Wednesday, April 7, 2010

இலங்கையின் வளர்ச்சிக்காய் நன்னயம் செய்து விடல்; இதுவும் ஒரு சமுதாய மாற்றமே!

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்ததது. இலங்கையில் போர் நின்றுவிட்டது. சலவைக்காரன் தோட்டத்தில் உள்ள முயலைப் போல, நமது மக்கள் வெடி கேட்ட போதெல்லாம் கதிகலங்கி நின்றார்கள். போர் முடிவடைவதற்கு யார் காரணம்? என்று விவாதம் பண்ணுவதை விடப், போர் நின்று விட்டதே என்பதை மட்டும் நினைவில் கொண்டு நிம்மதியாகத் தாமுண்டு, தமது வேலையுண்டு என்று மக்கள் நிம்மதியாக சுவாசிப்பதைப் பார்க்கும் போது பகவத் கீதையில் வரும் மேலே கூறிய வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.

போரினால் காவுவாங்கப்பட்ட, உயிர்கள் அனைவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோமாக, இறந்த மக்களால் நேரடியாகப் பாதிக்க பட்ட அவர்களின் உற்றார், உறவினருக்கும் எமது இரங்கலைத் தெரிவிக்கிறோம், மேலும் அங்கவீனராக்கப்பட்ட மூத்த இழைய சமூகத்தினருக்கும் எமது மனமார்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எது நடக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது. தற்போது மக்கள் தங்கள் தேவைகள் எதுவோ அதனை அவர்கள் பிறரது உதவியின்றி அவர்களாலேயே பார்க்க முடிகிறது, பயணங்கள் செய்ய வேண்டுமோ, தடை ஏதுவும் இல்லாமல் ஓர் இடத்திலிருந்து இன்னுமோர் இடத்திற்குப் போக்கு வரத்துச் செய்ய முடிகிறது. நாடு பூராகவும் சுதந்திரமாகச் செல்ல முடிகிறது. பிற நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டுமோ? தலை நகரங்களை அடையத் தடை ஏதுவும் இல்லை, போரின் பின் நாடு சீராக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது.

குழப்பமே இல்லாநாடு கிடையாது, அதே போல எம் நாட்டிலும் சிறு, சிறு குழப்பங்கள் தோன்றி மறைகிறது, குழப்பங்களை முடிந்தவரை சீராக்க அரசு முயலுவதையும் அவதானிக்க முடிகிறது. ஒரு தேர்தல் முடிவடைந்து, மறு தேர்தல் ஆரம்பிக்கிறது. முப்பது வருடப் போரால் அலைக்கழிப்பு, ஆதிக்கம் இவையாவும் மக்களின் மனத்தை உழலச் செய்து விட்டிருந்தது, மெல்ல, மெல்லத் தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்ள முயலுகிறார்கள், மனப் பிராந்தியில் இருந்தவர்கள், அதிர்சியில் இருந்து விடுபடவும் எத்தனிக்கிறார்கள், சுயமான அறிவைப் பகுத்தறிவான பாதையில் செலுத்த முயலுகிறார்கள். இதுவும் முன்னேற்றத்தின் அறிகுறி, மெல்லெனப் பாயும் நீர் போல் தடைகளை ஊடுருவிப் பாய
ஆயத்தமாகிறார்கள். நீண் வருடங்களின் பின் ஜனநாயகத்தைச் சந்திக்கும் போது நம்ப முடியாமலும் இருக்கிறார்கள். இருந்தும் எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்று உணருகிறார்கள்.

எது நடக்க இருக்கிறதோ, அது நன்றாகவே நடக்கும். நம்பிக்கைதான் வாழ்க்கை, தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் அது சிலைதான். நம்பிக்கையை, நிம்மதியை, அமைதியை எல்லாம் தொலைத்து விட்டோமே என்று எண்ணிய நேரத்தில், இன்று மீண்டும் அவை அனைத்தையும் சந்தித்ததால் மக்கள் நம்பிக்கையுடன் நடமாட முடியுமென்றால். அது ந்ன்றாகவே நடக்கும் என்றால் மிகையாகுமா? வரலாறுகள்
திரிபுபடுத்தப்பட்டுப், பாமராய் இருந்த இளைஞர் மத்தியில், தற்போது சிந்திக்கும், செயற்படும், பேசும் சுதந்திரங்கள் ஆகியவை அறியப்படும் வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப் படுகிறது, சுதந்திரத்தில் புதைக்கப் பட்ட தந்திரத்தால் மட்டும் வாழப் பழக்கப் பட்டிருந்தவர்கள், இனியும் தந்திரத்தால் மயங்காது, சுத்தமான சுதந்திரச் சுவாசக் காற்றை ரசித்து, ரசித்து, மெல்ல, மெல்லச் சுவாசித்துக் கொண்டிருப்பதை உணரமுடிகிறது. இந்நேரத்தில் மீண்டும் விசக்காற்றின் பக்கம் அவர்களை உலாவ விடாமல் போதிய அளவு நீதிக்கு உகந்த தகவல்களை நிலாச் சோறு ஊட்டுவதைப் போல் அன்புடன் ஊட்டினால் அவர்களின் அறிவு வளர்ச்சி நன்றாகவே நடக்கும் என்றால் மிகையாகுமா?

