தேர்தல் ஆணையாளரின் கட்டளையை மீறி நாவலப்பிட்டியில் தேர்தல் பிரச்சாரம்.
எதிர்வரும் 20 ம் திகதி நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் இடம்பெறவுள்ள மீள்வாக்கெடுப்பிற்காக தேர்தல் பிரச்சாரங்கள் எதுவும் நடாத்தப்படக்கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளபோதும் அமைச்சர்களான மஹிந்தானந்த அழுத்ககே மற்றும் கேகலிய ரம்புக்வெல ஆகியோர் தேர்தல் பிச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
55000 வாக்காளர்களுக்காக இடம்பெறும் மேற்படி தேர்தலில் விருப்பு வாக்குகளைப் பெறுவதற்காகவே அமைச்சர்கள் இருவரும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். கண்டிமாவட்டத்தில் வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் மற்றும் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் 123 000 வாக்குகளைப் பெற்று கெகலிய ரம்புக்வல முதலிடத்திலும் இரண்டாம் இடத்தில் அழுத்தகமகே அவர்களும் உள்ள நிலையில் இப்போட்டி நிலவுகின்றது.
அதேநேரம் நாவலப்பிட்டிய பகுதிக்கு 400 வீரர்கள் அடங்கிய விசேட அதிரடிப்படை அணியொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பும், தேர்தல் தினத்திலும், அதன் பின்னரும் தொடர்ந்து அரசியல் ரீதியான பல அசம்பாவிதங்கள் குறித்த முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து பொலிஸ் மா அதிபர் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள மீள் வாக்களிப்பு வரை சிறந்த பாதுகாப்பினை வழங்கும் பொருட்டே மேற்படி அணி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கடந்த 8ஆம் திகதிக்குப் பின்னர் இதுவரை மனோ கணேசன், ஏ.ஆர்.எம்.அப்துல் காதர், திலும் அமுனுகம உட்படப் பல அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
20ஆம் திகதி இடம்பெறவுள்ள மீள் வாக்களிப்புக்கான பிரசாரப் பணிகளை எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு வரை முன்னெடுக்க முடியும் என்பதனால் அதுவரை இடம்பெறும் அரசியல் கூட்டங்கள் மற்றும் பிரசாரப் பணிகளுக்கு இடையுறு ஏற்படாத வகையில் இவ்விசேட அதிரடிப்படை சேவையாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments :
Post a Comment