Sunday, April 25, 2010

இராணுவம் எவருக்கும் புலப்படாத புதிய தொழில்நுட்பத்துடன் செல்படுகின்றது. கோத்தபாய

Sunday, April 25, 2010 [கவிநிலா]விடுதலைபுலிகளை தோற்கடிக்க இலங்கை ராணுவத்திற்கு பல போர் தந்திரங்களை அள்ளி வழங்கியர் எனவும் போர் தந்திரங்களில் மிகவும் கெட்டிக்காரர் எனவும் கொழும்பு அரசு வட்டாரங்களால் புகழப்படுபவருமான இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்திய பாதுகாப்பு பத்திரிக்கையொன்றுக்கு [ Indian Defence Review ] வழங்கியுள்ள நேர்காணலில் கூட்டம் கூட்டமாக தெருக்களில் இருந்த ராணுவ பாதுகாப்பு தற்போது அகற்றப்பட்டு யாருக்கும் புலப்படாத வகைகளில் திடமான தொழில்நுட்பம் மற்றும் மதிநுட்பத்துடன் எங்கள் வீரர்கள் தற்போது செயலாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ளார். அத்துடன் ராணுவத்தை அரசியலாக்கியது , தேசத் துரோகம் போன்ற குற்றங்களுக்காக முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா மீது வழக்கு தொடரப்படலாம் அவர் கூறியுள்ளார்.

1. இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அரசியலில் நுழைந்தது குறித்த அரசின் கருத்து என்ன?
எங்களுடன் நான்கரை ஆண்டுகளாக ராணுவத்தில் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக பணியாற்றியவர் பொன்சேகா. தீவிரவாதத்திற்கு எதிரான போரின்போது அரசுடன் ஒத்துழைக்காதவர்களும் , அவரையும் அவர் தலைமை தாங்கிய இராணுவத்தை விமர்சித்தவர்களுடனம் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது அதிபராக வேண்டும் என்ற அவருடைய சொந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளத்தான் என்பது மட்டும் தெளிவாகிறது. அவர் சொந்த நோக்கங்களுக்காக தேசிய விடயங்களை பயன்படுத்தியதன் மூலம் தவறான வழிகாட்டியுள்ளார்.

2. சிறிலங்கா அரசு அவர் தேச துரோகமிழைததாக கூறுகிறதே.... ?
அரசியலுக்குள் வர விரும்பிய நாள் முதற்கொண்டு பொதுமக்களின் அனுதாபங்களை பெறுவதற்காக ராணுவ பிரச்சாரங்களையும் திட்டங்களையும் தவறாக பயன்படுத்தி வந்துள்ளார். இதை தேசத்துரோகமாகவே அரசு கருதுகிறது.

3. இதற்காகத்தான் அவர் கைது செய்யப்பட்டாரா?
அரசினால் எடுக்கப்பட்ட இந்த முடிவில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. நாங்கள் மிகவும் சரியானதையே செய்து வருகிறோம். விரும்பும் எந்த மனிதருக்கும் அரசியலுக்கு வரும் உரிமை உண்டு. ஆனால் அந்த உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கென சில விதிகளும் ஒழுங்குமுறைகளும் உள்ளது. பின்பற்றும் முறைகள் சரியா தவறா எனபதையும் பார்க்க வேண்டும்.

4. பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் என்னென்ன?
அவர் ராணுவத்திற்கு செய்ததே மிகப்பெரிய குற்றமாகும். எங்கள் ராணுவம் பல வருடங்களாகவே அரசியலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. ராணுவம் , கடற்படை , விமானப்படை போன்றவை அரசியலுக்கு அப்பாற்பட்டவை. அனால் விரும்பத்தகாத வகையில் பொன்சேகா ராணுவத்திற்குள் அரசியலை புகுத்தி விட்டார். ராணுவத்திலிருந்து முழுமையாக விலகிய பின் அரசியலில் ஈடுபட்டிருக்க வேண்டும். ராணுவம் என்பது ஒரு நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. 38 வருடங்களாக ராணுவத்தில் பணியாற்றியதுடன் தளபதியாக அதனை வழி நடத்தியும் சென்றுள்ளார். ராணுவ தளபதியாக தொடர்ச்சியாக ஒழுங்கு கட்டுப்பாடுகள் குறித்து பேசியும் வந்துள்ளார். ஆனால் தன் சுய மற்றும் அரசியல் லாபங்களுக்காக அவரே ராணுவத்தை தவறாக பயன்படுத்தி விட்டார். அவர் தன்னுடைய அரசியல் பிரச்சாரங்களில் மூத்த ராணுவ அதிகாரிகள் சிலரையும் பயன்படுத்தி விட்டார். ராணுவ தளபதிகளுக்கான அதிகாரபூர்வ குடியிருப்பிலிருந்தே தன் பிரசாரங்களையும் தொடங்கி உள்ளார். அரசால் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த ராணுவ சாதனங்களையும் , ராணுவ உயரதிகாரி என்ற பதவியையும் அரசியலுக்கு பயன்படுத்தியுள்ளார். அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதாலும் யாரும் அவர் மீது இந்த நிலையில் அதை தவறாக பார்க்க மாட்டார்கள் என்றும் கருதி பல சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்துள்ளார்.