குற்றங்கள் நடை பெறவில்லை என்று கூறுதல் சுவாசிக்காமல் ஒரு நாள் இருந்தோம் என்று கூறுவது போலாகும், அறவடித்த முன் சோறு கழுநீர்ப் பானையில் விழுவதையும் பார்த்து இருக்கிறோம், ஆனால் அது விபத்து. அதேபோல அறப்படித்த அறிவற்ற சந்தர்ப்பவாதிகள் ஒற்றுமையால் வாழ்வதால் நன்மை உண்டு என்பதைச் தமது சுயலாபத்திற்காகப், பதவி ஆசை கொண்டு மூளைச்சலவை செய்து வேற்றுமையை வளர்த்தார்கள், அது வளரும் விதத்தையும் ரசித்துக் கொண்டும் இருந்தனர், அதனால் தங்களின் நாற்காலி காலியாகாமல் இருக்குமென நம்பினார்கள். இவர்கள் வடக்குக், கிழக்கை மட்டுமல்ல, மிகுதி ஏழு மாகாணத்தின் மக்களையும் வேற்றுமையை ஊட்டியே வெற்றி பெறலாம் என நம்ப வைத்தார்கள். இதற்கு இரு வேறு மொழி பேசும் சந்தர்ப அரசியல் வாதிகளே பொறுப்பேற்க வேண்டும், இவர்கள் தீர்க்கதரிசனம் அற்ற சந்தர்ப்பவாதிகளே அன்றி அரசியல்வாதிகள் அல்லர். அவர்களைக் களை பிடுங்கத்தான் புதிய ஜனாதிபதி உறுதியெடுத்தார்.

1933 ஆம் ஆண்டளவில் பிரித்தானிய அரசு, இலங்கைத் தீவின் ஆட்சிப் பொறுப்பை மட்டும் இலங்கை அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கருத்தை ஏற்றுக் கொண்டது. ஆட்சிப் பொறுப்பு மாற்றத்தைக் கொண்டுவரும் வழிகளை ஆராயச் சோல்பரிப் பிரபுவின் தலைமையில் ஓர் ஆணைக்குழுவை இலங்கைக்குப் பிரித்தானிய அரசு 1944 ஆம் ஆண்டு அனுப்பி வைத்தது. அவர்கள் நம் நாட்டைச் சுற்றிப்பார்த்து இலங்கை மக்களிடமும், மக்கள் தலைவர்களிடமும் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

அதே கருத்துக்களைத்தான் இந்தியாவிடமும் இந்தியச் சுதந்திரம் பற்றிக் கேட்கப்பட்டது, அப்போ நேரு பாக்கிஸ்தான் உள்பட்ட இந்தியாவையும், ஜின்னா இந்தியா அடங்காத பாக்கிஸ்தானையும் கேட்டனர். ஜின்னாவின் கேள்வி திடமாக இருந்தமையால், 1947 ஆம் ஆண்டு இந்தியாவும், பாக்கிஸ்தானும் இரு வேறு நாடுகளாகச் சுதந்திரத்தைப் பெற்றது.

