Wednesday, May 26, 2010

ஜெனரல் பொன்கேகாவை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதியிடம் மகஜர்.

30 வருடம் நடைபெற்ற யுத்தத்தை தோற்கடித்து, ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் யுத்தத்தை வெற்றியை நோக்கி வழி நடத்திய உண்மையான தலைவரை சிறைவைத்துள்ளமைக்கு எதிராகவும் அவரை விடுதலை செய்யுமாறும் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் மகஜர் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனநாயக தேசியக் கூட்டணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனநாயக தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தை வழி நடத்திய உண்மையான தலைவரை சிறை வைத்து விட்டே அரசாங்கம் யுத்த வெற்றியை கொண்டாடுகிறது. இதற்கான இராணுவ வெற்றி வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதற்கு இயற்கையும் இடமளிக்கவில்லை. அரசாங்கம் அறிவித்த வெற்றி விழா வாரத்தில் ஊடகங்களில் வெளியிட்ட போர் தொடர்பான ஒளிப்படங்களில் ஜெனரல் சரத் பொன்சேக்கா காணப்படும் எந்த படங்களையும் வெளியிடவில்லை. கடந்த வாரம் லங்காதீப பத்திரிகையின் வெளியாகும் உப்புல் ஜோசப் பெர்ணான்டோவின் 'குருதா விக்ராய' கட்டுரை போர் வெற்றித் தொடர்பாகவே எழுதப்பட்டிருந்தது. இதில் ஜெனரல் சரத் பொன்சேக்காவின் யுத்த வெற்றிகளும் உள்ளடக்கப்பட்டிருந்தது. எனினும் அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக பத்திரிகை நிர்வாகிகள் வெளியிடவில்லை.

சுதந்திரமாக செயற்படும் ஊடகம் என எண்ணப்படும் ஊடகங்களை கூட அரசாங்கம் அழுத்தங்கள் மூலம் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. அதேவேளை ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. இதில் முதலாவது நீதிமன்றத்தின் விசாரணைகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சரத் பொன்சேக்கா தாக்கல் செய்த மனுவை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டிருந்தன. எனினும் கடந்த 21 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்திருந்த தடையை விலக்கிக் கொண்டது. இதற்கு எதிராக இன்று உயர்நீதிமன்றத்தில் நாம் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளோம்.

மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள ஒரே இடம் நீதிமன்றமாகும். இந்த நீதிமன்றத்திற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். அதேவேளை நேற்றைய தினம் ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி மேன்மறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளோம். இந்த நிலையில் யுத்த வெற்றி தொடர்பாக பொய்யான கண்காட்சிகளை நடத்தாது, யுத்த வெற்றியின் உண்மையான வீரனை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோருவதாகவும் விஜித ஹேரத் மேலும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com