டில் அல்லது அந்த காலகட்டத்தில் தனி மனித கருத்துச் சுதந்திரம் இருக்க முடியாது, ஏனெனில், மக்கள் அறிய வேண்டிய தகவல்கள் தடுக்கப்படுகின்றன. எனவே கருத்துச் சுதந்திரம் நிலைபெற அங்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது.
எனவே கருத்துச் சுதந்திரத்தின் அச்சாணியாகத் திகழ்வது பத்திரிக்கை உள்ளிட்ட ஊடகங்களின் சுதந்திரமே. எனவேதான், எந்த ஒரு நாட்டில் பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு, பத்திரிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடும் அச்சுறுத்தலும் நிலவுகிறதோ அந்த நாட்டில் மக்களுக்கு எதிரான அரசின் ஒடுக்குமுறை நிலவுகிறது என்பதை உறுதியாகக் கூறிலாம்.இது வரலாற்றில் பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திரத்தில் உலக நாடுகளும் - தெற்காசியாவும்.
உலக நாடுகளில் குறிப்பாக வட அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பத்திரிக்கைச் சுதந்திரம் அதன் முழுமையான வீச்சுடன் செயல்படுகிறது. அது அரசுகளைத் தாண்டி, மக்களையும், மானுடத்தின் இன்றைய, எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. அதன் விளைவே, சுற்றுச்சூழல் விழுப்புணர்வு மேற்கத்திய நாடுகளில் மேலோங்கி இருக்கக் காரணமாகவுள்ளது. ஆர்டிக் கடலில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதையும், அதன் காரணமாக அங்கு வாழும் பனிக் கரடிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலையும் உள்ளது உள்ளவாறு செய்தியாக்கின அங்குள்ள ஊடகங்கள். அது தொடர்பான ஆய்வுகளை வெளியிடுவதில் முன்னுரிமை அளித்தன.
0 comments :
Post a Comment