Monday, April 19, 2010

பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது சரிதான்: காங்கிரஸ்

பார்வதி அம்மாளை தமிழகத்துக்கு வரவழைத்து அரசியல் நடத்த சில கட்சிகள் திட்டமிட்டன. உலகத் தமிழ் மாநாடு நடக்க உள்ள நிலையில் பார்வதி அம்மையாரை வைத்து தமிழர் எழுச்சி மாநாடு நடத்த வைகோ திட்டமிட்டார். எனவே பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது சரிதான் என்று சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கூறியுள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்த பிரபாகரனின் தாயார் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் சட்டசபையில் இன்று விவாதிக்கப்பட்டது. அதன் விவரம்:

சுதர்சனம் (காங்கிரஸ்): கடந்த 1991ம் ஆண்டு ராஜீவ் கொல்லப்பட்டதை எண்ணி வருந்தாதவர்களே கிடையாது. ஆனாலும் மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்வு தேடி தரும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

பிரபாகரனின் தாயார் 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார். 2003ல் ஜெயலலிதா மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் காரணமாக பார்வதி அம்மாளுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வருக்கு தெரியாமல், தெரியப்படுத்தாமல், தமிழக அரசுக்கும் தெரியாமல் பார்வதி அம்மாள் வருகிறார். ஆனால் வைகோ, பழ. நெடுமாறனுக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தில் அவர்கள் தொண்டர்களுடன் வரவேற்க செல்கிறார்கள். இவர்களுக்கு மட்டும் அவரது வருகை எப்படி தெரிகிறது?

மனிதாபிமான அடிப்படையில் பார்வதி அம்மாளுக்கு தமிழ்நாட்டில் சிகிச்சை அளிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அவர் யாருக்கும் தெரிவிக்காமல் வந்ததால், விமான நிலைய அதிகாரிகள் இங்கு அனுமதிக்கவில்லை. மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரியாமல் விசா கொடுத்து விட்டது. பிறகு விபரம் தெரிந்ததும் அவர்களும் அனுமதி கொடுக்கவில்லை.

பார்வதி அம்மாளை இங்கு வரவழைத்து அரசியல் நடத்த சில கட்சிகள் திட்டமிட்டதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். 2011ல் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், உலகத் தமிழ் மாநாடு நடக்க உள்ள நிலையில் இவர்கள் தமிழர் எழுச்சி மாநாடு என்று பார்வதி அம்மையாரை வைத்து நடத்த திட்டமிடுவதாகத் தெரிந்தது.

சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பார்வதி அம்மாள் மூலம் வைகோ மலிவான அரசியல் நடத்த நினைத்தார். எனவே பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது சரிதான்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com