தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள் மதிப்பீடும் கலந்துரையாடலும்.. ஓர் அலசல்!
எமது தாயகத்தில் தமிழ்த் தேசிய உரிமைக்கென்று பல குரல்கள் ஒலித்து... அவை பல வடிவங்கள் பெற்று... அவற்றிலிருந்து பல விடுதலை அமைப்புகள் உருவாக்கி... அதில் தனிப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவரால் அவரின் பதினேழு வயது பருவத்தில் கையில் துப்பாக்கி ஏந்தி ஆரம்பித்து வைக்கப்பட்ட புலிகள் என்ற இயக்கம்... தமிழீழ விடுதலைப் புலிகளாக ஓர் இனத்தின் பெயரால் தாமே தமக்கு ஏகபோக உரிமையை எடுத்து... தம் இனத்தின் சக விடுதலை அமைப்புகளை... தமிழ்த் தலைவர்களை... பல அறிஞர்களை... கொன்றொளித்தது மட்டுமல்லாமல், அதே தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்களை தம் வாழ்விடங்களை விட்டு அப்புறப்படுத்தி ஓர் இனச் சுத்திகரிப்பை செய்தது மட்டுமல்லாமல், தம் சொந்த தமிழ் உறவுகளையே துரோகிகள் என்று முத்திரை குத்தி கொன்றொளித்து... பாலகர்களை கட்டாய ஆள்சேர்ப்பில் எண்ணிக்கை கூட்டி.. மூளைச் சலவை செய்து... கடைசியில் பதுங்கியிருந்து தாக்கும் வீரமுள்ள புலிஎன்ற வரைவிலக்கணத்துக்கு மாறாக தம் இன மக்களையே தமக்கு கவசமாக வைத்து அவர்களை தாமும் படுகொலை செய்து பொது எதிரிக்கும் வாய்ப்பளித்து... தம்மையே... தம் அமைப்பின் தலைமையையே... தம் குடும்பத்தையே காப்பாற்ற முடியாமல்... உலக வரைபடத்தில் முள்ளிவாய்க்காலை புள்ளியிட்டு காட்டுமளவிற்கு ஓர் இனத்தின் தலைவிதியையே மாற்றுமளவிர்க்கு ஓர் மரண ஓலம் நிறைந்த... இரத்த ஆறு ஓடிய... உயிரற்ற மனித உடல்கள் தீக்கிரையாக்கிய... ஒருபோதும் மற்றவர்களையே கையேந்தாமல், சுய உணவை பூர்த்தி செய்த மக்களை மரண அவல... ஓலத்தின் பின் முட்கம்பிகளின் பின் அநாதைகளாக்கிய... வரலாற்றில் மறக்க முடியாத நாளாகிய “மே 18”யை அமைப்பின் பெயராகக் கொண்டவர்களினால் "தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள் மதிப்பீடும் கலந்துரையாடலும்" என்ற தலைப்பில் ஓர் கலந்துரையாடல் கடந்த சனியன்று (22.05.2010) கனடா டொராண்டோவில் நடைபெற்றது.
மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்ட கலந்துரையாடல் ஆறு மணியளவில் எமது தாயகத்தில் இப் போரினால் இறந்து போன அனைத்து மக்களிற்கும் அஞ்சலி செலுத்தி, மண்டபம் நிறைந்து சமூகமளிதிருந்தவர்களை வரவேற்கும் தலைமையுரையுடன் ஆரம்பித்து, ரகுமான் ஜான் அவர்கள் ஆற்றிய முகவுரையில் 'மே 18 இல் முடிவு பெற்ற இனப்படுகொலையின் ஓராண்டு நிறைவை ஒட்டி நாம் இங்கு கூடியுள்ளோம். தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் மிகவும் கனத்த, நீண்ட ஓராண்டு இது. இழந்தவற்றிற்காக கவலைப்படுவதா, உள்ளேயிருப்பவர்கள் பற்றி வேதனைப்படுவதா, அல்லது எதிர்காலம் பற்றி அச்சப்படுவதா என்று தெரியாமல் மிகவும் குழம்பிப் போயிருந்த காலம் இது. நாம் ஏன் இப்படித் தோற்றுப் போனோம் என்று யோசித்து இன்னமும் விடைகாண முடியாமல் தமது நித்திரையை தொலைத்துவிட்டவர்கள் பலர். இறந்துவிட்ட தமது தலைவனுக்கே அஞ்சலி செய்ய வக்கற்றவர்கள், மீண்டும் ஒரு தடவை மக்கள் மீது சவாரிவிட முனைவதைக் கண்டு கொதித்துப் போயிருப்பவர்கள் இன்னும் பலர். இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் இருந்து மீள்வதற்கான முயற்சிகள் எதுவுமே, கடந்த காலம் பற்றிய மீளாய்வுடனேயே தொடங்கப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாகிறது.
