இன்று மே 21 உலக பண்பாட்டுத் தினம் (World Culture Day - May 21) - புன்னியாமீன்
பண்பாடென்பது மக்கள் குழுவொன்று தமது சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிப் படிகளினூடாக உருவாக்கிக் கொண்ட பெளதிகப் பொருட்கள், ஆன்மீகக் கருத்துக்கள், மத அனுஸ்டானங்கள், சமூக விழுமியங்கள் என்பவற்றினை ஒன்றிணைத்த ஒரு பல்கூட்டுத் தொகுதி எனலாம். நம்பிக்கைப் பெறுமானம் கலைகள் விஞ்ஞானம் கல்வி உற்பத்தி முறைகளும் உறவுகளும் தொழினுட்ப வளர்ச்சி முறை என்பவற்றை உள்ளடக்கியதாக ஒரு இனத்தின் பண்பாடு இனங்காட்டப்படுகின்றது.
உலக பண்பாட்டு வளர்ச்சிக்கான துறைகளில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் கூடிய அக்கறைகாட்டி வருகின்றது. உலக நாடுகளின் வளர்ச்சிக்கு பொருளாதாரமும் பண்பாடும் மூலம் என்பர். மானிடவர்க்கத்தின் மேம்பாட்டுக்கான ஆணிவேரான பண்பாடு – கலாசாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இன்று உலகளாவிய ரீதியில் உலக பண்பாட்டுத்தினம் சர்வதேச ரீதியாக ஒவ்வோர் ஆண்டும் மே 21ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது
யுனெஸ்கோவின் பல்வேறு வகைப்பட்ட கலாசாரம் பற்றிய சர்வதேச பிரகடனம் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை விடுமுறை தினமாகவும் பிரகடனப்படுத்தியுள்ள அதேநேரத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் 57/249(3) ம் பிரேரணை இத்தினத்தின் முக்கியத்துவத்தை சர்வதேச மட்டத்தில் உணர்த்தியுள்ளது. 2001.09.11ஆம் திகதி அமெரிக்காவில் தீவிரவாத தாக்கத்தின் பின்னர் இத்தினத்தின் முக்கியத்துவம் பலமாக உணரப்பட்டுள்ளது.
ஒரு சமுதாய உறுப்பினன் என்ற முறையில் மனிதன் ஈட்டுகிற மரபு வழியாலும் அனுபவத்தாலும் கற்றுக் கொள்கிற பழக்கவழக்கங்கள், திறன்கள், மக்கள் குழு உருவாக்குகின்ற உலகாயதப் பொருட்கள் அனைத்தையும் தழுவியதுதான் பண்பாடு. இன்று அனைத்துலக சமுதாயம் முன்னேற்றம் எனக் கருதுவது பொருளாதாரக் கூறுகள், சமூகவியல் கூறுகள், பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் பிணைந்த முன்னேற்றத்தையே. ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மக்கட் கூட்டத்துக்கும் அவரவர் தம் பண்பாட்டைப் பொறுத்தே சிறப்பு அமைகிறது.
எனவே, மனிதனின் தனித்துவப் பண்புகள் பேணப்பட வேண்டும். சமுதாய முன்னேற்றத்தில் பண்பாடு உறுதியான இடத்தைப் பெற்றுள்ளது. கலைப் படைப்புகள் மட்டுமன்றி அறிவுத்திறன். உண்ணும் உணவு, உடை, உறையுள், குடும்ப உறவுகள், சமுதாய உறவு போற்றும் நெறிமுறைகள், கல்வி முறை, சிந்தனை, எதிர்கால எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், புதியவர்களுடன் பழகுதல் போன்ற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களிலும் பண்பாடு வெளிப்படுகின்றது. ஓர் இனத்தின் உயர்வு அதன் பண்பாட்டுப் பாரம்பரியங்களிலேயே தங்கியுள்ளது. இதனால் இனங்களின் தனித்துவப் பண்புகள் பேணப்பட வேண்டும் என்ற கருத்துகள் வலுப்பெற்றன. பல்லின மக்கள் வாழும் நாட்டில் அவரவர் தம் பண்பாடுகள் பேண இடமளிக்கப்பட வேண்டும்.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் பண்பாடுகளின் தனித்துவம் பாதிக்கப்படுவதாகவும் குறைகூறப்படுகின்றது. அதாவது புதிய உலக தொடர்புகள், தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சி, செய்திப் பரிமாற்றம் என்பன உலக பண்பாடுகளை அவற்றின் தனித்துவத்தைக் கடந்து ஒன்றோடொன்று நெருங்க வைத்துள்ளன. மக்களின் சுவை, சிந்தனை, கருத்துக்கள், வாழ்க்கை முறை, போக்கு, உடை, உணவு, இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவற்றில் பல்லின – பண்பாடுகளைக் கொண்ட மக்களிடையே பொதுப் பண்பாட்டம்சங்களும், புரிந்துணர்வும் ஏற்பட்டு வருகின்றன. பொதுவாக தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி பண்பாடுகளின் தனித்துவத்தைச் சிதைப்பாகக் குறை கூறப்பட்டினும் உண்மையில் அப்படி மரபு சிதையாது என்பதற்கு ஜப்பான் உதாரணமாக விளங்குகின்றது. அதேபோல சீனாவில் அண்மைக்கால துரித வளர்ச்சிகளும் எடுத்துக் காட்டுகின்றன.