5. பொன்சேகாவை கைது செய்ததன் மூலம் அரசு ராணுவ நடவடிக்கைகளில் அரசியலை புகுத்த விரும்பவில்லை என தெரிவிக்க முயல்கிறதா?
ராணுவத்தில் அரசியலை புகுத்துவதை தடுப்பது அரசு, ராணுவத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் மற்றும் என்னுடைய கடமையும் ஆகும். இது போன்ற குற்றங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அது தவறான தகவலை ராணுவத்திற்கு எடுத்துச் சென்று விடும். இது போன்ற குறைகளை களைய வேண்டியது மிகவும் அவசியம். பொன்சேகா மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசியல் ரீதியாக புத்திசாலித்தனமில்லை என்ற போதிலும் கூட சரியானவற்றை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

6. எது எப்படியிருப்பினும் ராஜபக்ச மீண்டும் அதிபராகி விட்டார். இப்போது அரசின் முதல் முக்கியத்துவம் எதற்கு கொடுக்கப்படும்?
விடுதலைபுலிகளின் தீவிரவாதத்தால் கடந்த 30 வருடங்களாக ஏற்பட்ட சேதங்கள் யாவரும் அறிந்ததே. பொருளாதாரத்தில் ஏற்பட்ட தேக்கநிலை இந்த தீவிரவாதத்தால் மறைக்கப்பட்ட மிகப் பெரிய சேதம். உலகம் முழுதும் தொழில்நுட்பத்தில் அசுர வேகத்தில் முன்னேறிவிட்ட இந்த காலத்தில் சிறிலங்காவில் தீவிரவாதத்தை முற்றிலுமாக அகற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டதால் தொழில்நுட்ப ரீதியில் மிகவும் பின்தங்கி உள்ளது. இதன் முதல் கட்டமாக அனைத்து முதலீட்டாளர்களும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலகத்திற்கு அழைக்கப்படுவார்கள்( ! ). முதலீடுகளின் பாதுகாப்பு குறித்து கேட்டுக் கொண்டுள்ள பலதுறை முதலீட்டாளர்களையும் நான் சந்திக்க உள்ளேன். கடந்த ஐந்து வருடங்களாக தீவிரவாதத்தை முற்றிலும் அகற்றுவது குறித்த முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறேன்.

7. சிறிலங்கா தற்போது மீண்டும் உத்திரவாதம் அளிப்பதால் முதலீடுகள் பெருக வாய்ப்புள்ளதா?
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு வந்து உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை எட்டுவதும் அதன் பலன்களை இலங்கை மக்களுக்கு கொண்டு செல்வதுமே உண்மையான வெற்றியாகும். கிராமப்புற வளர்ச்சிக்கு முதலிடம் கொடுத்து அந்த பகுதிகளின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டியது இந்த சூழ்நிலையில் மிகவும் அவசியம்.

8. ஏன் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு மட்டும் முதலிடம் ?
எங்கள் ராணுவ வீரர்களில் பலர் கிராம பகுதிகளிலிருந்து வந்தவர்கள். அவர்கள் தான் இந்த போரின் நிஜமான நாயகர்களும் கூட. இந்த போரின் போது மரணமடைந்தவர்களில் 84 சதவீத வீரர்கள் 1 அல்லது 2 வருட ராணுவ அனுபவம் மட்டுமே பெற்றவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் கிராம பகுதிகளிருந்து வந்தவர்கள் தான்.

9. இது ராணுவத்தை மகிழ்ச்சியாக வைப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவா?
இலங்கை இராணுவப்படையினர் மிக அதிக அளவில் தியாகங்களை செய்துள்ளனர். கடந்த முப்பது வருடங்களில் 30,000 ராணுவ வீரர்கள் பணியின் போது உயிரிழந்துள்ளனர் மற்றும் 20,000 ராணுவ வீரர்கள் கை கால்கள் போன்றவற்றை இழந்துள்ளனர்.