இப்படியாக நாம் தோற்றுப் போனதற்கு காரணமானவர்கள் யார்? என்ற கேள்விக்கு, விடுதலைப் புலிகளே காரணமானவர்கள் என்ற பதில் கேட்கிறது. அதில் உண்மை இல்லாமலும் இல்லை. கடந்த காலத்தில் மாற்று அமைப்புக்கள் அணைத்தையும் அழித்தொழித்து, தமது ஏகபிரதிநிதித்துவத்தை சக போராளிகளது சாம்பல் மேட்டில் நிறுவியவர்கள், வெளியில் இருந்து எழுத்த கேள்விகளுக்கெல்லாம் தலைவருக்கு தெரியும் என்று இறுமாப்புடன் பதில் அளித்தவர்கள் இந்த தோல்விக்கும் பொறுப்பெடுத்துதான் ஆக வேண்டியுள்ளது. அதனைவிட, இன்று புலிகளது ஆதரவாளர்கள் சித்தரிகக் விரும்புவது போல இந்த தோல்வியொன்றும் சர்வதேச சதியினால் விளைந்ததல்ல. நாம் எப்போது சர்வதேச சமூகத்தை ஒரு பொருட்டாக மதித்தோம், அந்த சர்வதேச சமூகம் எமது போராட்டத்தைப் பற்றி அக்கறைப்படுவதற்கு? ஒரு விடுதலைப் போராட்டத்தில் செய்யக் கூடாத அத்தனைத் தவறுகளையும் ஒட்டு மொத்தமாக செய்து விட்டு, வெறுமனே சர்வதேச சமூகத்தில் மாத்திரம் தோல்விக்கான பொறுப்பை சாட்டிவிட முடியாது. எமது போராட்டத்தில் இணைந்து கொள்ளக் கூடிய, அதற்கு ஆதரவாக இருந்திருக்கக் கூடிய அத்தனை சக்திகளிடம் இருந்தும் தம்மை தனிமைப் படுத்திக் கொண்ட விடுதலைப் புலிகள், அதன் மூலமாகவே தமது தோல்வியை தாமே வரவழைத்துக் கொண்டார்கள் என்பதுதான் சரியானதாக இருக்கும். 2001 செப்டம்பர் 11 இற்கு பின்பு சர்வதேச சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள், மகிந்த அரசின் வருகை, அவர்கள் வகுத்த புரொஜெக்ட் பீக்கன், அதற்கு ஆதரவாக சர்வதேச சமூகத்தை அணிதிரட்டியமை போன்றவற்றை புரிந்து கொண்டு, அவற்றிற்கு முகம் கொடுக்கும் விதத்தில் தமது தந்திரோபாயங்களை மாற்றிக் கொள்ளும் திறன் அற்றவர்களாக இருந்தார்கள். இந்த யுத்தத்தின் அனைத்து முன்னெடுப்புக்களும் சிறீலங்கா அரசின் கைகளிலேயே இருக்க, இவர்கள் அவற்றை எதிர்கொள்வதில் செயல் முனைப்பு அற்றவர்களாக இருந்தார்கள். அதனைவிட இந்த கடைசி யுத்தத்தில் மாவிலாறு தொடங்கி நந்திக்கடல் வரையிலான போர்க்களங்களில் எத்தனை தீவிரமான சமர்கள் நடைபெற்றன? பல நூற்றுக்கணக்கான மைல்கள் நீளமான போர்முனையில் ஊடுறுவும் தாக்குதல்கள் எத்தனை நடத்தப்பட்டன? இவை யாவும் யுத்தத்தில் இராணுவ சமபல நிலை சிறீலங்கா அரசின் பக்கமே இருந்ததை காட்டின. இதனை புலிகள் அமைப்பானது எப்படி அனுமதித்தது?
கடந்த முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக யுத்த களத்தில் நின்ற ஒரு வீரன், இராணுவ நிபுணன் எப்படி நந்திக்கடல் போன்றதொரு வெட்டவெளியில் தனது படையை இறுதிக் கட்டத்தில் குவித்திருக்க முடியும். தனது சகதோழர்களையே நம்பாத ஒருவர் யாரை நம்பி, யாருக்காக இப்படி காத்திருந்தார்? அதனைவிட அவலமானது, இவர்கள் தம்மை காத்துக் கொள்ளும் நோக்கில் பலியிட்ட சாதாரண குடிமக்களது எண்ணிக்கை! இத்தனை மக்களை பலியிட்டு எதனை காத்துக் கொள்ள முனைந்தார்கள்? போராட்டம் தோல்வியை நோக்கி போய்க் கொண்டிருப்பது தெரிந்தும், அதனை தவிர்ப்பதற்கு, இழப்புகளை குறைப்பதற்கு, போராட்டத்தின் தொடர்ச்சியை உத்தரவாதப்படுத்துவதற்கு முயலாமல் இப்படியாக நந்திக் கடலில் சங்கமிக்கச் செய்தமையானது, தமது செயல்திறன் அற்ற தலைமையை காப்பதற்கு ஒரு தேசத்தின் நலன்களை பலியிட்டதாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இன்று தலைவனது இறப்பை மக்களுக்கு சொல்லாமல், அவரது தவறுகளுக்கும் அப்பால், அவருக்கு உரிய மறியாதையையும் செய்யாமல் இவர்கள் எதனை, யாரை காக்க முனைகிறார்கள்?
இப்படியாக எழும் கேள்விகளும், விமர்சனங்களும் தொடரவே செய்கின்றன. இவை சரியானதும்தான். ஆனால் பிரச்சனை என்னவென்றால், இவை அனைத்துமே பிரச்சனையின் ஒரு பக்கம் மட்டும்தான் என்பதுதான். இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. அதுதான் இப்படிப்பட்ட ஒரு அமைப்பு உருவானதில், அதனை தாங்கிப் பிடித்ததில் தமிழ் சமூகத்தின் பாத்திரம் என்ன? என்பதாகும். அதனைவிட முக்கியமாக, இதனை கடந்து வருவதில் தமிழ் சமூகத்தின் முற்போக்கு, ஜனநாயக சக்திகள் இழைத்த தவறுகள் என்ன என்பதாகும். நான் நினைக்கிறேன் சுயவிமர்சனம்தான் மிகச் சிறந்த விமர்சனம் என்று. அதனால் நாம் முற்போக்கு, ஜனநாயக சக்திகளது பாத்திரம் பற்றிய சுயவிமர்சனத்தில் இருந்துதான் எமது எதிர்கால திட்டமிடல்களை ஆரம்பித்தாக வேண்டியுள்ளது. அதுதான் இந்த உரையின் நோக்கமாகவும் இருக்கிறது.
தேசம் என்பது ஒரு வரலாற்றுபூர்வமான உருவாக்கமாகும். நாம் என்னதான் கல் தோன்றி மண் தோன்றா காலம் பற்றி பழம் பெருமைகள் பல பேசிக் கொண்டாலும், தேசங்கள் என்பவை முதலாளித்துவ காலகட்டத்திற்கு உரியவையாகும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஈழத் தமிழரைப் பொறுத்த வரையில் காலனித்துவ காலத்தில் தொடங்கி, சுதந்திரம் பெற்றது வரையிலான காலம் இப்படிப் பட்ட கால கட்டமாக அமைகிறது. இந்த கட்டத்தை பரிசீலிப்பதன் மூலமாகவே ஈழத் தமிழர் தேசமாக உருப் பெற்றது பற்றிய விடயங்களையும், இலங்கையில் தேசிய பிரச்சனையின் முக்கியமாக அம்சங்களையும் சரிவர புரிந்து கொள்ள முடியும். இந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே நாம், எமது தேசத்தின் விடுதலைப் போரட்டம் பற்றிய பிரச்சனையையும் சரிவர அணுக முடியும். வரலாறு பற்றிய எமது ஆய்வுகளில் அடிக்கடி இடையூறு விதித்து வரும் இரண்டு போக்குகளை இனம் கண்டு அவற்றை முதலிலேயே தவிர்த்து விடுவது அவசியமானதாகிறது.
