Tuesday, May 11, 2010

ஈ.பி.டி.பி.யின் அறிவுறுத்தல்.

ஈ.பி.டி.பி. மீது களங்கம் ஏற்படுத்தும் தீய சக்திகளின் முயற்சிகள் கப்பம் கோருவோர் அச்சுறுத்துவோர் தொடர்பில் அவதானமாக இருக்கவும்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில தீய சக்திகள் திட்டமிட்ட வகையில் தொலைபேசியூடாக பொதுமக்களிடம் கப்பம் கோரியும் பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்தும் வருவதாக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எமது மக்களுக்கான நேர்வழியைக் காட்டி எமது மக்களை கடந்தகால துன்ப துயரங்களில் இருந்து மீட்டெடுக்கும் எமது கட்சியின் மக்கள் நலன்சார்ந்த பணிகளைப் பொறுத்துக் கொள்ளாத எமது மக்களைத் தொடர்ந்தும் துன்ப துயரங்களில் ஆழ்த்தி அதன்மூலம் தங்களது குறுகிய சுயலாப அரசியலை மேற்கொள்ள விரும்பும் சில தீயசக்திகள் குழப்பிய குட்டைக்குள் மீன்பிடிக்கும் நோக்கில் எமது கட்சியின் மீது பல்வேறு வழிகளிலும் சேறு பூசும் குறுகிய எண்ணத்துடனும் அதேநேரம் ஒரு கல்லில் இரு மாங்காய் என்ற ரீதியில் பணம் பறித்துக் கொள்ளும் நோக்கத்துடனும் திட்டமிட்டு செயற்பட்டு வருவதை இவ்வாறான செயற்பாடுகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் யாழ் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அமைச்சர் அவர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

எச்சந்தர்ப்பத்திலும் எந்த நிலையிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் எந்தவொரு நபரிடம் இருந்தும் எவ்வித நிதியும் அறவிடுவதில்லை என்பது எமது மக்கள் அறிந்த விடயமாகும்.

இந்த நிலையில் எமது கட்சியின் பெயரைப் பயன்படுத்தி இவ்வாறான சமுக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் வதந்திகளைப் பரப்புவர்கள் தொடர்பில் எமது மக்கள் விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதுடன் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 021 2229824 0112503467 0777781891 எனும் தொலைப்பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு எமக்கு உடனடியாக அறிவிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

ஊடகச் செயலாளர்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - ஈபிடிபி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com