மன்மோகன் சிங் - ஒபாமா இன்று சந்திப்பு.
அணு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்துப் பேசுகிறார். ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வாஷிங்டனில் அணு பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டெல்லியிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் அமெரிக்காவில் நான்கு நாள் தங்கியிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங், அதிபர் ஒபாமாவை இன்று இரவு தனியாக சந்தித்து பேச இருக்கிறார். வெள்ளை மாளிகையில், கடந்த நவம்பர் மாதம் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. அதன்பிறகு, அதிபர் ஒபாமாவை மன்மோகன்சிங் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் மைக் ஹம்மர் கூறுகையில், "இந்தியா-அமெரிக்க நாடுகளுக்கு இடையே அணு பாதுகாப்பு, அணு ஆயுத பரவல் தடை போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஜுன் 3 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதற்கான யுக்திகளை வகுப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்துவார்கள். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் சென்று வந்தது குறித்தும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அதிபர் ஒபாமா பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக'' தெரிவித்தார்.
இந்தியாவில் அணுசக்தி பாதுகாப்பு மையம் ஏற்படுத்த வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன்சிங் மாநாட்டில் வலியுறுத்த இருக்கிறார். பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டு இருப்பது குறித்தும் அவற்றின் பாதுகாப்பு தன்மை குறித்தும் அவர் பிரச்னை எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, மும்பையில் நடந்த நேரடி தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹெட்லியை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கப்பட உள்ளது. இந்த தகவலை, பிரதமருடன் அமெரிக்கா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்சை சந்தித்து பேசும்போது, இந்த கோரிக்கையை வலியுறுத்துவோம். பேச்சுவார்த்தையில் இடம்பெறும் விஷயங்களில் இதுவும் முக்கியமான அம்சமாக இருக்கும்'' என்றார்.
0 comments :
Post a Comment