Tuesday, May 25, 2010

அரசு தமிழ் மக்களின் போராடும் குணத்தை தூண்டுகிறது. அர்ஜுனா ரணதுங்க

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்கும் வகையில் இலங்கை அரசு செயற்படக்கூடாது என ஜனநாயக தேசிய கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. இலங்கை அரசு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது வெறுமனே கட்டிடங்களையும், வீதிகளையும் புதுப்பித்து தமிழ் மக்களிடையே மீண்டும் போராடும் குணத்தை தூண்டுவதாகவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அத்துடன் வடக்கு கிழக்கு மக்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் அர்ஜூன ரணதுங்க, மக்களின் மனதை வென்று அவர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத் வேண்டும் எனவும் கூறினார்.

தாம் சிறுவயதில் ஒற்றுமையாக வாழ்ந்தது போன்று ஒற்றுமையாக வாழவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பென சுட்டிக்காட்டும் அவர், இலங்கை அரசோ வடக்கு கிழக்கு மக்களை தெற்கு மக்களிலிருந்து பிரித்து இந்த நாட்டில் மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை உருவாக்கும் வகையில் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார்.

ஆகவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் யுத்த வெற்றிகளைக் கொண்டாடுவதைத் தவிர்த்து வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க வலியுறுத்தினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com