Friday, April 16, 2010

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு: வானில் மாபெரும் சாம்பல் மண்டலம்.

ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து வானில் சாம்பல் தூசி மண்டலம் பரவியுள்ளதையடுத்து உலகம் முழுவதும் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2001ம் ஆண்டு நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் உலக அளவில் விமான சேவை பெரும் அளவில் பாதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

ஐஸ்லாந்தின் அயாபியாபிளாயெர்குதுல் (ay-yah-FYAH'-plah-yer-kuh-duhl) பகுதியில் உள்ள பனி மலையில் உள்ள மாபெரும் எரிமலை கடந்த புதன்கிழமை வெடித்தது. இதிலிருந்து வெளியேறிய எரிமலைக் குழம்பு பல கி.மீ. பகுதிகளில் பரவியுள்ளது.

மேலும் எரிமலைக் குழம்பால் உருகிய பனி மலைகளால் பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. எரிமலை வெடித்தபோது கிளம்பிய சாம்பல் புகை வானில் பல கி.மீ. தூரத்துக்கு சீறியது. இந்தப் புகை மண்டலம் வடக்கு ஐரோப்பாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. எரிமலை அமைந்துள்ள இடத்திலிருந்து 2,000 கி.மீ. தொலைவில் உள்ள பிரிட்டன் வானிலும் இந்த சாம்பல் பரவியது.

இந்தப் புகையில் உள்ள சாம்பல் விமான என்ஜின்களையே செயலிழக்கச் செய்யும் சக்தி வாய்ந்தது என்பதால் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, பெல்ஜியம், அயர்லாந்து உள்பட வடக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா, கனடாவில் சுமார் 8,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

அதே போல இந்த நாடுகளுக்குச் செல்லும் இந்திய விமானங்கள் உள்பட ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க, வளைகுடா, ஆஸ்திரேலியா உள்பட ஏராளமான நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா-ஐரோப்பா இடையிலான பெரும்பாலான விமானங்கள் ரத்தாகிவிட்டன.

இந்த சாம்பல் புகை மண்டலம் கலைய பல நாட்கள் அல்லது பல வாரங்கள் கூட ஆகும் என்று ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இந்த எரிமலை வெடிப்பது இது இரண்டாவது முறையாகும்.

எரிமலை புகைமூட்டம் காரணமாக லண்டன்(UL563) பிரேங் பேட்(UL553) ரோம்(UL501) ஆகிய இடங்களில் இருந்து இலங்கைக்கு வரவிருந்த விமானங்கள் இரத்துசெய்யப்பட்டுள்ளன. பிரேங் பேட்டிலிருந்து 2.55க்கு வரவேண்டிய விமானம் 11.45க்கு வந்து சேரும் என விமானநிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மன்மோகன் சிங் பயணத்தில் மாற்றம்:

இதன் காரணமாக இப்போது பிரேசிலில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்கின் பயணத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று பிராங்பர்ட் வழியாக இந்தியா திரும்ப இருந்த அவர் அதைத் தவிர்த்துவிட்டு நாளை ஜோகானஸ்பர்க் வழியாக நாடு திரும்புகிறார்.

1 comments :

Anonymous ,  April 16, 2010 at 10:23 PM  

please that photo is not killary clinton

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com