அரசியல் தீர்வின் மாதிரி பொதியுடன் இந்தியா செல்கின்றார் ஜனாதிபதி - சிங்கள நாளேடு
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான அரசியல் தீர்வு உள்ளடங்கிய மாதிரி அறிக்கையொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ எதிர்வரும் ஜூன் மாதம் இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கவிருப்பதாக சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் ஜனாதிபதி இந்தியாவிற்கு மேற்கொள்ளும் விஜயத்தின் போது இந்த அறிக்கையைக் கையளிக்கவுள்ளார். ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு ஜனாதிபதி பிரதீபா பட்டேல் ஆகியோருடன் இந்த யோசனைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
அரசாங்கம் உருவாக்கியுள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தில் 13வது அரசியல் சாசனத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி அந்தத் திட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டிய முழுமையான அதிகாரங்களை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2002ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் வெளியாகும் இந்துப் பத்திரிகைக்கு செவ்வியளித்திருந்த ஜனாதிபதி, 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வை தன்னால் வழங்க முடியும் என்ற போதிலும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
மக்களிடம் இதற்கான அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதே தனது தேவையாகும் எனவும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அதனை அமுல்படுத்தப் போவதாகவும் ஜனாதிபதி அந்த செவ்வியின் போது தெரிவித்திருந்தார். அதேபோல் கடந்த வருடம் ஜூலை மாதம் பசில் ராஜபக்ஸ கோதாபய ராஜபக்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்தியாவிற்கு விஜயம் செய்ததுடன் இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றிலும் கையெழுத்திட்டனர். இதன்மூலம் இந்தியாவிற்குத் தேவையான அரசியல் தீர்வு தொடர்பில் ராஜதந்திர இணக்கம் வழங்கப்பட்டது.
இதேவேளை, அண்மைக் காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்தியா மேற்கொண்டு வரும் பொருளாதாரத் தலையீடுகள் அதிகரித்துள்ளன. இந்தியாவின் புதிய தூதரக அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விஜயத்தின் போது மற்றுமொரு தூதரக அலுவலகத்தைத் திறப்பது குறித்து பேச்சு நடத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அரசாங்கம் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இந்த செயற்பாடுகள் தேர்தலுக்கு முன்னர் ராஜபக்ஸ அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் மேற்கொண்ட இணக்கம் நடைமுறைப் படுத்தப்படுகிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறான சூழல் ஏற்பட்டால் இலங்கை இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாக மாறி இறையாண்மை மற்றும் சுயாதீனத்தன்மையை இழந்த ஆசியாவின் செழிப்பு மிக்க நாடாக மாறுவதைத் தடுக்க முடியாது என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இலங்கை விவகாரங்கள் தொடர்பில் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கண்காணிப்பார் ,
இந்திய இலங்கை விவகாரங்கள் தொடர்பில் பொருளாதார அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவின் பதவிக் காலத்திலும், இந்திய விவகாரங்களை பெசில் ராஜபக்ஷவே கண்காணித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீ.எல்.பீரிஸ் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக கடயைமாற்றிய போதிலும், இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகள் மற்றும் ஏனைய விவகாரங்களை பெசில் ராஜபக்ஷ கண்காணிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 8ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ள நிலையில், பெசில் ராஜபக்ஷ இன்றைய தினம் இந்தியாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
நாட்டில் நிலவும் மோசமான காலநிலையினால் அமைச்சர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளக் கூடாது என்ற ஜனாதிபதியின் தடை உத்தரவு காரணமாக பெசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் காலம் தாழ்த்தப்படலாம் என அறிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தலைமையிலான குழுவினர் இன்று இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும், இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவோவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளது.
0 comments :
Post a Comment