இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோர முடியாதாம்.
இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்களின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியிருப்பதாக ஆஸ்ட்ரேலியா அறிவித்திருக்கிறது. இந்த இரு நாடுகளிலும் மாற்றமடைந்து வரும் சூழ்நிலைகளின் அடிப்படையில் இந்தத்தீர்மானத்தை எடுத்திருப்பதாக ஆஸ்ட்ரேலியாவின் குடியுரிமைத்துறை அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் தெரிவித்திருக்கிறார்.
இந்த நடவடிக்கையானது ஆட்களை கடத்திவருவோருக்கான வலுவான செய்தியாகும் என்று அவர் மேலும் கூறியுள்ளார். படகுகளில் வருவோர் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் அதிகரித்திருப்பதால் ஆஸ்ட்ரேலியா அரசுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தமே இந்த நடவடிக்கைக்கு காரணமெனக் கருதப்படுகிறது. இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தோரே ஆஸ்ட்ரேலியாவில் அண்மைக்காலமாக அதிகளவுக்கு புகலிடம் கோருகின்றனர்.
ஆஸ்ட்ரேலியா புகலிடம் கோருவோரைத் தடுத்து வைத்திருக்கும் கிறிஸ்மஸ் தீவுக்கு அப்பால் கடந்த 7ஆம் தேதி 70 பேருடன் படகு மூழ்கியதையடுத்து நேற்று இந்த புகலிடம் கோருவோர் தொடர்பான அறிவிப்பை விடுப்பதற்கான நிலைமை ஏற்பட்டிருக்கலாமென கூறப்படுகிறது.
ஆஸ்ட்ரேலியாவில் 2007 இல் தற்போதைய அரசு பதவிக்கு வந்த பின்னர் அகதிகளை ஏற்றி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை ஆஸ்ட்ரேலிய கடற்படை இடைமறித்திருந்தது. இதனால், பிரதமர் கெவின் ரூட் அரசியல் ரீதியாக கடுமையான அழுத்தத்தை எதிர்நோக்கினார்.
ஆஸ்ட்ரேலியாவின் குடிவரவு தொடர்பான முறைமையை இந்த தீர்மானம் வலுவடையச்செய்யும் என்று குடிவரவுத்துறை அமைச்சர் இவான் கிறிஸ் தெரிவித்துள்ளார். படகுகளில் ஆஸ்ட்ரேலியாவுக்கு செல்வோர் இனிமேல் புகலிடம் கோரி விண்ணப்பிக்க முடியாது.
மூன்று மாதங்களின் பின்னர் இலங்கையர்களின் நிலைமை தொடர்பாக மீளாய்வு செய்யுமென ஆஸ்ட்ரேலிய அரசு கூறுகிறது. அதேசமயம் ஆப்கானிஸ்தானியர் தொடர்பாக 6 மாதங்களின் பின் மீளாய்வு செய்யப்படும் என்றும் ஆஸ்ட்ரேலியா தெரிவித்திருக்கிறது.
0 comments :
Post a Comment