Monday, May 31, 2010

காவல்துறை அதிகாரங்கள் மத்தியமயப்படுத்தப்பட வேண்டும் - ஜனாதிபதி.

காவல்துறை அதிகாரங்கள் மத்தியமயப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார். காவல்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கக் கூடாது என்பதே தமது உறுதியான நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மும்பை தாக்குதல்களின் போது மாநில அரசாங்கத்தின் அனுமதிக்காக மத்திய அரசாங்கத்தின் கமான்டோக்கள் காத்திருந்தமையினால் இழப்புக்கள் அதிகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே, காவல்துறை அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென வலியுறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுக்கு அவர்களே காரணம் எனவும், தமது
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டங்களை புலிகள் உதாசீனம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முடியாது என்ற காரணத்தினால் வேறு வழியின்று இராணுவ நடவடிக்கைகளை தமது அரசாங்கம் முன்னெடுத்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழித்து விட்டதாக தாம் கருதவில்லை எனவும், உறங்கும் போராளிகள் மற்றும் புலி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 20,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவத்தினர் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்பதில் மிகவும் உன்னிப்பாக செயற்பட்டதாகவும், சொந்த நாட்டு மக்களை அழித்தொழிக்க வேண்டிய அவசியம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபாகரனின் தாய் தந்தையருக்கே தமது அரசாங்கம் அடைக்கலம் வழங்கியுள்ள நிலையில் சாதாரண பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாது என அவர் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர் முகாம்களில் இன்னமும் 30,000 பேர் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும், மீள் குடியேற்ற நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் நிலக்கண்ணி வெடிகளை அகற்றி மீள் குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லதொழிப்பதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் சீனாவிடம் ஆயுதங்களை பெற்றுக் கொண்ட காரணத்தினால் சீனாவுடன் இலங்கை மிக நெருங்கிப் பழகுவதாக அர்த்தப்படாது எனவும், அவசர தேவைகளுக்கு ஏற்ற வகையில் ஆயுதக் கொள்வனவு நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நட்பு காணப்படுகின்றது என்று கூறுவதனை விடவும், நட்பைத் தாண்டிய உறவு காணப்படுவதாகவே தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது உறவினர்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்து விமர்சனங்கள் வெளியிட்டு வருகின்ற போதிலும், ஜனநாயக ரீதியான தேர்தலின் மூலம் அமோக வெற்றியீட்டியுள்ளார்கள் என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனதை ஆறுதல் படுத்தும் நோக்கில் ஹிந்தித் திரைப்படங்களை மாலை வேளையில் தாம் ரசித்து பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com