எனது மகளை கண்டுபிடிக்கும்வரை புதுவருடம் கிடையாது. உதயகுமாரி.
புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையே ஏற்பட்ட யுத்தத்தில 2009ம் ஆண்டு கணவனை இழந்துள்ள 39 வயதுடைய உதயகுமாரி தனது மகளை கண்டுபிடிக்கும்வரை தனக்கு புதுவருட களியாட்டங்கள் கிடையாது என்கின்றார்.
16 வயதுடைய மகள் 2007ம் ஆண்டு புலிகளினால் பலவந்தமாக படையில் இணைத்துக்கொள்ளப்பட்டதாகவும் மகளுடன் தொடர்பில் இருக்கும் பொருட்டு தாம் புலிகளின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வாழ நிர்பந்திக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள மக்கள் புத்தாண்டைக் கொண்டாடும் வாரம் இது. ஆனால் நான் இழந்த எனது அன்புக்குரியவர்களை நினைத்து ஒவ்வொரு மணித்தியாலயங்களும் விம்மி அழுதவண்ணம் தொலைந்த எனது மகளை தேடிக்கொண்டிருக்கின்றேன்.
புலிகள் சிறுவர்களை படையில் இணைப்பதற்காக பலவந்தமாக கடத்தி கொண்டிருந்தார்கள். எனது மகள் அவ்வியக்கத்தில் சுயமாக இணைந்து கொள்ளவில்லை. அவள் மிகவும் அழகானவள். அவளை புலிகள் கிளிநொச்சி நகரிலிருந்து கடத்திச் சென்று போர் முனையில் உள்ள முகாம் ஒன்றில் அடைத்து வைத்திருந்தார்கள். அவள் என்றுமே வன்செயல்களை விரும்பியவள் அல்ல.
நாங்கள் இன்று உதவியற்ற அநாதைகளாக்கப்பட்டுள்ளோம். அன்று கிளிநொச்சியில் புலிகள் சகலவற்றையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அவர்களின் பலவந்த ஆட்சேர்ப்புக்கு எதிராக எம்மால் வாய்திறந்து பேச முடியாது இருந்தது.
யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நாம் புலிகள் கூறிய திசையை நோக்கியே நகர்ந்தோம். நூம் யுத்த பிரதேசத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை . காரணம் எமது மகள் புலிகளுடன் இருந்தார். அவரை விட்டுவிட்டு ஓடித்தப்புவது நியாயமானது என நாம் கருதவில்லை. இறுதிவரை மகளை மீட்கவே முயற்சி செய்தோம்.
கடைசியில் 2009 சித்திரையில் நாம் யுத்த பிரதேசத்தை விட்டு வெளியேற முடிவு செய்தோம். காரணம் அப்போது யுத்தம் அகோரமடைந்திருந்தது. செல்வீச்சுக்கள் அதிகரித்தன.
நாம் முல்லைத்தீவிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி ஒடிக்கொண்டிருந்தபோது எனது கணவனுக்கும் மகனுக்கும் நடுவே செல்லொன்று வீழ்ந்து வெடித்தது. அவர்கள் இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். எனது கணவரின் உடல் துண்டுகளாக கிழித்தெறியப்பட்டதை நான்கண்டேன். அப்போது எனது உணர்வுகள் யாவும் இறந்து விட்டன. நான் இப்போது வாழும் பிணமாகவே உள்ளேன்.
கடந்த புதுவருடம் முடிந்த சில நாட்களில் எனது அன்புக்குரிய உறவுகளை இழந்தேன். எவ்வாறு என்னால் மேலும் ஒரு புது வருடத்தை கொண்டாட முடியும்.
எனது மகளை கண்டுபிடிப்பதற்காக நான் அதிகாரிகளை அணுகினேன் எனக்கு சரியான உதவி கிடைக்கப்பெறவில்லை. தயவு செய்து எனக்கு உதவுங்கள். புலிகளால் கடத்தப்பட்ட பல சிறுவர் சிறுமியர்கள் புனருத்தாபனம் அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அந்த பெயர்பட்டியலில் எனது மகள் இல்லை.
எனது மகளை கண்டு பிடிக்கும் வரை எனக்கு புதுவருடம் கிடையாது. ஆனால் எங்கு தேடுவது என புரியவில்ல.
0 comments :
Post a Comment