அவுஸ்திரேலியா சர்வதேச சட்டதிட்டங்களை மீறுகின்றது. Human Rights Watch
அரசியல் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பான விடயத்தில் ஆஸ்ட்ரேலியாவின் நிலைப்பாடு சர்வதேசச் சட்டங்களை மீறுவதாக உள்ளது என சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் (Human Rights Watch) குற்றம்சாற்றியுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியநாடுகளைச் சேர்ந்த அரசியல் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பாக ஆஸ்ட்ரேலிய அரசாங்கம் எடுத்திருக்கும் பாரபட்சமான கொள்கையானது சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாக உள்ளது.
இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களது அரசியல் தஞ்சக் கோரிக்கையினை ஆஸ்ட்ரேலிய அரசு ஏற்கவேண்டும். இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகலிடம் கோருபவர்களது வேண்டுகைகளை நிராகரிப்பது என்ற ஆஸ்ட்ரேலிய அரசாங்கத்தின் முடிவினை, அந்த நாட்டு அரசாங்கம் திரும்பப்பெறவேண்டும் என ஆஸ்ட்ரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் இவானுக்கு எழுதிய கடிதத்தில் மனித உரிமைக் கண்காணிப்பகம் இவ்வாறு கூறியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்தவர்களது அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது 3 மாதங்களுக்கும், ஆப்கான் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது 6 மாதங்களுக்கும் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக கடந்த வாரம் ஆஸ்ட்ரேலிய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
படகுகளின் மூலம் அவுஸ்ரேலியாவிற்குள் வரும் புகலிடம் கோருபவர்களின் தொகை என்றுமில்லாத வகையில் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்தே ஆஸட்ரேலிய அரசு இந்த முடிவினை எடுத்திருந்தது.
இலங்கையில் மீள்குடியேற்றம் தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் அதேநேரம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களினது வசதிகளும் மேம்படுத்தப்பட்டிருக்கலாம்.
ஆனால், இன ரீதியான ஒடுக்குமுறை இலங்கையில் இன்னமும் இருப்பதையும், இவர்கள் அரசியல் தஞ்சக் கோரிக்கையினை முன்வைப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன என்பதையும் ஆஸ்ட்ரேலிய அரசாங்கம் விளங்கிக்கொள்வதற்குத் தவறிவிட்டது என மனித உரிமைக் கண்காணிப்பகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது.
0 comments :
Post a Comment