அதே கருத்துக்கள் இலங்கையில் கேட்கப் பட்ட போது, தமிழ்த் தலைவர்கள் பிரிவினையைத் திடமாகக் கேட்கவில்லை, அந்நேரங்களில் ஜி.ஜி.பொன்னம்பலம், ஐம்பதுக் ஐம்பது என்னும் கோரிக்கையை வைத்தார், அதாவது ஐம்பது வீதம் பெரும்பான்மை மொழி பேசுபவர்களும், ஐம்பதுவீதம் சிறு பான்மை இனத்தவர் அனைவரையும் அடங்கிய அரசைக் கேட்டார்..அதும் ஆணித்தரமாகக் கேட்கப்பட்டது. அப்போ ஜி.ஜி.பொன்னம்பலம் எல்லோராலும் மதிக்கப் பட்டு, இந்த ஐம்பதுக் ஐம்பது புகழப் பெற்றது, அவரிடம் தீர்க்கதரிசனம் இருந்தது என்பதை இச்சம்பவம் நிரூபித்தது.

அந்தப் பேச்சு வார்தையின் போது அதைவிடத் தமிழர்க்குத் தனி நாடு வேண்டுமெ ச.ஜே.வே, செல்வநாயகம் அவர்கள் ஏன் கேட்கவில்லை? அவர் ஈழத்துக் காந்தி என்று அழைக்கப்பட்டவர், ஜி.ஜி, யைவிட மூத்தவர்தானே, சந்தர்ப்பத்தை நழுவவிட்டு விட்டு ஜி,ஜி.யை காட்டிக் கொடுத்தவர் என்று மட்டும் கூறிக் கொள்ள எப்படி முடிந்தது?. அந்தத் தீர்க்கதரிசியை மன உளைச்சலுக்கு உட்படுத்தியவர்களும் இவர்களே. சிறந்த ஒரு தமிழ் அரசியல் ஞானியை தமிழரின் நன்மைக்குப் பயன் படுத்திக் கொள்ளத் தவறியவர்களும் இவர்களே. கோட்டை விட்டு விட்டு 1944ம் ஆண்டு உருவாக்க வேண்டிய தமிழரசுக் கட்சியை இலங்கை ஒரு நாடு என்று பிரகடனம் செய்தபின் உருவாக்கிக் குழப்பத்தை உண்டு பண்ணினார்கள். அதை வைத்துச் சந்தர்ப்ப வாதிகள்; சில சிங்கள மொழி பேசும் மக்களை மூளைச்சலவை செய்தார்கள். இன்றும் அதே கட்சியின் பெயரில் தங்களுக்கு வாக்குக் கேட்கிறார்களே! புத்திவான்தான் பலவான் என்ற அறிவைக் கொள்ளதவர்கள். சில புத்தி ஜீவிகளும் இவர்கட்குள் மாட்டிக் கொண்டார்கள் எனும் போது ஜீரணிக்க முடியவில்லையே!

ஜி.ஜி. முதல் முறை ஐக்கிய நாட்டில் பேசி முடிந்ததும் அவரின் பேச்சை அவதானித்த மேல் நாட்டவர் ஓடி வந்து அவரைப் புகழ்ந்து நீர் ஒரு முன்னேறும் நாட்டின் பிரஜையானால் தானுமோர் முன்னேறும் நாட்டின் பிரஜையே என்று கூறுவதையே விரும்புகிறேன் என இலங்கைகுப் பெருமை வரக் கூறினார். 1898ல் அமெரிக்கர் மத்தியில் இந்தியா விவேகானந்தரால் பெருமை கண்ட மாதிரி இலங்கையும், ஐ.நா.வில் ஜி.ஜி.பொன்னம்பலத்தால் பெருமை கண்டது. அவர் இலங்கையின் இன ஒற்றுமையை என்றும் வலியுறித்தியிருந்தார், அதனல்தான் அவரைக் காட்டிக் கொடுத்தவரெனத் தமிழரசுக் கட்சி ஒவ்வொரு மேடையிலும் கூறி அவரை அவமானப் படுத்தியது.

சுதந்திரம் மாசி 4 ஆம் நாள் 1948 இல் கிடைத்தபோதும்; இறைமையை பிரித்தானிய அரசு தன்னுள் வைத்துள்ளதை எத்தனை பேர் அறிவர். 1972ல் இலங்கை குடியாரசாகும் வரை இறைமையை பிரித்தானிய அரசே வைத்திருந்தது.

1972ல் இலங்கை நாடு குடியரசானது, எனவே இலங்கையின் ஆட்சியுரிமையும், இறைமையும் இலங்கை அரசாங்கத்திற்கே உரியது. வேறு எந்த நாட்டாலும் உள்நாட்டு விடயங்களில் சனாதிபதியின் அனுமதியின்றித் தலை இட முடியாது என்பதை இலங்கையின் எல்லா மொழி பேசும் மக்களும் அறிய வேண்டும். எமது அரசியலமைப்புக் கூறுவது:

1.இலங்கை, சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட சனநாயக சோசலிசக்
குடியரசாகும் என்பதோடு, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு என அறியப்படுதலும் வேண்டும்.

2.இலங்கைக் குடியரசு ஒற்றையாட்சி உடைய அரசாகும்.

3.இலங்கைக் குடியரசில் இறைமை மக்களுக்குரியதாகவும் பராதீனப்படுத்த முடியாததாகவும் இருக்கும், இறைமை என்பது ஆட்சித தத்துவங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை, ஆகியவற்றை உள்ளடக்கும்.

4.மக்களின் இறைமை பின்வரும் விதமாகப் பிரயோகிக்கப் படவும் அனுபவிக்கப்படவும் வேண்டும்:- அ.ஆ.இ,ஈ,உ. என ஐந்து இறைமையைப் பிரயோகித்தலுண்டு மொழி

1.இலங்கையின் அரசகரும மொழி சிங்கள மொழியாதல் வேண்டும்.

2.தமிழும் அரசகரும மொழி ஒன்றாதல் வேண்டும்.

3.ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டும்.

4.பாரளுமன்றம் சட்டத்தின் மூலம் இவ்வத்தியாயத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்.

19.இலங்கையின் தேசிய மொழிகள் சிங்களமும் தமிழும் ஆதல் வேண்டும்.


இவை அரசியல் யாப்பிலிருந்து எடுக்கப் பட்டவை, மாற்றங்களிருக்க வாய்ப்புகளுண்டு.
இருந்தும் ஒற்றுமையை மேலே கூறியவை வெளிப்படுத்துகிறது. வட்ட மேசையில் தீர்க்கமாக்ப் பேசி முடிப்பதற்கு நிறைய வாய்ப்புக்களுண்டு. வாய்ப்போர் என்பது (DIALOGUE) பேசித் தீர்ப்பது. பிழை சரிகளை அலசி ஆராய்வது, எத்தனை முறை பேச்சுக்களால் வாதாடினாலும், தோல்வியானாலும், மீண்டும் பேசியவர்களே மேசைக்கு வந்து பேசச் சந்தர்ப்பங்கள் உண்டு, இயற்கை அவர்களைப் பிரிக்காமல் இருக்கும் வரை. அதே போல் எமது அபிலாசைகளின் தேவைகள் தக்க நேரத்தில் பேசப்பட்டால், ஒற்றுமையை உடைக்காமல் பேசப் பட்டால் அடிக்கு மேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பதைப் போல் அதுவும் ஒரு நாள் நகர்ந்து இருக்கும், அதற்கான தேவைகளை நாம் தான் ஆக்க வேண்டும். உணவை யாரென்றாலும் சமைக்கலாம், உண்ண வேண்டியவர்கள் பசியுள்ளவர் மட்டுமே. தற்போது எமது தேவைகள் புலப்படத் தொடங்குகிறது, உலகமும் அதை ஆவலாகக் கேட்டும் பார்த்தும் கொண்டு இருக்கிறது. அதை அளிக்க வேண்டியவர்களும் ஆவலாய் உள்ளார்கள் இந்நேரம் நாம் அதை எப்படி வாங்குவது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

1977களில் தற்போதைய எதிக் கட்சிக்குப் போதிய பலம் இருந்தது, எமது அபிலாசைகளும் கேட்கப் பட்டது, ஆனால் அவர்கள் அதைத் தரத் திட்ட வட்ட ஆக மறுத்தார்கள் பெறு பேறுகள் போரில் முடிவடைந்தது இழப்புக்கள் அதிகமானதே தவிரப் பதில்கள் சாதகமாக அமையவில்லையே! தற்போது போர் முடிவடைந்து விட்டது, சிலர் நெருப்பை அணைக்க விடாமல் ஊதிப் பெரிதாக்க முயலுகிறார்கள், ஒற்றுமையைச் சிதைக்கவும் முயலுகிறார்கள்.
தற்போதைய அரசு தரமாட்டேன் என்று கூறவில்லை. தருவதற்கு மனம் இருந்தாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமையைச் சுட்டிக் காட்டுகிறார்கள். எங்களாலும் அந்த மூன்றில் இரண்டு பெரும் பான்மைக்கு உரிய எந்துசக்தியாக இருக்க முடியும் அதையும் ஒற்றுமையுடன் செய்தால், வரப்போகும் பல தேவைகளை அதே பசையைக் கொண்டே ஒட்டி எடுக்கலாம் என்றால் அது மிகையாகுமா.

