அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பலவந்தமாக வெளியேற்ற நேரிடும்.
கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பலவந்தமாக அவர்களது உத்தியோபூர்வ இல்லங்களிலிருந்து வெளியேற்ற நேரிடும் என பொதுநிர்வாக மற்றும் உள்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்த சிரேஸ்ட அமைச்சர்கள் மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேறாது இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம, முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ். செல்லசாமி, பாராளுமன்ற உறுப்பினர்களாக ரஞ்சித் அலுவிகார மற்றும் அமீர் அலி உள்ளிட்டோரும் இந்த குழுவில் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்ட காலக் கெடுவை பயன்படுத்தி சிலர் வெளியேறத் தவறியுள்ளதாகவும், இதனால் மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த அமைச்சர்கள் வெளியேறும் வரையில் புதிய அமைச்சர்களுக்கு வீட்டு வாடகைக் கொடுப்பனவாக தலா 50,000 ரூபா வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
0 comments :
Post a Comment