ஜெயலலிதாவுக்கு கனிமொழி எம்.பி. வக்கீல் நோட்டீஸ்
ஆதாரம் இல்லாமல் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அவதூறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, கனிமொழி எம்.பி. வக்கீல் நோட்டீசு அனுப்பி இருக்கிறார். முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு, கனிமொழி எம்.பி. அனுப்பியுள்ள நோட்டீசில்,
இந்தோனேஷியாவில் கனிமொழிக்கு சொந்தமாக நிலக்கரி சுரங்கம் இருக்கிறது என்று நீங்கள் கூறிய தகவல் முற்றிலும் தவறானது. ஆங்கில பத்திரிகை ஒன்றில், `நிர்வாக திறமையின்மையாலும், ஊழலாலும் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.
அதில், நெய்வேலியில் நடந்த போராட்டத்தில் நீங்கள் பேசிய விவரங்கள் வெளியிடப்பட்டு இருந்தன. இந்தோனேஷியாவில் நிலக்கரி நிறுவனங்களை தி.மு.க. அமைச்சரின் சகோதரர் ராமஜெயத்துடன் சேர்ந்து கனிமொழி சொந்தமாக வாங்கி இருக்கிறார் என்று நீங்கள் பேசியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், அந்த நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு கனிமொழி சப்ளை செய்வதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறீர்கள்.
மேலும், நிலக்கரி டன் ஒன்றுக்கு 21 அமெரிக்க டாலர்களை லஞ்சமாக கருணாநிதியின் குடும்பம் பெறுகிறது என்றும் கூறி இருக்கிறீர்கள். கனிமொழியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தில் நீங்கள் இப்படி பேசி இருக்கிறீர்கள். இந்தோனேஷியாவில் அவருக்கு சொந்தமாக நிலக்கரி சுரங்கம் இருக்கிறது என்று நீங்கள் கூறிய தகவல் முற்றிலும் தவறானது.
இந்தோனேஷியாவில் மட்டுமல்ல, உலகில் எந்த பகுதியிலும் கனிமொழிக்கு நிலக்கரி சுரங்கம் மற்றும் நிலக்கரி வெட்டி எடுப்பது, அவற்றை வர்த்தகம் செய்வது போன்றவற்றில் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் நீங்கள் தவறாக, பொய்யான தகவலை உள்நோக்கத்தோடு கூறியுள்ளீர்கள்.
மேலும், தி.மு.க. அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்துடன் தொழில் பங்குதாரராக கனிமொழி இருப்பதாக நீங்கள் கூறி இருப்பதும் தவறு. கனிமொழி ராமஜெயம் மற்றும் கே.என்.நேரு ஆகியோருடன் எந்த தொழில் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை.
இதுமட்டுமல்ல, முதலமைச்சர் கருணாநிதியின் மகள் என்ற முறையில் நெருங்கிய உறவினர்களுடன் சேர்ந்து கனிமொழி ரூ.2 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக மற்றொரு கடுமையான, முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டை கூறி இருக்கிறீர்கள்.
பொது சேவை மற்றும் கலை, கலாசார சேவையில் கனிமொழி தன்னை அர்ப்பணித்துள்ள சூழ்நிலையில் இப்படி பேசி இருக்கிறீர்கள். அவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் உலக நாடுகள் அனைத்திலும் பெயர், புகழ் உள்ளது. அவற்றை கெடுப்பதற்காக உள்நோக்கத்தோடு நீங்கள் தவறாகவும், அவதூறாகவும் கனிமொழி பற்றி பிரசாரம் செய்திருக்கிறீர்கள்.
எனவே, இந்த நோட்டீசு கிடைத்த 3 நாட்களுக்குள் கனிமொழியிடம் நீங்கள் மன்னிப்பு கேட்டு உங்களது தவறான பேச்சை திரும்பப் பெறாவிட்டால், உங்கள் மீது சட்டப் பூர்வமாக கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் தொடரப்படும்.
இவ்வாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)
0 comments :
Post a Comment