முஷாரப்பால் பெனாசிரை காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் செய்யத் தவறி விட்டார்:ஐ.நா
பெனாசிர் பூட்டோவை முஷாரப் நினைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். அந்தப் படுகொலையை தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் அதைச் செய்ய அவர் தவறி விட்டார் என்று பெனாசிர் பூட்டோ மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஐ.நா. குழு தெரிவித்துள்ளது.
சிலி நாட்டுத் தூதர் ஹெரால்டோ முனோஸ் தலைமையிலான 3 பேர் கொண்ட ஐ.நா. குழு பெனாசிர் பூட்டோ மரணம் குறித்து விசாரித்தது. இந்தக் குழு தனது அறிக்கையை தற்போது சமர்ப்பித்துள்ளது. அதில் முஷாரப் நினைத்திருந்தால் இந்தப் படுகொலையைத் தடுத்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்...
பாகிஸ்தானுக்குத் திரும்பிய பிறகு பெனாசிர் பூட்டோவை காக்கத் தவறியது முஷாரப் அரசு. அதேபோல அவரது மரணத்திற்குப் பின்னரும், அதுகுறித்து முறையாக விசாரிக்கவும் அது தவறி விட்டது.
பெனாசிருக்கு ஏராளமான கொலை மிரட்டல்கள் இருந்தன. அதுகுறித்து அரசுக்கும் தெரியும். ஆனாலும், அவரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை முஷாரப் அரசு எடுக்கவில்லை.
பெனாசிரின் பாதுகாப்பு குறித்து முஷாரப் அரசில் இருந்த அதிகாரிகள் கவலைப்படவே இல்லை. கொலைக்குப் பின்னரும் கூட குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அக்கறை காட்டவே இல்லை.
பெனாசிர் பூட்டோவின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை பஞ்சாப் மாகாண அரசும், ராவல்பிண்டி மாவட்ட போலீஸாரும்தான் அன்றைய தினம் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் மிகப் பெரிய அளவிலான கூட்டம் கூடும் எனத் தெரிந்தும் பெனாசிரின் பாதுகாப்பை பலப்படுத்த அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு பெனாசிர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து 2009ம் ஆண்டு இதுகுறித்து விசாரிக்க ஐ.நா. சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தரப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் இக்குழுவுக்கு மேலும் 3 மாத கால அவகாசம் தரப்பட்டிருந்த்து.
தற்போது விசாரணையை முடித்து விட்ட குழு தனது அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனிடம் வழங்கியுள்ளது.
0 comments :
Post a Comment