எதிரியாகச் சாதிப்பதை விட நண்பனாய் இருந்து சாதிப்பது நிரந்தரமானதும், உத்தரவானதும் உண்மையானதுமாக இருக்குமென்றால்; நண்பனாய் இருப்பதில் தவறு தெரியவில்லையே.
இருந்தபோதும் பல காலங்களுக்குப் பின் ஜனநாயகம் கையாளப் பட்டதை மட்டும் உணர்ந்திருக்க முடிந்தது என்பது மட்டும் உண்மை. தற்போதைய ஜனநாயகக் காற்றை மக்கள் சுவாசிக்க ஆரம்பிக்கிறாகள் என்பதை உணர முடிகிறது, சிலர் அதை விசக் காற்றாய் இருக்கிறது என்று பரப்புரை செய்கிறார்கள், சுவாசிப்பவன் தனது புலத்தின் எல்லையில். போதிப்பவன் புலம்பெயர்ந்து எங்கோ யாரோ ஒருவர் எல்லையில் சுயநலத்துடன் பேசுகிறான். அதை என்ன நடக்கிறது என்று அறியாத சிலர் சோரம் போய் நல்லதை நலக் குறைவாய் எண்ணுகிறார்கள், சேர்ந்த பணம் பேசுகிறதா? அல்லது மேலும் சேர்க்கப் போவதற்கான அத்திவாரத்தின் அறிகுறியா? ஒரு நாட்டின் இறையான்மை என்றால் என்னவென்று சற்றும் தெரியாச் சட்டத்தருணிகள். எதிர்த்து கொண்டுதான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களைத் திருத்த முயல்வது முயல் கொம்பாகும். மக்களின் நன்மைக்காகத் தலைமைகளா? தலைமைகளின் நன்மைக்காக மக்களா?

2010 இல் ஜனாதிபதித் தேர்தலின்போது ஏற்கெனவே இருந்த ஜனாதிபதியின் செயல்கள், கொள்கைகளை அறிந்து அது சரியானதா? அல்லது பிழையானதா? என்ற கேழ்வியைக் கேட்டுப் பின் வாக்களிப்பை நடாத்தியிருந்திருக்க வேண்டும். அவரின் கொள்கைகள், செயல்கள் பற்றிச் சிந்திக்காமல், அவர் எதிரி என்று எண்ணி, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சூத்திரத்தைப் பாவித்து அன்னத்திற்கு அளித்ததால் பலன் என்னத்தைக் கண்டோம்? சந்தர்ப்ப வாதிகளின் எதிர்பார்ப்பு வெற்றி பெறவில்லை. இதற்கு முன் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் உங்கள் வாக்களிப்பைத் கொடுக்க விடாமல் தடுத்த காலங்களில் அதாவது ஜனநாயகத்திற்குத் தடை வைத்த காலத்தில் பெரும்பான்மை இரண்டு லட்சத்திற்கும் கீழேதான் இருந்தது என்பதை நம்பித்தான் ஆகவேண்டும், ஏனெனில் அதுதான் உண்மை. இந்தத் தேர்தலில் வாக்களிக்கச் சந்தர்பம் இருந்தும் அந்த வாக்குக்களை நீங்கள் ஜனாதிபதிக்கு அளிக்காமல் விட்டும் அவருக்குக் கிடைத்த பெரும்பான்மை பத்தென்பது லட்சம். நீங்கள் உங்கள் வாக்குக்களை அன்னத்தை விட உங்களுக்காப் பேசிய வேறொருவருக்கு அளித்திருந்தால் பெரும்பான்மை இருபத்திநான்கு லட்சம் வாக்குக்களாக அதிகரித்திருக்கும். அத்துடன் உங்கள் எதிர்ப்பை நட்பின் மூலமாய்க் காட்டியிருந்ததாகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். முடிந்தது முடிந்துவிட்டது, கொட்டிய பாலைத் திருப்பிப் பெற முடியுமா? மீண்டும் சந்தர்பம் வந்துவிட்டது, காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோமாக. முடிவடைந்த ஜனதிபதித் தேர்தல், உங்களின் எதிரிக்கு எதிரி நண்பன் வாக்குக்களால், பெரும்பான்மை மொழி பேசும் மக்களிடையே குழப்பம் விதைக்கப் பட்டிருக்கிறது. அதை நல்லசகுனமாகச் சில புலம்பெயர்ந்த சமூகத்தார் பார்க்கிறார்கள், ஆனால் அது மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பெரும்பான்மையைக் குறைக்கவும் வழி சமைக்கும் என்பதை அவர்கள் உணர மறந்து விட்டார்கள், மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை என்றால் அதனால் தாக்கப் படப் போவது தமிழரின் எதிர்காலமே என்பதைத் தீர்க்கதரிசனம் பண்ண மறந்து விட்டார்கள்.

