Wednesday, May 12, 2010

இலங்கையின் விசாரணை ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் இலங்கையின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த செய்திக்குறிப்பை குழுவின் செயலாளர் எஸ்.எம்.சமரக்கோன் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, அரசாங்க படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளனவா? என்பது குறித்து தமது குழு ஆராய்ந்துகொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க திணைக்களத்தினால் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், சுட்டிக்காட்டப்பட்டவர்கள், திணைக்களத்தின் அறிக்கையின் தன்மை மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமது குழு விசாரணைகளை நடத்திவருகிறது.

அத்துடன் யுத்தத்தில் சிறார்கள், பொதுமக்கள் மீதான பாதிப்பு, சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டமை, காணாமல் போனமை, மனிதாபிமான தன்மைகள் போன்ற ஐந்து விடயங்களின் அடிப்படையில் தமது குழு விசாரணைகளை நடத்திவருவதாக சமரக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 5 தலையங்கங்களின் கீழ் சுமார் 300 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது எனினும், அதற்கான உரிய காரணங்கள் அல்லது, தடயங்கள் சமர்பிக்கப்படவில்லை.

அத்துடன், அந்த அறிக்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமைக்கான நீதி முறையிலான முடிவுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை சமரக்கோனின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரை தமது குழு உயர் பாதுகாப்பு அதிகாரிகள் வைத்திய அதிகாரிகள் புதுகுடியிருப்பு மற்றும் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைகளின் அதிகாரிகள் அரசாங்க அதிகாரிகள் ஆகியோரிடம் பதிவுகளை பெற்றுள்ளது.

அத்துடன், யுத்த சூனியப்பிரதேசத்தில் இருந்த மக்களுக்கும், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள மக்களுக்கும் உரிய உணவுகள் மற்றும் மருந்துகள் கிடைக்கவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமது குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு குறிப்பிட்டுள்ளது.

தமது குழுவுக்கு விசாரணை சட்டத்தின் கீழான ஆணைக்குழுவின் அதிகாரங்கள் வழங்கப்படாமையால் தகவல்களை திரட்டுவதில் தாமதங்கள் ஏற்பட்டன. எனவே, தமது குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமது குழு சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டமை மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளவில்லை.

எனினும், தமது குழுவின் அறிக்கையும் அதன் காரணங்களும் பரிந்துரைகளும் எதிர்வரும் யூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என குழுவின் செயலாளர் சமரக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்த குழுவிற்கு டி.எஸ்.விஜேசிங்க தலைமை தாங்குகிறார். அவரின் கீழ் சி.ஆர்.டி சில்வா, நிஹால் ஜெயமான, மனோ இராமநாதன், ஜெசீமா இஸ்மாயில். அனுர மட்டேகொட ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com