Tuesday, April 20, 2010

மக்களால் நிராகரிக்கப் பட்டவர்களும் பல் மொழியறிவும் உயர் கல்வியறிவும் அற்றோர் எப்படி எம்மை ஆள முடியும்?

சமூக சிந்தனையும், சத்திய மார்க்கமும், பொதுநலனும், பல் மொழியறிவுடன் கூடிய உயர் கல்வியும், மக்கள் ஆதரவும், தற்றுணிவும், தன்னார்வமும், அடக்கமும் ஒருங்கே அமையப் பெற்றவர்களே பாராளுமன்றக் கதிரைகளுக்குச் சொந்தக் காரர்களாக வேண்டுமே தவிர கட்டாக்காலிகளும், கண்மண் தெரியாது பதவியை துஷ்ப்பிரயோகம் செய்வோரும், தன் குடும்பம் உறவினர், சுற்றத்தார் என்று தேர்ந்தெடுத்து அரசின் உதவிகளையும் உரிமைகளையும் ஒரேயிடத்தில் அள்ளிக் குவிக்கும் 'அரசியல் புலிகளுக்கு' கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு மகா சிறந்ததே.

காலம் காலமாக கதிரை நம்மை விட்டுப் போகாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் கிட்டத் தட்ட 25 சத வீதமானோர் மக்களால் ஒட்டுமொத்தமாக தூக்கி வீசப்பட்டிருப்பது இலங்கை அரசியல் வரலாற்றில் பதியப் பட வேண்டிய முக்கிய விடயமே.

இருந்தாலும் கூட மூலதனமின்றியே கடந்த காலங்களில் அரசியல் வியாபாரம் செய்து சொர்க்கபுரி வாழ்வு வாழ்ந்தவர்கள் அச் சுகம் கை நழுவிப் போனதையிட்டு கவலையடைந்திருப்பார்கள் என்று நினைத்தால்... அது தான் இல்லை... கட்சித் தலைமைகளிடம் ஐயா சாமி என்று பிச்சை கேட்கிறார்கள். ஆனாலும் அரச தலைவரும், பிரதான எதிர்க் கட்சித் தலைவரும் எடுத்திருக்கின்ற முடிவுகள் தான் நாளை சிறந்தவொரு திருநாட்டைக் கட்டியெழுப்ப போடப்படுகின்ற அடித்தளம் என்றால் அறிவுடையோர் யாவரும் இதன் உட்கிடையை அறிந்து கொள்வர்.

யாரெல்லாம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப் பட்டார்களோ அவர்களில் ஒருவர் கூட எந்த வகையிலேனும் பாராளுமன்றத்திற்கு உள் வாங்கப்பட மாட்டார்கள் என்பது சாலச்சிறந்ததொரு தீர்மானம் மட்டுமன்றி தற்போது பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருக்கின்ற உறுப்பினர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக அமைவதோடு மட்டுமல்லாது தமது அரசியல் வாழ்வு தொடர வேண்டுமானால் பதவியை ஒரு வீதமேனும் துஷ்ப்பிரயோகம் செய்யாது மக்களை கண்ணியப் படுத்தி நடந்து கொள்ள வேண்டுமென்ற முன் நிபந்தனையையும் விதிப்பதாக அமைந்துள்ளது.

முதலாவது விடயமாக அது இருக்கையில் அடுத்தவொரு முக்கியமானதாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமலேயே தேசியப் பட்டியலூடாக நியமனம் வழங்கப் பட இருப்பவர்களின் பெயர்களையும் தேர்தல் நடைபெற முன்னரே கட்சித் தலைமைகள் வெளியிட்டிருந்தன. இவற்றில் கூட மாற்றங்களைச் செய்ய அக் கட்சிகளுக்கு அதிகாரமுண்டு. இவ்வதிகாரத்தினூடாக அதில் பெயரிடப்பட்டுள்ளவர்களில் கண்ணியமற்ற, அனுபவமற்ற, சுய நோக்க அரசியல் செய்வோர்கள் மற்றும் மொழி, உயர் கல்வியறிவு கிடையாத சோம்பேறிகளை வெளியேற்றி சகல துறைகளிலும் உயர் ரகத்தில் உள்ளவர்களை உள்ளீர்த்துக் கொள்ளவும் முடிவுகளை மாற்றியமைப்பது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும். இல்லாது போயின் கொடிய புலி அரக்கர்களினால் நசுங்கிப் போன எமது பொன்னான பொருளாதாரம், வேலை வாய்ப்பு மற்றும் இன்னோரன்ன வியடங்களை விடவும் படு மோசமான விளைவுகளை தரமற்ற அரசியல் கொள்ளையர்கள் நடாத்த முடியும்.