முதலாவது, பொருளாதாரவாதம்: அதாவது, ஏகாதிபத்தியம் மற்றும் தரகு முதலாளித்துவம் பற்றிய அக்கறைகள் மாத்திரம் இந்த சிக்கலான விடயத்தை விளக்கிவிட போதுமாவை என்ற விதத்தில் முன்வைக்கப்படும் வாதங்கள். இவை முக்கியமாக இடதுசாரி சக்திகளால் முன்வைக்கப்பட்டன, இப்போதும் முன் வைக்கப்படுகின்றன. இரண்டாவது, இன அடிப்படையிலான அரசியல் இது தமிழ் தேசியவாத தலைமைகளினால் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டது, இப்போதும் முன்வைக்கப்பட்டு வருவது. இப்படிப்பட்ட ஒற்றைப் பரிமாண வியாக்கீனங்களானவை, தாம் எதனை விளக்க முனைகின்றனவோ, அதனை விளக்குவதற்கு அறவே தகுதியற்றவை யாகின்றன. ஏனெனில் யதார்த்தமானது இந்த ஒற்றைப் பரிமாண அரசியல் கட்டமைக்க விழையும் விம்பங்களைவிட மிகவும் வளமானதாகும். அதனால் நாம் முன்னெடுக்கும் கோட்பாடுகள் இந்த சமூக யதார்த்தங்கள் போலவே பன்முக பரிமாணங்களையும் உள்ளடக்கக் கூடியதாக, வளமானதாக, உண்மையிலேயே மிகவும் முன்னேறிய கோட்பாடாக இருப்பது அவசியமானதாகிறது. அந்த வகையில் இலங்கையில் நடைபெற்ற வரலாற்று வளர்ச்சியை புரிந்து கொள்வதற்கு பொருளாதாரம் என்பதற்கும் மேலாக, சாதியம், பிரதேசவாதம், மதம், இனத்துவம், பால்நிலை போன்ற பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியதாக எமது விசாரணைகள் அமைவது அவசியமானதாகிறது. சரியான கோட்பாட்டு சாதனங்கள் இன்றி நாம் சரியான கோட்பாட்டு செயற்பாடுகளை செய்துவிட முடியாது என்பதை நினைவிற் கொள்வது அவசியமானதாகிறது.'
என்று எடுத்துக் கூறி, ஐரோப்பியர்கள் இலங்கையை ஆக்கிரமித்தபோது இலங்கையில் இருந்த கண்டி, யாழ்ப்பாணம், கோட்டை இராச்சியங்களை நினைவுபடுத்தி... அதன்பின் தொடர்ச்சியாக மக்களின் விவசாயம் மூலமான தன்னிறவையும்... காலானித்துவ ஆட்சியையும்... அதன் பிரதிபலிப்புகளையும்... மாற்றங்களையும்... அதன்பின் ஏற்ப்பட்ட சிங்கள கரவா சாதியினரின் எழுச்சி... பவுத்த மறுமலர்ச்சி...கண்டி சிங்களவரது மனக் குறைகள்... அரசியல் சீர்திருத்தங்கள்... Celyon National Congress இன் உருவாக்கம்... டொனமூர் அரசியல் அமைப்பு... சோல்பெரி அரசியல் சீர்திருத்தம்... தமிழரசு கட்சியின் தோற்றம்... வட்டுக்கோட்டைத் தீர்மானம்... வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலம் வென்றவர்களின் வார்த்தை ஜாலங்கள்... இடதுசாரி அமைப்புகளின் பங்கெடுப்புகள்...இளைஜர் அமைப்புகள்... அவற்றின் பங்கெடுப்புகள்... விடுதலைப் புலிகளின் தோற்றம்... அவர்கள் தாமே தன்னிச்சையாக ஏகபோக தலைமையை கையில் எடுத்து தலைமை தாங்கும் சக்தி அறவே இல்லாமல் தாமே தமது அழிவைத் தேடியது... என்று ஓர் சுருக்கமான விளக்கமா வரலாற்றை அப்படியே கண் முன் கொண்டுவந்தார்.
