Saturday, April 24, 2010

சவூதி அரேபியாவில் வியாபாரம் ஆகி விட்ட மருத்துவத்துறை! -ஹிபாஹ் ஹன்ஸிறாஹ்-

படு வேகமாக முன்னேற்றமடைந்து கொண்டிருக்கின்ற மருத்துவ உலகில் உள் நுழைந்து விட்ட காப்பீட்டுத் திட்டம் (இன்சூரன்ஸ்) சவூதி அரேபியாவைப் பொறுத்த வரையில் வெளி நாட்டவர்களுக்கு ஒரு கொடையென்றே கூறக் கூடியளவிற்கு அரசினால் கட்டாயமாக்கப் பட்டுள்ளதானது வாயாரப் புகழப் பட வேண்டியதும் பாராட்டத் தக்கதுமாகும். இருப்பினும் இன்னும் வீட்டுப் பணிப் பெண்களிற்கும் வீட்டு வாகன ஓட்டுனர்களுக்கும் கட்டாயமாக்கப் படா விட்டாலும் அதனால் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவிற்கு பாரதூரமான விளைவுகள் இன்னும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

ஒருவர் தான் தொழில் புரிவதற்கானதும் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குமான ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு அல்லது புதுப்பித்துக் கொள்வதற்கு முன்னர் தொழில் வழங்குனர் ஒரு வருடத்திற்கான வைத்திய அட்டைக்குரிய (Medical Insurance Card) பணத்தைச் செலுத்தி அவ் அட்டையினைப் பெற்றுக் கொள்ள வேண்டியது முற்று முழுதாக கட்டாயமும் அதனை தொழில் தருனரே செலுத்த வேண்டுமென்பதும் சட்டமாகும். இதனை யாரும் மீறவும் முடியாது இது வரையில் மீறப் படவுமில்லை.

உள் நாட்டவர்களில் (Saudi Nationals) கணிசமானோரும் இவ் வகையான முற்பணம் செலுத்தி (Medical Insurance Card) பெற்றுக் கொள்ளக் கூடிய வசதியுமுடையதால் (கட்டாயமல்ல) பெரும் பகுதியினர் பணம் செலுத்தி எங்கும் எந்தவொரு மருத்துவ சிகிச்சையினையும் பெற வேண்டிய தேவையில்லாது போய் விட்டது. பணத்திற்குப் பதில் அட்டைகளை நீட்டி விடயத்தை முடித்து விடுகன்றார்கள்.

ஆக, சட்டம் மீறப் படாமலிருக்கும் போதும், அது முற்று முழுதாகவே பின்பற்றப் படும் போதும் எவ்வாறு இதுவொரு வியாபாரமாக இருக்குமென்ற அச்சம் யாவருக்கும் எழ வாய்ப்புள்ளது.

இங்குள்ள வைத்தியசாலைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப் படுகின்ற வைத்தியர்கள் தங்களது சேவையை தொடர வேண்டுமாயின் அல்லது சம்பள உயர்வையோ பதவி உயர்வையோ ஏனைய சலுகைகளையோ பெற்றுக் கொள்ள வெண்டுமாயின் அது அவர்களால் குறித்த நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுக்கப்படும் வருமானத்திலேயே தங்கியுள்ளது வெளிப்படை உண்மையாகும். போதியளவு வருமானம் குறிப்பிட்ட வைத்தியரால் வைத்தியசாலைக்கு கிடைக்கவில்லையெனின் அவரின் இருப்பு தேவையற்றதாகி விடும். எனவேதான் தங்களிடம் வருகின்ற சாதாரண நோயாளிகளுக்குக் கூட பல தரப்பட்ட ரத்தம், சிறு நீர், எக்ஸ் றே, ஸ்கேன் என்று யாவற்றையும் செய்தும் கணணி மூலம் கிடைக்கின்ற முடிவுகளில் கூட மாற்றங்களைச் செய்தும் மேலதிக சிகிச்சைக்கு அறிவுறுத்துவதன் மூலம் பெரும்பாலான வைத்தியர்கள் தமதிருப்பை தக்க வைத்துக் கொள்கின்றார்கள். இது ஒரு வகையான மோசடியாகும்.

அத்துடன் நின்று விடாது சிகிச்சைக்காக வழங்கப்படும் மருந்துகளை உட்கொள்கின்ற போது சில உயிர்ச்சத்து மாத்திரைகளையும் மருத்துவர்கள் வழங்குவது வழமையாக இருந்த போதிலும் இவ் வகையான (Medical Insurance Card System) வருவதற்கு முன்னர் நோய்க்கான மருந்துகளுடன் எழுதிக் கொடுக்கும் உயிர்ச்சத்து மாத்திரைகளை விடவும் இப்போது எழுதிக் கொடுக்கின்றவையின் தரமும் அளவும் விலையும் சில வேளைகளில் சிலரின் மாத வருமானத்தில் 15 – 20 வீதத்தைத் தாண்டுவதும் கண்கூடு. இப்படியாக மருத்துவர்கள் செயற்பட முக்கிய இரு காரணங்கள் காணப்படுகின்றன.