மூன்றாவது விடயத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். குறித்தவொரு ஊரில் போட்டியிட்டோரில் ஒருவர் மட்டும் தெரிவாகி மற்றவர்கள் யாவரும் தோல்லி கண்டிருக்கும் நிலையில் மேலும் ஒருவரை அவ் ஊரிலிருந்தே பாராளுமன்றிற்கு உள் வாங்குவதோ அல்லது தமது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள எதிர்க் கட்சிகள் அவ் ஊருக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதோ எந்த வகையிலும் நியாயப் படுத்தப் படக் கூடியதல்ல. அவர் சகல துறைகளிலும் பாண்டித்தியமுள்ளவராக இருந்தாலும் சரியே.

மட்டுமன்றி மக்களே இதற்கெதிராக கிளர்ந்தெழ வேண்டும். சுய நோக்கங்களிற்கு அப்பாற்பட்டு அடுத்த ஊரவருக்கு ஒரு பாராளுமன்ற பதவியை விட்டுக் கொடுக்கும் மனத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேர்தலில் போட்டியிட்டு தோல்லி கண்டோர், தலைமைகளின் சப்பாத்துக்களை துடைத்து பாராளுமன்ற கதிரை பெற்றோ அல்லது போட்டியிடாமலேயே கூட்டிக் கொடுத்ததற்காகவும் காட்டிக் கொடுத்ததற்காகவும் பாராளுமன்ற கதிரை பெற்றோ (தகைமையுடையோர் தவிர) உங்களிடம் வரும் யாரையும் அடித்துத் துரத்தாமல் விடாதீர்கள். மக்களாகிய எமது உழைப்பில் வாழத்துடிக்கின்ற இந்க வரட்டுக் கௌரவமும், வக்ர புத்தியும், தான் தோன்றித் தனமும் படைத்தவர்களை எதனால் அடித்து விரட்ட வேண்டுமென்று நீங்கள் நன்றாகவே அறிந்திருப்பீர்கள்.

ஆக நான் கூற வருவதெல்லாம் மூன்றே மூன்று விடயங்கள் தான்.

* அரசும் பிரதான எதிர்க் கட்சியும் (கொள்கையளவில்) ஏற்றுக் கொண்டுள்ளது போல் ஏனைய கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்லி கண்ட யாரையும் எக் காரணம் கொண்டும் உள்வாங்க இடமளிக்காது பார்த்துக் கொள்ள வேண்டும்.

* ஏற்கனவே தேர்தலைச் சந்திக்காது பாராளுமன்ற கதிரை வழங்க பெயரிடப் பட்டவர்களில் தகுதியற்ற யாருமிருப்பின் அவர்களையும் அறவே அனுமதிக்கக் கூடாது.

* ஆளும் கட்சி, எதிர்க் கட்சி பூசலால் வாக்கு வங்கிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இருக்கின்ற அதே ஊருக்கு மாற்றுக் கட்சியொன்று தமது கட்சி சார்பில் ஒரு ஆசனத்தை வழங்க முன்வருமாயின் அதனையும் முற்றாக எதிர்த்துப் போராடுங்கள். அவர் தகுதியானவராக இருந்தாலும் சரியே.


என்றோ சிங்கப்பூரை விடவும் எழுச்சி பெற்றிருக்க வேண்டிய எமது தாய் மண்ணை வெளிப்படையாகவே குட்டிச் சுவராக்கிக் கொண்டிருந்தவர்கள் யாரென்பதை இனங் கண்டோம் ஆனால் கறையான்கள் போன்று உள்ளிருந்தே எம் உழைப்பையும் அரசுடமைகளையும் அநியாயமாக அரித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்ற தரம் கெட்ட அரசியல்வாதிகளை உடன் இனம் காணாவிட்டால், கடந்த கலிகாலம் போல் 30 வருடமென்ன 3 நூற்றாண்டுகள் தான் ஓடி மறைந்திடினும். இன்றிருக்கின்ற இலங்கையைத்தான் எமது வருங்கால சந்ததிகளும் காணுமென்பதில் ஐயமில்லை. பாரியதொரு வரலாற்றுத் தவறை செய்தவர்களாக நாம் ஆகி விடக் கூடாது. அத்துடன் இந்தத் தலைவன் தான் வேண்டும், இந்த எம் பீ தான் வேண்டும் இவர்கள் இல்லையென்றால் வேறு யாருமே இல்லையென்ற பின் தங்கிய நினைப்பை உங்களை விட்டும் நீக்கி விடுங்கள்.

இவர்கள் இல்லையென்றால் இவர்களை விட பன் மடங்கு சிறந்த பல பேரை நாமடைவோம். சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணங்களை ஏனோ தானோவென்று விட்டு விடாது ஒன்றிணைந்து செயற்படுவோமாக.

சவுதியிலிருந்து ஹிபாஹ் ஹன்ஸிராஹ்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com