இனவொதுக்கல் கொள்கைகளை மேற்கு நாட்டவர் ஆதரிக்கின்றனர்;. தென்ஆபிரிக்க மானிடவியல் அறிஞர் கிளக்மேன் கூற்றுப்படி ‘இன ஒதுக்கல் கொள்கையை ஆதரிக்கும் மேற்கு நாட்டவர்கள் தாம் ஆபிரிக்காவின் உள்நாட்டு இனங்களின் பண்பாடுகள் அந்த மக்களுக்குப் பொருத்தமானவை என்றும், அவற்றைப் பேண அம்மக்களுக்கு உரிமை உண்டு’ என்றும் ஆதரித்துள்ளார்கள்.
ஆனால், மரபு பிறழாமல் அம்மக்களுடைய பண்பாடுகள், வாழ்க்கை வசதிகளில் நவீனத்துவம் பின்பற்றப்பட வேண்டும் எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. பட்டினி வறுமைக் கோடு பிணி எழுத்தறிவின்மை சிசு மரணம் மகளிர் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் அரசியல் அறிவின்மை பொருளாதார சமச்சீர் இன்மை போன்றவற்றை அகற்றி மேன்மையை உருவாக்க நவீனத்துவம் கைக்கொள்ளப்படவேண்டும் எனக் கருதப்படுகிறது.
மொழியானது சகல இனங்களினதும் பண்பாட்டுக் காவியாகும். மக்கள் உணர்வுகள், நம்பிக்கைகள், பண்பாட்டு மரபுகள் என்பன அவர் தம் தாய் மொழியிலேயே பொதிந்துள்ளன. தேசியப்பண்பாட்டின் உயிர் நாடியாக மட்டுமன்றி, பண்பாட்டை வளர்க்கக்கூடிய சாதனமாகவும் மொழி விளங்குகின்றது. தாய்மொழியானது ஒரு இனத்தின் பண்பாட்டில் முக்கியம் பெறுகின்றது. ஒரு நாட்டில் சிறுபான்மையினராக உள்ள மக்களின் மொழியை ஒதுக்கிவிட அல்லது நசுக்கிட பெரும்பான்மையின மக்கள் நினைப்பது தவறாகும். அது துரோகமும் ஆகும். நம்பிக்கைகள் சிந்தனைகள் உணர்வுகள் மரபுகள் போன்றன இனங்களின் தாய்மொழியிலேயே சங்கமிக்கின்றன. பண்பாட்டை வளர்க்கக் கூடியதாகவும் தேசிய பண்பாட்டின் ஊற்று மூலமாகவும் மொழி அமைகின்றது. சிறுபான்மை இனங்களின் மொழியும் பண்பாடும் பாதுகாக்கப்படுவதன் மூலமே நாட்டின் பண்பாட்டுப் பெருமை மேலோங்கும். பொதுமொழி அல்லது பெரும்பான்மையின மொழியை பலவந்தமாக திணிக்கக்கூடாது. அது தாமாகவே ஈர்க்கப்பட வேண்டும். பல்வேறு சிறுபான்மை இன, மொழிகள் இருந்தும் ரஸ்ய மக்கள் ரஸ்ய மொழியைப் பொதுமொழியாக ஏற்றனர். ரஸ்ய மொழியின் பண்பாட்டம்சங்கள் மக்களை தாமாகவே ஈர்த்துக் கொண்டது.
பன்மைப் பண்பாடுகளைக் கொண்ட நாடுகளில் இனப் பிரச்சினை, மொழிப்பிரச்சினை என்பன ஏற்பட்டுள்ளன. இதற்குப் பிரதான காரணம் பெரும்பான்மையின மக்களின் மனப்பாங்கு ஆகும். பேரினவாத சிந்தனைகளே இந்நாடுகளில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன. இலங்கையில் இத்தகைய பிரச்சினைகளுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு யாப்பில் சிறுபான்மை, இனங்கள், மொழிகளுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
இனங்களின் தனித்துவப் பண்பாடுகளை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி செய்திப் பரிமாற்றங்களின் துரிதம் என்பன தாக்கமடையச் செய்துள்ளன எனச் சிலர் கூறினாலும் உலகத்தினை ஒரு கிராமமாக்கி சர்வதேச ரீதியிலான பண்பாட்டுக்கோலங்கள் சகலரும் அறிந்தொழுக இவை பூரணமாக உதவி வருகின்றன என்பதை மறுதலிப்போர் இல்லை எனலாம். உலகப் பண்பாடுகளுடன் உலக மக்கள் ஒன்றித்திளைத்திட தகவல் தொடர்பு மற்றும் செய்திப் பரிமாற்றங்கள் பேருதவி புரிந்து வருகின்றன. மூன்றாம் உலக நாடுகளில் சமயக் குழுக்கள், இனக்குழுக்கள், மொழிக்குழுக்கள் என்பன பரஸ்பர உறவைப் பேணுவதோடு பற்கூட்டு அம்சங்களான கலை இலக்கியம் பண்பாடு மொழி போன்றவற்றில் ஒரு தொடர்பினை உருவாக்கி அதன் மூலம் தேசிய ஒருங்கிணைப்பும் பொதுப்பண்பாடும் மலர வித்திடலாம்.
0 comments :
Post a Comment