Tuesday, May 25, 2010

இந்தியாவின் பாதுகாப்புக்கு சவாலாக உள்ள நக்சலைட்களை ஒடுக்குவோம்,

உள்நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ள நக்சலைட்களை ஒடுக்குவோம். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். மத்திய அரசுக்கு மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வேண் டுகோள் விடுத்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2வது முறையாக ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி, பிர தமர் மன்மோகன் சிங் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நக்சலைட் வன்முறை, தீவிரவாதம், ஐ.பி.எல். கிரிக்கெட் விவகாரம், மக்கள் தொகை கணக்கெடுப்பு, நதி நீர் பங்கீடு பிரச்னை, தனி மாநில கோரிக்கை, வளர்ச்சித் திட்டங்கள் உட்பட பல்வேறு பிரச்னை கள் பற்றி சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு பிரதமர் மன்மோகன் சிங் சளைக்காமல் பதில் அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:

நக்சலிசம் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு சவாலாக உள்ளது. இந்த பிரச்னையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். சட்டம்&ஒழுங்கு மாநில அரசின் பிரச்னை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் நக்சலைட்கள் வன்முறையை ஒடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவத் தான் வேண்டும். மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் தனக்கு சில வரம்புகள் விதிக்கப்பட்டு இருப்பதாக கூறியது பற்றி கேட்கிறீர்கள். இதற்கு அவரே விளக்கம் அளித்து இருக்கிறார். சில வியூகங்களை உரிய அமைச்சரவையின் உரிய குழுக்களில் தான் விவாதிக்க முடியும்.

இடதுசாரி தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மத்திய, மாநில அரசுகளிடையே கருத்து வேறுபாடு கிடையாது. மாவோயிஸ்ட்களுக்கு சில வழிகளில் நிதி கிடைக்கிறது. அதை வைத்து ஆயுதங்கள் வாங்குகிறார்கள். சில மனித உரிமை அமைப்புகள் நக்சல் திட்டங்கள் பற்றி பிரசாரம் செய்வதை கட்டுப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை. இந்தியா, ஒரு ஜனநாயக நாடு. ஒவ்வொருவரும் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்த உரிமை உண்டு. வன்முறையை பரப்பாதவரை எந்த தடையும் விதிக்கப்பட மாட்டாது. நக்சலிசம், தீவிரவாதம் இரண்டையும் கட்டுப்படுத்தாவிட்டால் நமது பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.

ஐ.பி.எல். விவகாரம்: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி மீதான புகார்கள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இந்த புகார்கள் குறித்து நிதியமைச்சகம் விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறது. தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சாதி வாரி சென்சஸ்: மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பற்றி நாடாளுமன்றத்தில் நான் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறேன். இந்த விஷயத்தில் பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துக்களை பரிசீலிக்குமாறு அமைச்சரவையை கேட்டு இருக்கிறேன். இது பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்படும். எந்த முடிவை எடுத்தாலும் அதை மக்களுக்கு அறிவிப்போம்.
முஸ்லிம் கல்வி: கல்வி மற்றும் பயிற்சிகளில் முஸ்லிம்கள் எந்த அளவுக்கு ஈடுபட வேண்டுமோ, அந்த அளவுக்கு ஈடுபடவில்லை. அவர்களது பங்கேற்பு குறைவாகவே இருக்கிறது. சச்சார் கமிட்டி அறிக்கையிலும் இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் கல்வி, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த 15 அம்சத் திட்டத்தை உண்மை, நேர்மையுடன் செயல்படுத்துவோம்.

கற்பனைக் குதிரை: இடதுசாரிகளின் ஆதரவை நீங்கள் தவற விட்டு விட்டீர்களா?
என்ற கேள்விக்கு பிரதமர் அளித்த பதில்: எண்ணங்கள் குதிரைகளானால், பிச்சைக்காரர்கள் கூட அதில் ஏறி சவாரி செய்யலாம்" என்ற பழமொழி தான் என் நினைவுக்கு வருகிறது.
(அர்த்தமற்ற கற்பனைகள், ஆசைகள் மூலம் அடைய முடியாததை அடையலாம் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது) இந்த பழமொழியை கூறிய பிரதமர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, "ஒரே கருத்துடைய கட்சிகள் மக்கள் நலனிலும், நாட்டு வளர்ச்சியிலும் அக்கறைக் கொண்டு ஆதரவு தர முன் வந்தால் வரவேற்போம்" என்றார்.

தீவிரவாதம்: இந்து தீவிரவாதம் வளர்ந்து வருவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், "தீவிரவாதத்தை மதத்துடன் இணைப்பதை நான் ஏற்க மாட்டேன். தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. சில சக்திகள் தங்களது கொடுமையான செயல்களுக்கு மதச்சாயம் பூச முயற்சிக்கின்றன. இந்த சக்திகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்தியா நிபந்தனை: பாகிஸ்தான் உடனான உறவு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், "இரு நாடுகளின் உறவில் நம்பிக்கை குறைபாடு தான் பெரிய பிரச்னையாக இருக்கிறது. பாகிஸ்தான் தனது எல்லையை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விடக்கூடாது என்ற நிபந்தனையைத் தான் இந்தியா விதிக்கிறது" என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com