அணு ஆயுத குறைப்பு புதிய ஒப்பந்தம்: அமெரிக்கா, ரஷ்யா கையெழுத்து!
உலகின் இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவும், ரஷ்யாவும் தங்களிடையே உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை மேலும் 30 விழுக்காடு குறைத்துக் கொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. செக்கோஸ்லாவிய நாட்டின் அதிபர் மாளிகையில் நடந்த முக்கிய சந்திப்பில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், இரஷ்ய அதிபர் திமித்ரி மெத்விடேவும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளிடமும் தற்போது கைவசமுள்ள 2,200 அணு ஆயுதங்களில் 30 விழுக்காட்டைக் குறைத்து 1,550 என்ற அளவிற்கு வரும் 2012ஆம் ஆண்டிற்குள் குறைத்துக்கொள்ள வழிவகுக்கிறது.
1991ஆம் ஆண்டு அணு ஆயுதங்கள் குறைப்பு உடன்படிக்கையில் (Strategic Arms Reduction Treaty - START) அமெரிக்காவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டன. அதன் பயனாக இரு நாடுகளும் பல ஆயிரக்கணக்கில் தங்களிடையே குவித்து வைக்கப்பட்டிருந்த அணு ஆயுதங்களை செயலிழக்கச் செய்தன. அதில் பொருத்தப்பட்டிருந்த அணு வெடி பொருளை எடுத்து அணு மின் உலைகளில் பயன்படுத்த மற்ற நாடுகளுக்கு வழங்கின.
அந்த 20 ஆண்டுக்கால ஒப்பந்தம் கடந்த டிசம்பரில் நிறைவு பெற்றதையடுத்து, அதற்கு மாற்றாக, அணு ஆயுதங்கள் குறைப்பு ஒப்பந்தம் என்ற ஒன்றை உருவாக்கி அதில் தற்போது இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ் அணு ஆயுதங்கள், நீண்ட தூர ஏவுகணைகள் ஆகியன செயலிழக்கச் செய்யப்படும். ஏவுகணை தடுப்பு ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தின் கீழுள்ள அணு ஆயுத ஏவுகணைகள் இந்த ஒப்பந்தத்திற்கு உட்பட்டதல்ல என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டப் பிறகு பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, “ஒரு நீண்ட பயணத்திற்கான முதல் படி இது” என்று கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment