ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதர் - மாகாநாயக்க தேரர்கள் சந்திப்பு.
மகாநாயக்க தேரர்களை சந்தித்து பேசும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவிற்கான தூதுவர் பேணாட் சவேச் [Bernard Savage]வரலாற்றில் முதற்தடவையாக கடந்த வெள்ளிக்கிழமை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்களுக்கு விசேட பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரைநிகழ்த்திய தூதுவர் பேணாட் சவேச் சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை நிலைமைகளின் அடிப்படையிலேயே ஐரோப்பிய ஒன்றினத்தின் வரிச்சலுகை தொடர்பான நிலைப்பாடு அமையும் என கூறியுள்ளார்.
'ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மற்றும் இது தொடர்பாக சிறிலங்கா அதிகாரிகளுடன் நாம் நடாத்திய பேச்சுக்கள் என்று வரும்போது, சிறிலங்காவில் நிலவுகின்ற மனித உரிமை நிலைமைகளின் தன்மையிலேயே வரிச்சலுகை தொடர்பான எமது நிலைப்பாடு தங்கியிருக்கிறது' என தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் 'நாட்டினது மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக கடந்த ஓன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நாம் எமது கரிசனைகளைத் தொடராக வெளிப்படுத்தி வருகிறோம்.
ஆனால் அரச தரப்பிலிருந்து ஆக்கபூர்வமான பதிலெதுவும் கிடைக்கவில்லை. மனித உரிமை தொடர்பான நிலைமைகள் மேம்படும் போது வரிச்சலுகை பற்றிய தற்போதைய எமது நிலைப்பாட்டினை பரிசீலனைக்கு உட்படுத்துவோம்' எனவும் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கான சிறிலங்காவின் ஏற்றுமதியில் அதிக நன்மைகளை சிறிலங்காவிற்குப் பெற்றுக்கொடுக்கும் ஜி.எஸ்.பி பிளஸ் என அறியப்பட்ட வரிச்சலுகையினை, சிறிலங்காவில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்வதாக குறிப்பிட்டு தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் கடந்த பெப்ரவரியில் முடிவெடுத்திருந்தன என்பது யாவரும் அறிந்த விடயம் எனவும் 'சிறிலங்காவினது நிலைமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட ஆழமான விசாரணைகளைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சாசனத்தின் சரத்துக்களைச் சிறிலங்கா நடைமுறைப்படுத்துவதில் முக்கியமான குறைபாடுகள் இருந்ததை இந்த விசாரணைகள் வெளிப்படுத்தியிருந்தன' என ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை இடைநிறுத்துவது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரை வரவேற்று பேசிய மல்வத்து மகாநாயக்க தேரர், 'தற்போது நிலைமைகள் மேம்பட்டிருக்கின்றன, இன நல்லிணக்க முனைப்புக்கள் இடம்பெற்று வருகின்றன, வரிச்சலுகை தொடர்பான தனது நிலைப்பாட்டினை ஐரோப்பிய ஒன்றியம் மீள்பரிசீலனை செய்வற்கான தருணம் இதுதான் எனவும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை சிறிலங்கா மீண்டும் பெறுவதற்கு இந்தச் சந்திப்பு பெரிதும் உதவும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டினது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து பணியாற்றி வருவதாக நான் நம்புகிறேன்' எனவும் மல்வத்துபீட மகாநாயக்க மேலும் கூறியுள்ளதார்.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயகரான அதி வணக்கத்துக்குரிய உடுகம சிறி புத்தரகீத தேரர் பேசுகையில், 'சர்வதேச ரீதியான சகோதரத்துவத்தினால் நாம் அனைவரும் பிணைக்கப்பட்டிருக்கிறோம்' 'இந்த நாட்டினது மக்கள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்ந்துவருகிறார்கள். இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரை நாம் அன்புடன் வரவேற்கிறோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment