புலிகளுக்கு எதிரான இரண்டாம் கட்டம் யுத்தம் ஆரம்பம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இரண்டாம் கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச ரீதியான பிரச்சாரங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
புலிகளின் பிரதிநிதிகள் நாடு கடந்த தமிழீழ இராச்சியமொன்றை அமைப்பதில் முனைப்பு காட்டி வருவதாக இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும், புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் தொடர்வதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ரீதியான பிரச்சார நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் புலிகளுக்கு எதிரான யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டுள்ள போதிலும், சர்வதேச ரீதியான யுத்தம் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனித்தனியான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்தவொரு உறுப்பினரும் இராணுவத்தினால் தடுத்து வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த உறுப்பினர்களுக்கு எதிராக காவல்துறையினர் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பிற்குள் ஊடுறுவிய அநேக விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மறைந்திருக்கும் உறுப்பினர்களினால் அச்சுறுத்தல்கள் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment