இந்தியா: ரயில் விபத்தில் 65 பேர் பலி
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் குறைந்தபட்சம் 65 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள் ரயில் பாதையை சேதப்படுத்தியதால்தான் இந்த விபத்து நடந்திருப்பதாக மாநில காவல்துறையினர் கூறுகிறார்கள்.
கொல்கத்தாவில் இருந்து மும்பை சென்றுகொண்டிருந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் ஸர்திகா ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டது.
ரயில் பாதையில் தண்டவாளங்களை இணைக்கப் பயன்படுத்தப்படும் பிஷ்பிளேட் எனப்படும் இணைப்புத் துண்டுகள் அகற்றப்பட்டிருந்ததால், மிக வேகமாகச் சென்றுகொண்டிருந்த ரயில் அடுத்துள்ள ரயில் பாதையில் கவிழ்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் இரண்டாவது ரயில் பாதையில் வந்துகொண்டிருந்த சரக்கு ரயில், கவிழந்து கிடந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளின் மீது படுவேகமாக மோதியது.
அதில், எக்ஸ்பிரஸ் ரயிலின் குறைந்தபட்சம் நான்கு பெட்டிகள் மோசமாக சேதமடைந்திருப்பதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள். 65 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 200 பேர் காயடமைந்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அங்கு மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் பலர் மிகமோசமாக சேதமடைந்த ரயில் பெட்டிகளுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விபத்துக்கு மாவோயிஸ்டுகளின் சதிவேலைதான் காரணம் என்று மேற்கு வங்க மாநில காவல்துறைத் தலைவர் புபிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்துக்கு மாவோயிஸ்டுகள் ஆதரவு அமைப்பான பிசிபிஏ எனப்படும் போலீஸ் அராஜகத்தக்கு எதிரான மக்கள் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் பிசிபிஏ அமைப்பினர், தாங்கள்தான் பொறுப்பு என்று எழுதி இரண்டு போஸ்டர்களை விட்டுச் சென்றிருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
விபத்து நடந்த மேற்கு மிதினாபூர் மாவட்டம் மாவோயிஸ்டுள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசு துவங்கியுள்ள கிரீன்ஹன்ட் நடவடிக்கையைக் கண்டித்து, மாவோயிஸ்டுகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஒரு வாரம் கறுப்புவாரம் அனுஷ்டிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
Thanks BBC
Thanks BBC.
0 comments :
Post a Comment