அப்படியே தொடர்ந்து போராட புறப்பட்ட அமைப்புகளின்... தலைவர்களின்... பாதிப்புகள்...புலிகளின் வீழ்ச்சியையும்.. இன்றைய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வாக்கெடுப்பு... நாடு கடந்த அரசு... அவர்களின் ஏமாற்று... இணக்க அரசியலின் தேவை... இணக்க அரசியலின் விளக்கம்... மாற்று அரசியல்... என்று பலவற்றை ஓர் விமர்சனக் கண்ணோட்டத்துடன் எடுத்துக் கூறி, விடுதலைப் புலிகள் என்பது வரலாற்றில் ஓர் முடிந்து போன அத்தியாயம் என்றும் வரலாற்றின் வரலாறு என்பதை அழகாக எடுத்துவந்து மே 18 யை ஓர் முற்றுப் புள்ளியாக கருதாமல் ஓர் தரிப்புக் குறியாக மாற்றுவோம் என தமது "மே 18 " அமைப்பின் "முடிவல்ல... புதிய தொடக்கம்!" என்பதின் அர்த்தத்தையும் நாசூக்காக அர்த்தத்துடன் எடுத்துரைத்து தமது உரையை முடித்தார்.
அதன் பின் தொடர்ச்சியாக அறிவுபூர்வமான ஓர் கலந்துரையாடல் ஆரம்பமாகியது.
இதில் விடுதலைப் புலிகளின் முடிவு எல்லாவற்றிற்கும் தீர்வா?
இன்றைய நிலைக்கு யார் காரணம்? யார் பொறுப்பு?
ஜனநாயக விழுமியங்களை விழுங்கியதா?
ஏனைய அமைப்பை தடை செய்தது எல்லாவற்றிக்கும் புலிதான் காரணமா?
போராட்டத்தை நாம் பின் நோக்கிப் பார்க்கவேண்டும்!
எந்தவிதமான ஒளிவு மறைவு இல்லாமல் ஓர் கருத்தாடல் தேவை!
புலிகள் அழிக்கப்பட்டுவிட்டது, ஆனால் தேசம் இருக்கிறது... இருக்கப்போகிறது...!
சமூகம் என்பது எளிமையானது அல்ல, பல அமைப்புகள் சார்ந்தது... இவற்றால் பல அரசியல் போராட்டங்கள் நடைபெறுகிறது!
சமூக சீர்திருத்தங்கள்... அரசியல் அமைப்புகள்... என பலவற்றின் தேவை!
போராட்டம்... விடுதலை அமைப்பு... என்று சரியான தீர்க்க தரிசனம் இல்லாமல், நண்பர்கள், எதிரிகள் யார் என்று இனம் காணாமல் இயக்கங்களை காப்பாற்றுவதற்கான கொலைகள்... எதுவும் செய்யலாம் என்ற நிலை... எல்லா இயக்கங்களிலும் பிரச்சனைகள்...அதில் புலி ஆதிக்க சக்தி... வெறியாக மாறி, முரண்பாடுகளை வன்முறையால் தீர்த்தது... மிகப் பெரிய இராணுவம் ஏன் கடலிற்குப் போனது...ஆயுதம் எங்கே?... தவறு எங்கே?...சர்வதேச சமூகம் காடிக் கொடுத்தது என்பது பிழை... முஸ்லிம் சமூகம் விரட்டப்பட்டது ஏன் என்று தெரியவில்லை... பிரபாகரன் இறந்தது சொல்ல துணிவில்லை... All are thinking we all are smart ... ஆனால் தைரியமில்லை... முதுகின் பின் செயல் படுகிறோம்... முன்பு செய்திருக்கலாம்... all are excuses ... ஓடுகிற குதிரையில் ஏறும் புத்திஜீவிகள் என்பவர்கள்...
மக்களிற்கு உண்மையாக விசுவாசமா இருக்க வேண்டும்... not like நாடு கடந்த அரசு!
சிறு துளி பெரு வெள்ளம்! We put all together!
குழுவாதத்தை விட்டு வெளியே வாருங்கள்!
நடந்ததை விவாதிப்போம்!
வெளிப்படையாகப் பேசுவோம்!
இப்படியே ஜான் கருத்துக்கள் வைத்து அனைவரையும் அழைப்பு வைத்த மத்தியில்...
கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்நாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் (ஏன் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறி போனது என்று கேட்காதீர்கள்) , தமது வாகனத்தை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் புகலிடம் கொடுத்துவிட்டு திரும்பியவருமான திரு. ஈழவேந்தன் அவர்கள் தொலைநோக்கோடு... சிந்தனை இல்லாமல் இருந்ததை இழந்தோம் என்று எடுத்து வந்து, பிரபாகரனிற்காக அரசியல் இல்லாமல், தொலைநோக்கு சிந்தனை இல்லாமல் இந்த நிலை என்று கூறி, இஸ்லாமியரை எம் உடன்பிறப்பாகக் கருதுகிறோம்... எம்மிடம் குற்றம் குறையுண்டு... ஆய்வுகள் மட்டும் பிரச்சனைகளை தீர்க்காது. But we need not stop, ரகுமான் ஜானின் ஆய்வு ஓர் நல்ல ஆய்வு என்று கூறினார்.
அதன் பின் திரு. சபேசன் அவர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடு கடந்த அரசு என்பன பற்றி "மே 18" அமைப்பினரின் நிலைப்பாடு என்ன என்று கேட்டார்?
அதன் பின் கருத்துக் கூறிய ஒருவர் "நாம் மாறினால்தான் சமூகத்தை மாற்றலாம் என்று கூறி,
புலம் பெயர் நாட்டில் அரசியல், இங்கிருந்து கொண்டே செய்யும் அரசியல், Within our country (Sri Lanka என்னும் ஒரு தேசத்திற்குள்), வட கிழக்கு அரசியல் என்பனவற்றின் தேவையை கூறி, சிந்தனையான பேச்சு, வரலாற்றை படித்த பேச்சு என்பனவற்றின் அவசியத்தை கூறினார்.
He said, "Today also not too late, still we can do” also he said “In this one year period so far no open minded debate. In this how to discuss about Vaddukkoddai resolution, it’s like a Bible”. அத்துடன் No self searching என்றும் கூறினார்
அதன் பின் கருத்துக் கூறிய ஓர் முன்னால் போராளியும் ஜனநாயகவாதியுமனவர், சமூகம் என்பது நான்தான்!
சமூகத்தை குறை சொல்வது என்னைக் குறை சொல்வது போன்றது!
1986 இலேயே LTTE யின் வீழ்ச்சி என்று கூறி, அக்காலத்தில் நல்லூர் கோவண சாமி என்று ஒருவர் "அடிபடப் போறாங்கள்; அடிபட்டுச் சாகப்போறாங்கள்" என்று கூறியதை நினைவு படுத்தினார்.
அத்துடன் தனி மனித வழிபாடு; துதி பாடு; கண்ணை மூடிக் கொண்டு போவது என்பதே இன்றைய அவலத்திற்கு காரணம் என்பதுடன், Geo political , military என்பனவற்றின் வறுமைத்தனம் புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறி, Wisdom ஊடாக சமூதாயத்தை வளர்க்க வேண்டும், என்றும் "
Within all what we can do for our people, we have to do and with Singhalese brotherhood only we can do all!
We have to bring all in English for our younger generation, என்று எடுத்துக் கூறி, நடந்தவற்றை எல்லாம் document பண்ண வேண்டும் என்று ஓர் கோரிக்கை வைத்தார்.
அடுத்ததாக எல்லோரிலும் வயது முதிர்ந்த ஒருவர் தனது கருத்துக்ககளை கூறுகையில், கடந்த கால அனுபவங்களைக் கொண்டு For a permanent solution need solidarity with all என்றும் need a solution within Sri Lanka not from external forces என்பதை வலியுறுத்தினார்.
மேலும் ஒருவர் தனது கருத்தைக் கூறுகையில் இன்றைய நாடு கடந்த தமிழீழத்தையும் தலாய் லாமாவையும் ஒப்பிட்டு தனது கருத்தை வைத்து இவர்கள் விடயத்தில் நாம் அவதானமாக இருக்க வேண்டும் என்றும், யாழில் இருந்து இஸ்லாமியரை அவர்கள் பிறந்த மண்ணை விட்டு அகற்றியது போன்ற கடந்த கால வரலாற்று தவறுகள் இனியும் எம் தேசத்தில் நடக்ககூடாது என்பதை எடுத்து வைத்தார்.
இன்னொருவர் தனது கருத்தில், நாம் விடுதலைப் புலிகளின் தோல்வியை மட்டும் ஆராயாமல் ஜே.வீ.பி. யின் போராட்டத்தின் தோல்விக்கான காரணங்களையும் ஆராய வேண்டும் என தனது கருத்தை... வேண்டுகோளை வைத்தார்.
