நாவலப்பிட்டியில் அதிக மக்கள் வாக்களிப்பு: திருமலையில் அசம்பாவிதம் எதுவுமில்லை.
விசேட அதிரடிப்படையின் தளபதி நாவலப்பிட்டியில்.
நாவலப்பிட்டி தேர்தல் தொகுதி மற்றும் திருமலை கும்புறுப்பிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற மீள் வாக்களிப்பு குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் எதுவுமின்றி இதுவரை இடம்பெற்றுள்ளது. நாவலப்பிட்டி பேர்க்கெபெலவத்த எனுமிடத்தில் அமைந்திருந்த வாக்குச்சாவடிக்குச் சென்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் முகவர் விரட்டியடிக்கப்பட்டிருந்த போதிலும் பொலிஸார் விடயத்தில் தலையிட்டு நிலைமையை சீராக்கியுள்ளனர்.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெறக்கூடிய அசம்பாவிதங்களை முறியடிப்பதற்காக சுமார் ஒருவார காலமாக விசேட அதிரடிப்படையினர் 500 பேர் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலைமைகளை நேரடியாக கண்காணிப்பதற்காக விசேட அதிரடிப்படையின் தளபதி டிஐஜி சரத் சந்திர அவர்கள் நேற்றிலிருந்து அப்பிரதேசத்தில் தங்கியுள்ளார்.
மீள் வாக்களிப்பு மிகவும் சுமுகமாக இடம்பெறுவதாக இலங்கைநெற் இற்கு தெரிவித்த அவர், தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
அதேநேரம் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் கும்புறுப்பிட்டி பிரதேசத்தில் மீள் தேர்தல் இடம்பெற்றுகின்றது. 977 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்காக இடம்பெறும் இத்தேர்தலில் நண்பகல் வரை 370 பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு குழுவொன்று தெரிவித்துள்ளது. இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை எனவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தல் வரலாற்றில் திருமலை மாவட்டத்தில் தேர்தல் மோசடிகள் காரணமாக மீள் தேர்தல் நடாத்தப்பட்டமை இதுவே முதற்தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment