Thursday, May 20, 2010

சனல் 4 வெளியிட்ட ஒளிப்பதிவுகள் ஆதாமற்றவை என்கிறது இலங்கை அரசு.

சேனல் 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள போர்க் குற்றச்சாற்றுக்கான ஆதாரங்களை பிரிட்டனுக்கான இலங்கைத் தூதரகம் முற்றாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாக அது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை அரசு மற்றும் அதன் படையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பிரிட்டனுக்கான இலங்கைத் தூதரகம் முழுமையாக நிராகரிக்கின்றது.

விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியிருந்த பொதுமக்களை விடுவிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையிலேயே படையினர் ஈடுபட்டனர் என்பதை சான்றுகளுடன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளோம். இவ்வாறன மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்கும்போது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகள் பின்பற்றப்பட்டன. பொதுமக்களுக்கு சிறிதளவு உயிரிழப்புகள் கூட ஏற்படக்கூடாது என இராணுவத்துக்கு கண்டிப்பான உத்தரவு வழங்கப்பட்டிருந்தது என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லண்டனில் உள்ள இலங்கைத் துணைத்தூதுவர் ஹம்சா, பி.பி.சி.தமிழோசைக்கு இது குறித்து அளித்த பேட்டியில்,'சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர்தான் இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்திடம் கருத்துக் கேட்டது. இந்த ஒளிநாடாவை தங்களிடம் முன்னதாகவே பகிர்ந்துகொண்டிருந்தால் அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கருத்துக் கூறியிருக்கமுடியும். ஆனால், அப்படியான அவகாசம் தங்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் போர்க்காலத்தின் இறுதி நாட்களில் விடுதலைப் புலிகளால் பொதுமக்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டனர். அவர்களிடமிருந்து மக்களை விடுவிக்கவே அரசுப்படைகள் மனித நேய நடவடிக்கையை மேற்கொண்டது' என்று தெரிவித்துள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி பொதுமக்களையும், சரணடைய வந்த விடுதலைப் புலிகளையும் மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து சுட்டுக்கொன்றதாக, இலங்கை இராணுவ வீரர் ஒருவர் அளித்துள்ள வாக்குமூலத்தை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக நேற்று முன்தினம் சனல் 4 வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆதாரங்களாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளதுடன் இராணுவ நடவடிக்கைகளின்போது முன்னணியில் நின்ற இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஒளிப்பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. சனல் 4 வினால் வெளியிடப்பட்ட வீடியோ வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டபோது களமுனையில் நின்ற இலங்கை படைச்சிப்பாய் ஒருவரால் எடுக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோ தொடர்பாக, மேலும் ஆதாரங்களை அளிக்கும் வகையில், அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரது பேட்டியையும், மற்றும் போர் முனையில் களத்திலிருந்த இராணுவ தளபதிகளில் ஒருவரது ஒப்புதல் வாக்குமூல பேட்டியையும் சேனல் - 4 தொலைக்காட்சி மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.

இது தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சியின் வெளியுறவு செய்தியாளர் ஜோனாதன் மில்லருக்கு அளித்த பேட்டியில் அவர்கள் கூறியிருப்பதாவது: 'எமது தளபதி எல்லோரையும் படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆகவே, நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம். விடுதலைப்புலிகளின் முக்கியமானவர்கள் எவரையும் வைத்துப் பாதுகாக்கும் திட்டம் எதுவும் இல்லாததால், அவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்கவேண்டும்' என்று இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர் தங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் என செய்தி வெளியிட்டுள்ள சேனல் - 4 தொலைக்காட்சி, அந்த பேட்டியைப் பதிவு செய்த வீடியோ காட்சியையும் ஒளிபரப்பி உள்ளது.

வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது என்று கேட்டபோது, குறிப்பிட்ட அந்த இலங்கை இராணுவ சிப்பாய் பதிலளிக்கையில், 'முதலில் நாங்கள் அவர்களை கைது செய்தோம். பின்னர் சித்ரவதை செய்தோம். பின்னர் கொலை செய்தோம். போரின் இறுதி நாட்களில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம். பெருந்தொகையான சடலங்கள் அங்கு காணப்பட்டன. அவ்வாறு கொலை செய்யுமாறு எமது தளபதி எங்களுக்கு உத்தரவிட்டார்' - என்று கூறினார்.

சேனல் - 4 தொலைக்காட்சியினால் தொடர்பு கொள்ளப்பட்ட குறிப்பிட்ட இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதி ஒருவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், 'விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 13 வயது மகன் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு அவரது தந்தையார் -புலிகள் தலைவர் பிரபாகரன் - எங்கு உள்ளார் என்று விசாரணை செய்யப்பட்டு பின்னர் சுடப்பட்டார்' என்று கூறியுள்ளார்.

அதேநேரம் இந்தப் புதிய வீடியோ தகவல் குறித்து சேனல் 4 தொலைக்காட்சியின் வெளியுறவு செய்தியாளர் ஜோனதன் மில்லர் கூறுகையில், புரட்சிகளையும், மக்கள் எழுச்சியையும் அடக்க இனிமேல் உலக நாடுகள் இலங்கையை முன்னுதராணமாக எடுத்துக் கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஈவு இரக்கமின்றி சரணடைந்தவர்களையும் கொடூரமாகக் கொலை செய்துள்ள இலங்கைப் படையினரின் செயல் சர்வதேச மனித உரிமைச் சட்டத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் வைக்கப்பட்ட வேட்டு ஆகும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com