Wednesday, May 26, 2010

ஐ.நா செயலாளர நாயகம்; ஒத்துழைப்பு வழங்க மாட்டார். குணதாஸ அமரசேகர.

மேற்குலக நாடுகளிலுள்ள தமிழ் இனவாதிகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கிலும், மீண்டும் இலங்கையில் ஈழக் கொள்கைகளை நிலைநாட்டுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காகவும் யுத்த காலத்தில் இலங்கை இராணுவம் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான குழு என்ற அரச சார்பற்ற அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையிடம் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய புத்திஜீவிகள் சபையினால் கொழும்பு தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான குழு, தயாரித்துள்ள இந்த அறிக்கையை உலகிலுள்ள எந்த நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய முடியாது. அதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் வெறும் தகவல்கள் மாத்திரமே. இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்த குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஊடாக விசாரணை நடத்த ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்காகவே அந்த அமைப்பு இந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் செயலாளர் இதற்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டார் என நம்புகிறோம்.

இலங்கைக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபையிடம் இந்த அறிக்கை மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வறிய நாடாக இருக்கலாம். எனினும், எமக்கு சுய கௌரவம் இருக்கிறது. இதனடிப்படையில் நாம் செயற்பட வேண்டும் என குணதாஸ அமரசேகர கூறியுள்ளார்.

இதேவேளை இங்கு உரையாற்றிய சிரேஷ்ட சட்டத்தரணி, எஸ்.எல். குணசேகர, இலங்கையில் இடம்பெற்றவை குறித்து பொய்யான அறிக்கைகளை தயாரிக்க வெளிநாடுகளைச் சேர்ந்த அமைப்புகளுக்கோ, நபர்களுக்கோ உரிமையில்லை. இது போன்ற வெளிநாட்டு சூழ்ச்சிகளுக்கு எதிராக நாம் முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான வெளிநாட்டுச் சூழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் இலங்கையர்கள் இருக்கின்றனர். அவர்களை சமூகம் புறக்கணிக்க வேண்டும். 13வது அரசியல் சாசனத் திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு இந்திய இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இவற்றுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும். கடந்த காலங்களில் இந்தியா விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களையும் வழங்கியிருந்தது. விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததன் காரணமாகவே அவர்கள் இலங்கைக்கு உதவினர் என சட்டத்தரணி எஸ்.எல். குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜாதிக்க ஹெல உறுமயவின் செயலாளர் ஓபல்பே சோபித்த தேரர், சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான குழு யுத்த குற்றங்களை மேற்கொள்ளும் விடுதலைப் புலி பயங்கரவாதிகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பாகும். அவர்கள் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவே செயற்பட்டுள்ளனர். இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை உருவாக்குவதே அவர்களது நோக்கம். இந்த அறிக்கையை சமர்ப்பித்ததன் மூலம் அவர்கள் அதனையே எதிர்பார்த்துள்ளனர். நாம் அனைவரும் ஒன்றாக இதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டும். இல்லையெனில் இலங்கை பாரிய அழிவை நோக்கி செல்லக்கூடும் என ஓபல்பே சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com