Saturday, May 22, 2010

பொன்சேகா வழக்கை விசாரிக்கும் நீதிபதி மீது சந்தேகம். இடமாற்றம் செய்ய முயற்சி

இராணுவ தடுப்புக்காவலில் என்ன இலங்கை முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரட்னவை இடம் மாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளதுடன் இம்முயற்சியை எதிர்த்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

சரணடைந்த புலிகளை கொல்லுமாறு பாதுகாப்புச் செயலர் உத்தரவிட்டதாக ஜெனரல் பொன்சேகா சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்ததாக கூறும் விடயம் தொடர்பாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை விசாரணை செய்யும் நீதிபதி சம்பா ஜானகி இந்த வழக்கை விசேடமான முறையில் நடத்தவேண்டும் என்றும், பொன்சேகாவுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் என்ற அடிப்படையில்,சரத் பொன்சேகா இராணுவத்தின் பாதுகாப்பில் அல்லாது நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்படவேண்டியவர் என்றும் ராஜரட்ன தெரிவித்திருந்தார்.

இதேவேளை பொன்சேகாவுடன் நெருங்கியவர்கள் என சொல்லப்பட்டு குற்றம் சுமத்தப்பட்ட பல இராணுவ அதிகாரிகளையும் அவர் விடுதலை செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவங்களை கருத்திற்கொண்டே அவரை இடமாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. நீதிபதி சம்பா ஜானகி ராஜரட்ன பொன்சேகாவுக்கு சாதகமானவர் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே அரசு இந்த முயற்சியை மேற்கொள்வதாக குற்றஞ்சுமத்தும் வழக்கறிஞர்கள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவை சந்தித்து, நீதிபதி சம்பா ஜானகி ராஜரட்னவை இடமாற்றம் செய்யக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்

நீதவான் சம்பா ஜானகி ராஜரட்ன, நீதிமன்றங்கள் மற்றும் வழக்கறிஞர்களின் மதிப்பை பெற்றவராவார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com