சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலம்
தாய்லாந்தில் சனிக்கிழமை நடந்த மோதலில் 21 பேர் கொல்லப்பட்டதையடுத்து பேங்காக்கில் நேற்று அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், சவப்பெட்டிகளுடன் ஊர்வலமாகச் சென்றனர்.
பெரும்பாலான சவப்பெட்டிகள் காலியாக இருந்ததாகவும் இரு பெட்டிகளில் மட்டுமே சடலங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது.
ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பு சிவப்பு சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் பேங்காக் முக்கிய வட்டாரத்தில் ஒன்று திரண்டனர். சனிக்கிழமை பேங்காக்கில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின்போது 21 பேர் கொல்லப்பட்டனர், 800 -க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் நால்வர் போலிஸ்காரர்கள் என்றும் 17 பேர் பொதுமக்கள் என்றும் கூறப்பட்டது.
அந்த மோதலின்போது துப்பாக்கி தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதற்கு இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குறை கூறி வருகின்றனர். அந்த மோதல்களால் அந்நாட்டுப் பிரதமர் அபிசித் விஜஜிவாவின் கைகள் ரத்தக் கறை படிந்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைவர்களில் ஒருவரான புரோம்பன் கூறினார்.
“அவர்களுடன் சிவப்பு சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒருபோதும் சமரசப் பேச்சு நடத்த மாட்டார்கள்,” என்றார் அவர். இந்நிலையில் அந்நாட்டுப் பிரதமர் அபிசித் , தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து பரிசீலிக்கத் தொடங்கியிருப்பதாக உள்ளூர் பத்திரிகைத் தகவல்கள் கூறின.
ஆனால் இத்தகவலை அரசாங்கம் மறுத்துள்ளது. தேர்தலை அக்டோபர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக கூறப்படுவது வெறும் யூகமே என்று அரசாங்கப் பேச்சாளர் பன்டிதன் வட்டன்யாகோன் கூறினார். பிரதமர் அபிசித் உடனடியாகப் பதவி விலக வேண்டும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை சிவப்பு சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் ஆதரவாளர்களான அவர்கள், கடந்த ஒரு மாத காலமாக பேங்காக்கில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தாய்லாந்தில் நீடிக்கும் கலவரத்தால் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. ஏப்ரல்-12 முதல் 15 வரை பேங்காக்கில் நடைபெறவிருந்த புத்தாண்டு தின முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சூளுரைத்துள்ளனர். பேங்காக்கில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருப்பதையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொருட்படுத்தவில்லை.
0 comments :
Post a Comment