வாக்காளர்களுக்கு நன்றி EPRLF
எமதன்புக்குரிய வாக்காளப் பெருமக்களே! நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சியின் சின்னமான மெழுகுதிரிக்கு வாக்களித்து எம்மை ஊக்கப்படுத்தியுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். அத்துடன் எமது கட்சிக்காக இத்தேர்தலில் கடுமையாக உழைத்த எமது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அனுதாபிகளுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தத் தேர்தலில் நாம் பல கட்சிகளுடன் இணைந்து ஓரணியாக நின்று போட்டியிடவே விரும்பினோம். ஆனால் அதற்கான ஒத்துழைப்பைத் தருவதில் பல கட்சிகள் தயக்கம் காட்டின. ஒற்றுமைக்கான எமது முயற்சிகளையும் புறக்கணித்தன. இருப்பினும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் எமது கட்சியும் ஒற்றுமையாகச் செயல்படுவது என தீர்மானித்தோம். அதனடிப்படையில் எமது கட்சியின் பெயரில் நாம் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டோம். இதில் மூன்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரும் இணைந்து கொண்டனர். அதே நேரம் வன்னியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எமது தோழரொருவரையும் இணைத்துக்கொண்டு போட்டியிட்டது. மேலும் எமது கட்சி திருகோணமலையிலும் போட்டியிட்டது. இந்த மூன்று மாவட்டங்களிலும் மக்கள் எம்மீது காட்டிய அக்கறையும் ஈடுபாடும் எம்மை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்னும் சிறிது காலங்களில் மக்களின் ஒரு சக்திமிக்க இயக்கமாகப் பரிணமிக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பிரமுகர்கள் கூட்டுக் கட்சியல்ல மாறாக மக்கள் புரட்சிகர இயக்கம். வடக்கு கிழக்கு மாகாண ஆட்சிக்கு உயர்ந்தபட்ச அதிகாரப் பகிர்வுக்காகவும், மக்களின் ஜனநாயக சுதந்திரங்களுக்காகவும், சமூக நீதிக்காகவும், பொருளாதார சுரண்டல்களுக்கு எதிராகவும், சாதிப்பாகுபாடுகளற்ற சமத்துவத்திற்காகவும் போராடும் இயக்கத்தை வழிநடத்தும் அரசியல் தலைமையே எமது கட்சி.
எமது கட்சி வெற்றிகளைக் கண்டு பெருமிதங் கொண்டதுமில்லை. தோல்விகளைக் கண்டு துவண்டதுமில்லை. கடந்த முப்பது ஆண்டுகளில் எமது கட்சி பல ஆயிரம் தோழர்களையும், மிகச் சிறந்த தலைவர்களையும் தமிழ்மக்களின் சுதந்திரத்திற்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் தியாகம் செய்திருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக எமது சொந்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் அரசியல் உறவுகொள்ள முடியாத அளவுக்கு பெரும் இக்கட்டான சூழல்களைக் கடந்து வந்திருக்கின்றது.
இப்போது ஏற்பட்டிருக்கும் பயங்கரவாதம் மற்றும் யுத்த ஆபத்துக்கள் அற்ற சூழலின் காரணமாக எமது கட்சியினர் மக்கள் மத்தியில் சுதந்திரமாகச் சென்று கட்சியின் கொள்கைளையும் திட்டங்களையும் விளக்குவதற்கான நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. இன்னமும் மக்கள் மத்தியில் இருந்து முற்றாக பயப்படும் போக்குகள் நீங்கவில்லை. மக்கள் மத்தியில் தமது எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனங்களும் விரக்திகளும் பரவலாகக் காணப்படுகின்றன. அதிகாரப் பகிர்வு தொடர்பாக மக்கள் மத்தியில் அரசாங்கம் பற்றிய சந்தேகங்கள் உள்ளன.
மக்கள் மத்தியில் நிலவும் எதிர்மறையான உணர்வுகளையும் எண்ணப்பாடுகளையும் நாம் எதிர்வரும் காலங்களில் நீக்கவேண்டும். எமது கட்சி மக்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை வளர்ப்பதிலும் எதிர்கால முன்னேற்றமான போக்குகளை நோக்கி மக்களை அணிதிரட்டுவதிலும், அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான ஓர் இயக்கத்தை நடாத்துவதிலும் முன்னணி வகிக்கும். மக்கள் அமைப்புக்களை பரவலாகக் கட்டியெழுப்பி பரந்துபட்ட மக்கள் கட்சியாக எழுச்சிபெறும் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தேர்தல் என்னும் குறுகிய நோக்கம் கொண்ட கட்சியல்ல, மாறாக இது ஒரு சமூக அரசியல் இயக்கம். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியோடு இணைந்து ஒரு புரட்சிகர இலட்சிய இயக்கத்தை வலுவாக முன்னெடுக்க முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
சுதந்திரம், ஜனநாயகம், சகோதரத்துவம், சமூகப் பொருளாதார முன்னேற்றம் என்பவையே எமது இலட்சியங்கள். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான விடுதலையே எமது குறிக்கோள்.
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
0 comments :
Post a Comment