Friday, April 30, 2010

நித்யானந்தாவுடன் இருப்பது நான் அல்ல - ரஞ்சிதா

நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்தது போன்ற காட்சிகள் போலியாக உருவாக்கப்பட்டவை அதில் இருப்பது நான் அல்ல, எனவே இனியும் அந்த காட்சிகளை ஒளிபரப்பினால் மான நஷ்ட வழக்குத் தொடருவேன் என்று நடிகை ரஞ்சிதா தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இணையதளமான கூகுள், அதன் துணை வீடியோ இணையதளமான யூ டியூப் ஆகியவற்றிற்கு உடனடியாக அந்த வீடியோக் காட்சிகளை நீக்குமாறு டெல்லியில் உள்ள சட்ட நிறுவனமான பி.எம். லா சேம்பர்ஸ் தாக்கீது அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக ரஞ்சிதா சார்பாக அவரது வழக்கறிஞர் பிரஷாந்த் மென்டிரட்டா செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார்.

ரஞ்சிதா அளித்ததாகக் கூறி சில பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ள செய்திகள், பேட்டிகள் அனைத்தும் புனைந்து கூறப்பட்டவை, தவறானவை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் நித்யானந்தாவுடன் காட்டப்பட்ட படுக்கையறை வீடியோ காட்சிகளில் இருப்பது ரஞ்சிதா அல்ல. அது போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய சட்டங்களின் படி அந்த வீடியோ காட்சியை எடுத்தது, அதனை பொதுமக்கள் பார்வைக்கு ஒளிபரப்பியது சட்ட விரோதமான செயல் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மன உளைச்சல் தரும் நிகழ்வுகள் குறித்து ரஞ்சிதா ஊடகங்களுடன் இனி பேசப்போவதில்லை என்றும் பொது வாழ்க்கையில் இருந்து தான் தனித்து இருக்க விரும்புவதாகவும் ரஞ்சிதா தெரிவித்துள்ளதாக வழக்கறிஞர் மென்டிரட்டா தெரிவித்தார்.

ஒரு வீடியோ காட்சியை ஒளிபரப்பும் முன் அதில் இருப்பது அந்த குறிப்பிட்ட நபர்தானா, அது உண்மையான வீடியோவா அல்லது அது போலியாக உருவாக்கப்பட்டதா என்றெல்லாம் விசாரிக்காமல் சில சானல்கள் அந்த வீடியோ காட்சிகளை ஒளிபரப்புகின்றன. எனவே அது நீதிமன்றத்தில் சாட்சியாக பயன்படுத்தப்படுவதற்கு முன் அதன் அசல் தன்மை நிரூபிக்கப் பட்டிருக்கவேண்டும். ஆனால் இந்த வீடியோ காட்சிகள் பல சட்ட மீறல்களை செய்துள்ளது.

எனவே இந்த நிகழ்வுகளால் கடந்த 2 மாத காலமாக எனது கட்சிக்காரரின் வாழ்க்கையே பாதிக்கப்பட்டு விட்டது. மன உளைச்சல் ஏற்பட்டு வாழ்வாதாரமும் பறி போயுள்ளது.

இதற்குக் காரணமானவர்கள் மீது ரஞ்சிதா வழக்கு தொடரவுள்ளார். என்று வழக்கறிஞர் மென்டிரட்டா அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

30 நாட்களில் 174 தடவை ரஞ்சிதாவுடன் பேசிய சாமி
காமக் களியாட்டம் உள்ளிட்ட ஏராள குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகி உளவுப் போலிஸ் பிடியில் சிக்கி இருக்கும் நித்யானந்தா சாமியார், தன் பக்தையான திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் 30 நாட்களில் 174 தடவை தெலைபேசியில் பேசி இருக்கிறார்.

“இமாச்சலப் பிரதேசத்தில் இருந்தபோது சாமியார் தன்னுடைய பரம பக்தையான நடிகை ரஞ்சிதாவுடன் தொலைபேசியில் 174 தடவை (நாளுக்கு ஏறக்குறைய ஆறு தடவை) பேசி இருக்கிறார்,” என்று உளவு போலிஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதற்காக சாமியார் ஏழு கைத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.

நடிகை ரஞ்சிதாவும் சாமியாரும் நெருக்கமாக இருந்த வீடியோ படம் வெளியானதை அடுத்து மறைவிடத்தில் இருந்து அளித்த ஒரு பேட்டியில், சாமியார் நடிகையைப் பற்றி பல விவரங்களைத் தெரிவித்தார். “நடிகை ரஞ்சிதா நேற்று, இன்று, நாளை என்றும் என் பரம பக்தை,” என்று சாமியார் கூறி இருந்தார்.

சாமியார் கைது செய்யப் பட்டாலும் நடிகை எங்கு இருக்கிறார் என்பது இன்னமும் தெரியவில்லை. தொலைபேசியை வைத்து சாமியாரை மடக்கிய உளவுப் போலிஸ், நடிகை ரஞ்சிதாவையும் விரைவில் கைது செய்துவிடுவோம் என்று நேற்று தெரிவித்தது.
புலன் விசாரணைகளில் சாமியார் அறவே ஒத்துழைக்க வில்லை என்று சொல்லும் போலிஸ், உண்மை கண்டறியும் சோதனையை அவரிடம் நடத்தப் போவதாகவும் அறிவித்து உள்ளது.
உளவுப் போலிஸ் பிடியில் இருக்கும் சாமியார், தனக்கு நெஞ்சு வலிப்பதாகத் தெரிவித்ததை அடுத்து மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஆனால் அவர் பூரண நலமாக இருப்பதாகச் சொல்லி அவரைப் போலிசிடமே அரசு மருத்துவர்கள் ஒப்படைத்துவிட்டனர். சாமியார் நித்யானந்தாவிடம் விசாரணை தொடர்கிறது என்று போலிஸ் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com