அடுத்ததாக ஒருவர் சுவாரசியமாக "இருந்த அரசை நாடு கடத்தி விட்டு இப்ப என் நாடு கடந்த அரசு?" என்று கேட்டார்.
அத்துடன் "மே 18 " அமைப்பு ஓர் திறந்த கதைக்கும் தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது, விவாதங்கள்... கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளவேண்டும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அது சரி இதை ஓர் அலசலாக... கண்ணோட்டமாக... ஓர் பார்வையாளனாக இருந்து நான் எழுதும்போது நான் என்ன சொல்லியிருப்பேன்... கலந்துரையாடலிற்கு தலைமை வகித்தவர் ஒவ்வொருவரையும் 5 நிமிடங்களிற்கு மேல் எடுக்கவேண்டாம் என்று ஆரம்பத்திலேயே கூறியிருந்தும் நேரம் போதாமையினால் கூட்டம் முடிவுற நிலையில் கடைசியாக, 20 வருடங்களிற்கு மேலாக கூறும் அதே கருத்தான... வேண்டுகோளான... "இப்படியே நாலு சுவர்களிற்குள்ளே தொடர்ந்து கூட்டம் போடாமல், இங்கு வைக்கும் கருத்துக்கள் வெளியே போக வேண்டும், முக்கியமாக இளம் வயதில் கனடா வந்த இளம் சந்ததியினருக்கு, இங்கு பிறந்து வளர்ந்தவர்கட்கு கடந்த கால உண்மைகள் தெரிய வேண்டும், இதற்க்கு முக்கியமாக ஆங்கிலத்தில், நடப்பவை... நடந்த நிஜங்கள் வெளி வர வேண்டும். இன்று புலி புலம்பெயர் நாடுகளில் ஊடகங்களின் ஊடாகவும், தமது பிரச்சார உத்திகளாலும் எமது இளம் சந்ததியினரை தவறான பாதையில் கொண்டு சென்று விட்டது மட்டுமல்லாமல் இன்றும் நாடு கடந்து... அரசு... என்று தொடர்கிறது, இவற்றிக்கு அவர்களில் குறை சொல்லிக் கொண்டு இருக்காமல் நாம் என்ன செய்கிறோம் என்றுதான் உள்ளது என்றும் புலியின் வளர்ச்சி மட்டுமல்ல இன்று எமது போரின் நாட்களிலும், உலகின் எங்கும் பிரசாரத்தில் தான் எல்லாம் தங்கியுள்ளது என்றும், பிரபாகரன் என்றவர் ஓர் தனிப்பட்டவர், அவர் இறந்துவிட்டார். ஆனால் அவரும் தமிழனின் ஓர் பங்கு, புலிகள் என்பது திடீரென்று பிறந்தது இல்லை, எம்மக்கள் மத்தியில் இருந்துதான் உருவாகியது, இன்று நாம் விட்ட பிழைகளினால்தான் புலிகள் வளர்ந்தார்கள் என்று கூறி எனது கருத்தை அவசரமாக வைத்தேன்.
கடைசியாக ரகுமான் ஜான் அவர்கள் கலந்துரையாடலில் வைத்த கேள்விக்ளிர்க்கான பதிலில் "மே 18" அமைப்பென்பது ஓர் அரசியல் கட்சியல்ல என்பதை தெளிவு படுத்தியதுடன் ஈழமக்களின் சரித்திரம் முள்ளிவாய்க்காலின் முடியவில்லை என்றும், சரித்திரங்கள் தொடர்கிறது... என்று சுருக்கமாக உதாரணங்களுடன் தெளிவு படுத்தினார்.
அப்படியே பல ஜனநாயக அமைப்புகளைச் சேர்ந்த ஜனநாயகவாதிகள், மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த மனித உரிமைவாதிகள், வெவ்வேறு முன்னால் அமைப்புகளைச் சேர்ந்த முன்னால் போராளிகள், பெண்ணியவாதிகள் என்று பலரும் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஆரோக்கியமாக குறிக்கப்பட்ட நேரத்திற்குள் மண்டபம் விட வேண்டிய நிலையில் நிறைவு பெற்றது.
நன்றி!
தோழமையுடன்,
அலெக்ஸ் இரவி.
1 comments :
evey thig is over .even at this moment there are some elements try raise a flag as trans national tamil eelam .I thing they want to kill the remaining tamil population in srilanka
maniam
Post a Comment