ஒன்று எந்தவொரு இன்சூரன்ஸ் கம்பனியோ தொழில் தரும் கம்பனியோ விற்றமின் வில்லைக்கும் விற்றமின் மருந்துகளுக்கும் பொறுப்பேற்காது. அத்துடன் இதனை நோயாளியே தன் சொந்தப் பணத்தில் செலுத்தியாக வேண்டும்.

இரண்டாவதாக, இலட்சக் கணக்கில் முதலீடு செய்து மருந்துக் கடைகளை நடாத்துவோர் முற்று முழுதாகவே காப்பீட்டு அட்டைக்கு மருந்துகளை வழங்கி விட்டு காப்பீட்டு கம்பனிகளிடம் தமக்கான கொடுப்பனவுகளை எதிர்பார்த்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் குறைந்தளவு மருந்துகளையேனும் உடன் பணத்திற்கு விற்றுக் கொள்ள முனைவதற்கு வைத்தியர்கள் கொடுக்கும் ஒரு பக்க பலன் தான் இந்த நாடகம். இந்த வகையான வைத்தியர்களுக்கும் மருந்துக் கடைகளிற்குமிடையில் எந்த வகையான உள் உறவு உண்டென்பதை யாம் அறியோம்.

இதுவெல்லாம் ஒரு பக்கமிருக்க கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரிக்கு மனமில்லை என்பது போல நேரடியான ஏமாற்று வித்தையிலும் பல மருந்துக் கடைகள் ஈடு பட்டுள்ளதையும் காணமுடிகின்றது. அதிலும் படிப்பறிவு குறைந்த மக்களிடமே இவர்கள் தமது கைவரிசையைக் காட்டுவதும் மிகவும் வேதனையளிக்கக் கூடியதொரு விடயமாகும்.

வைத்தியர்களால் எழுதிக் கொடுக்கப்படுகின்ற நோய்க்கான மருந்துகளில் பாதியளவையே நோயாளிக்குக் கொடுத்து விட்டு முழுவதற்கும் பற்றுச் சீட்டு எழுதி காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து தொகைகளை சுளையாக பெற்றுக் கொள்கின்றனர்.

பாரிய நோய்கள் ஏற்படுகின்ற போது இவ் வகையான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பேருதவியாக இருப்பதை மறந்து விட முடியாத போதும் சிறியளவு வருமானத்தையுடைய படிப்பறிவு குறைந்த பாமர ஏழைகள் சிறயதொரு நோய்க்காக செல்லுகின்ற வேளை அவர்களின் பலவீனத்தை அறிந்து அவர்களிடமே ஏமாற்று வேலைகளில் ஈடுபடும் இவர்களுள் பெரும்பாலானோர் சவூதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களல்ல. மாறாக வெளிநாட்டிலிருந்து தொழில் புரிய வந்தவர்களே என்றால் அது தான் வியப்பிற்குரியதாகும்.

இத்துடன் இன்னுமொன்றையும் கூறியாக வேண்டும் (இது தனியாக ஒரு தொடர் கட்டுரையே எழுத வேண்டிய விடயம்) சில வருடங்களிற்கு முன்னர் பணம் செலுத்தி வைத்தியம் பார்க்கின்ற நிலமையிருந்த போதும் அல்லது கம்பனிகளில் பணி புரிவோர் முகாமையாளரின் கடிதத்துடன் வைத்தியரிடம் செல்லும் போது அவர்கள் காட்டிய பரிவிற்கும் அரவணைப்பிற்கும் இன்று 'கார்ட்டை' கொண்டு போனவுடன் அவர்கள் பார்க்கும் பார்வைக்கும் நடாத்துகின்ற முறைக்குமிடையே பாரியதொரு வேறுபாட்டைக் காணக் கூடியதாயிருப்பது ஒரு வெட்கக் கேடானதாகும். ஏன் அவர்கள் பேசுகின்ற தொனிதான் எத்தனை அகம்பாவம். இவர்களது பின்னணியை பார்க்க நேரின் நிச்சயமாக அது மனித நேயமுடையதாகவோ அல்லது கௌரவமான குடும்பத்தவராகவோ இருந்திருக்க வாய்ப்பிருக்காது.

ஓட்டுமொத்தமாக நோக்குகின்ற போது அரசு, இத் திட்டத்தை வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலன் கருதியே ஆரம்பித்தது அத்துடன் இன்று நடந்து கொண்டிருக்கின்ற இவ்வாறான தில்லு முல்லுகளும் இருட்டடிப்புக்களும் அரசிற்கோ அல்லது அதனோடிணைங்த அதிகாரிகளுக்கோ தெரிந்திருக்க நியாயமில்லை. சில்லறைக் காசுகளான சில வைத்தியத் துறை சார் ஊழியர்களும் மருந்துச் சாலைப் பணியாளர்களுமே இப்படியான தரம் குறை வேலைகளை முன்னெடுக்கின்றனர். போய், களவு என்றுமே வாய்மையை விஞ்சியது கிடையாது. அது என்றோ ஒரு நாள் வெளிவரும் ஐஸ்லாண்ட் பூகம்பம் போல்.


சவூதியிலிருந்து ஹிபாஹ் ஹன்ஸிறாஹ்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com