10. மீண்டும் அரசாங்கம் ராணுவத்தை தயார் நிலையில் வைக்க முயற்சிகள் மேற்கொள்வது எதற்காக?
விடுதலைபுலிகளின் தீவிரவாதம் மீண்டும் நாட்டிற்குள் வர அனுமதிக்க முடியாது. முதற்கட்ட போர் நிறைவு பெற்று விட்டது. விடுதலைபுலிகளின் போர் இயந்திரங்கள், வன்னியில் உள்ள அவர்களின் தலைமை ஆகியவை கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டு விட்டது. போரின் இரண்டாவது கட்டம் வேறு விதத்தில் இருக்கலாம். அதனால் நாங்கள் ஓய்வெடுக்க முடியாது. எங்கள் ராணுவத்தின் தயார் நிலை மிகவும் உயரிய அளவிலும் அதே நேரம் யாருக்கும் தெரியாமலும் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. எங்களுடைய பாதுகாப்பு திட்டங்களிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

11. போரில் சண்டையிடுவதை விட அமைதியை நிலைநாட்டுவது சிரமமாக உள்ளதா?
நாங்கள் மிக உயர்ந்த மதிநுட்பம் மற்றும் அதனை செயல்படுத்தும் திறன் ஆகியவற்றில் முன்னேற வேண்டும். ராணுவ மதிநுட்பத்திலும் மேம்பாடு கண்டாக வேண்டும். தேசிய மதிநுட்ப கட்டமைப்புக்களையும் மேம்படுத்தியாக வேண்டும். காட்டிற்குள் மீண்டும் விடுதலைபுலிகளின் பிரதிநிதிகளோ, அவர்கள் ஆதரவாளர்களோ அடித்தளங்கள் அமைப்பதை தடுத்தாக வேண்டும். கடல் வழியாக ஆயுதங்கள் எடுத்துவரப்படா வண்ணம் கடலோர காவலையும் மேம்படுத்த வேண்டும். இதற்கு முன்னர் கடல்வழியாக விடுதலைபுலிகள் கப்பல்களில் ஏராளமான ஆயுதங்களை கொண்டு வந்தது எங்களுக்கு தெரியும். மீண்டும் இன்னொரு தீவிரவாத இயக்கம் அதே போன்ற நாச வேலைகளை செய்வதை தடுக்க கடல் வழி பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. மீன் பிடித்தல் போன்ற எங்கள் நாட்டு பொருளாதரத்தை பாதிக்கக்கூடிய அம்சங்களில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இலங்கை மீதான தோற்றத்தை மாற்ற விரும்புகிறோம். கூட்டம் கூட்டமாக தெருக்களில் இருந்த ராணுவ பாதுகாப்பு தற்போது அகற்றப்பட்டு வருகிறது. யாருக்கும் புலப்படாத வகைகளில் திடமான தொழில்நுட்பம் மற்றும் மதிநுட்பத்துடன் எங்கள் வீரர்கள் தற்போது செயலாற்றி வருகின்றனர்.

12. நாட்டிற்கு வெளியில் உள்ள விடுதலைப்புலி அமைப்பினரால் அச்சுறுத்தல்கள் ஏதும் உள்ளதா?
இலங்கைக்கு வெளியே முக்கியமாக ஐரோப்பா, அமெரிக்க மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நல்ல தொடர்புகளையும் வலையமைப்புக்களையும் புலிகள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். கடந்த முப்பது வருடங்களாக நிதி ஆதாரங்களுக்கும் அவர்கள் இவற்றையே பயன்படுத்தி வந்துள்ளனர். மிகவும் திடமான இலங்கை புலம்பெயர் சமுதாயம் பல நாடுகளில் உள்ளது. இவர்களில் பலர் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். புலிகளுக்கு பணம் முழுவதும் இவர்களாலேயே திரட்டப்படும் அளவிற்கு ஆற்றலை பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஆயுதங்கள் தயாரிக்கும் கும்பல்கள், பிரச்சார வலைகள் ஆகியவற்றுடனும் இவர்களுக்கு நெருங்கிய தொடர்புண்டு. புலம்பெயர்ந்த சமுதாயம் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் விடுதலைபுலிகளின் சொத்துக்கள் பல தொழில்களில் முதலிடப்பட்டுள்ளது. சில வெளிநாட்டு அரசுகளின் உதவியுடன் குமரன் பத்மநாதன் மற்றும் ராணுவ ஆயுதங்களை விடுதலைபுலிகளுக்கு வழங்கி வந்த ராஜன் ஆகியோரை ஜனவரி 28, 2010 அன்று எங்கள் தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.

13. கொழும்பின் ராஜ தந்திரத்திற்கு கிடைத்த வெற்றி போல் தெரிகிறதே....?
விடுதலைபுலிகள் இயக்கத்தை முற்றிலுமாக செயலிழக்கச் செய்ய சர்வதேச நாடுகள் உதவ வேண்டும். மேற்கத்திய நாடுகளில் வசித்து வரும் பல புலம் பெயர் சமுதாயத்தினரே இதற்கு பெரிய முட்டுக் கட்டையாக உள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com