பெரும்பான்மை மொழி பேசும் மக்கள் வாக்குக்கள் பிரிக்கப் பட்டாலும் வெல்லுவது தற்போதைய அரசுதான், அரசிற்கு மூன்றில் இரண்டு என்ற பெரும்பான்மை வருவது தடுக்கப் பட்டால், அரசு விரும்பியதைச் செய்ய எதிர்ப்புக்கள்தான் தோன்றுமே அன்றி மற்றவர்கள் சம்மதங்கள் தர வாய்ப்பில்லை. எல்லவற்றிற்கும் எதிரும் புதிருமாக இருந்தால் பாராளுமன்றம் நிறைவாகப் பணியாக்க முடியாது, அது யாரைப் பாதிக்கும் என்று ஒரு கணம்
யோசித்தால் யதார்த்தம் தானாகவே விளங்கும். எமக்கு இப்போ தேவை யார் குத்திய அரிசியல்ல, நாம் குத்தப் போகும் வாக்குத்தான் என்பதை மறந்துவிட வேண்டாம்.

எனவே வரப்போகும் சித்திரை எட்டு 2010 மிகவும் முக்கியமான நாள், சுதந்திரக் காற்று வீசும் சுபமான வேளை உலகம் உட்பட அனைவரும் எதிபார்க்கும் ஒரு வரப்பிரசாத நல் நாள், அந்நாளில் நாம் அனைவரும் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் தீர்வைத் தருவது. ஜனாதிபதித் தேர்தல் முடிவின் பிரகாரம் புள்ளி விவகாரங்களை கணக்கில் கொண்டோமானால், வெல்லப் போவது தற்போதைய அரசே! ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுக்குமா என்பதுதான் கேழ்வியே? எடுக்காது விட்டால் சாட்டுக்கள் சொல்லிப் பல கட்சிகள் நம் விதியில் விளையாடும், இதைத் தடுக்க எமது ஒற்றுமை ஒன்றேதான் முக்கியம் பலம், தவறவிட்டால் நெய்கடையும் போது குடம் உடைந்த கதையேதான்.

ஆகவே இம்முறை எல்லோரும் ஒரு மனதாக வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்கை அளியுங்கள், உங்களது முழுப் பிரதிநித்துவமும் அரசை உங்கள் பக்கம் அழைத்துக் கொண்டே இருக்கும். முன்பு ஒருகால் தமிழ் கட்சி எதிர் கட்சியாக இருந்தபோது அக்கால அரசு மிகப் பலம் வாய்ந்ததாய் இருந்தும் அவர்கள் எம்மை கண்டு கொள்ளவில்லை, ஆகையால் அரசுடன் சேர்ந்து அரச கட்சியாய் இம்முறை இருப்பது சாலச் சிறந்தது, அப்படிப்பட்ட முடிவு நன்மையை மட்டும்தான் தரும். எனவே உங்கள் கையில் அரசு வேண்டுமா? வேண்டாமா? நிம்மதி வேண்டுமா? வேண்டாமா? தலை நிமிர்ந்து நில்லடா என்ற வாக்கியத்தை உண்மை ஆக்குங்கள், உங்கள் (கை)தான் உங்களுக்கு உதவி, நட்புடன் தலை நிமிர்ந்து நில்லுங்கள், ஒற்றுமையை வெளிப்படுத்துங்கள, வெற்றிலைதான் நட்புக்கும், ஒற்றுமைக்கும் என்பது எமது கலாச்சாரம் அதுதான் உண்மை, யதார்த்தம். எனவே வெற்றி நிட்சயம் அதுவே இலங்கையை முதலாம் உலகாக்கும். அணுவை வைத்து அசைப்பதல்ல முதல் உலகம், பொருளாதாரம் பெருகி வளர்வதுதான் முதல் உலகம். அதன் பின் நாம் யார்க்கும் குடியல்லோம்!

கனகண்ணா லண்டன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com