Tuesday, May 25, 2010

போர்குற்றத்தினை ஐ. நா சபையால் விசாரிக்க வற்புறுத்துக - ஹிலாரிக்கு காங்கிரஸ் கடிதம்,

சிறிலங்கா அரசின் போர்குற்றத்தை ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்கவேண்டும். இதற்கான அழுத்தத்தினை ஹிலாரி கிளிங்டன் பான் கி மூன் அவர்களிற்கு கொடுக்கவேண்டும். இவ்வாறு அமெரிக்க காங்கிரஸ் ஹிலாரி கிளிங்டனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும், நிதிச் சேவைகள் குழுவின் மூத்த உறுப்பினருமான ஸ்டிவ் டிரை கோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹிலாரி கிளிண்டனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமது வேண்டுகோளை விடுத்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
இலங்கையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் அந்த நாட்டு அரசினால் நடத்தப் படும் விதம் குறித்த எமது கவலையை வெளிப்படுத்தி நானும் எனது சகாக்கள் 25 பேரும் ஒருவருட காலத்துக்கு முன்னர் கடிதமொன்றை உங்களுக்கு அனுப்பி இருந்தோம். இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதை சிறிலங்கா அரசு தாமதப்படுத்தியுள்ளது.

கடந்த 23 வருடங்களில் இலங்கை மக்கள் மிக மோசமான யுத்தமொன்றைச் சந்தித்துள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றவை எனத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான மோசமான குற்றங்களாகும். இதன் காரணமாக மோதலினால் உருவான துயரங்கள் மேலும் அதிகரித்துள்ளன.

இறுதி நான்கு மாதங்களில் 7ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் எனவும் 13 ஆயிரம் பேர் கயமடைந்தனர் எனவும் ஐ. நா. சபை மதிப்பிடுகின்றது. ஏனைய மதிப்பீடுகள் 30ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றன.

மஹிந்தவின் ஆணைக்குழு வரவேற்கத்தக்கது. கடந்த கால ஆணைக்குழுக்களின் பயனற்ற தன்மை மற்றும் முன்னைய விசாரணைகளை ஜனாதிபதி கைவிட்டமை போன்றவற்றால் தற்போதைய ஆணைக்குழுவை அமைக்கும் நோக்கம் மற்றும் பலாபலன்கள் குறித்து சந்தேகம் எழுகின்றது. மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.சபை விசாரணை செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் புதியவை அல்ல.

பல கௌரவம் மிக்க தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் இந்த வேண்டுகோளைப் பகிரங்கமாகவே விடுத்துள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அரசும் நீதியை நிலைநிறுத்தவும், மனித உரிமை மீறல்களுக்குக் காரணமான தனிநபர்களைப் பொறுப்புக்கூறச் செய்யவும் விரும்பினால் ஐ.நா.சபை மூலமாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளால் மாத்திரமே அது சத்தியமாகும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக வானில் எதிர்ப்பு வாசகங்கள் பறப்பு,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்துடன் விளையாடிய போது இலங்கை அரசாங்கத்திற்கெதிராக வானில் எதிர்ப்பு வாசகங்கள் பறக்கவிடப்பட்டிருந்தன. ஜெனரல் சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யுமாறு கோரியும், இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தக் கோரும் வாசகங்கள் அடங்கிய பதாகையொன்று இலகுரக விமானமொன்றில் கட்டப்பட்ட நிலையில் வானில் காட்சிப்படுத்தப்பட்டது. அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com