Tuesday, April 20, 2010

கண்டி - திருமலை மீள் வாக்களிப்பு இடம்பெறுகின்றது.

கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி தேர்தல் மீள் வாக்களிப்பு இடம் பெறவுள்ள 37 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை வாக்களிப்பு இடம் பெறுவதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. இன்று இடம் பெறவுள்ள தேர்தலில் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியிலிருந்து 50,107 பேர் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர். வாக்களிப்பில் ஈடுபடுகின்ற வாக்காளர்களின் இடது கையின் நடுவிரலில் மை பூசப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கடந்த 8 ஆம் திகதி இடம் பெற்ற பொதுத்தேர்தலின் போது நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையங்களில் 37 வாக்களிப்பு நிலையங்களில் இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட முறைகேடுகளால் இந்த வாக்களிப்பு நிலையங்களில் வழங்கப்பட்ட வாக்களிப்புக்கள் இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று மீள்வாக்களிப்பு இடம் பெறுகின்றது. இன்று இடம் பெறவுள்ள வாக்களிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக 100 உத்தியோகஸ்தர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் மீள்வாக்களிப்பு இடம் பெறவுள்ள நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகளுடன் தேர்தல் பணிகளில் ஈடுபடுகின்ற உத்தியோகஸ்தர்கள் நேற்று 19 ஆம் திகதி முற்பகல் வேளையில் பொலிஸ் பாதுகாப்புடன் கண்டி மாவட்டச் செயலகத்திலிருந்து குறிப்பிட்ட நிலையங்களுக்குச் சென்றனர். ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் ஒரு இன்ஷ்பெக்டரும் 7 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று பிற்பகல் 4 மணிக்கு பூர்த்தியடையவுள்ளன. இதனைத்தொடர்ந்து வாக்குப்பெட்டிகள் கண்டி தேர்தல் செயலகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள 6 வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென கண்டி மாவட்டச்செயலாளர் கோத்தபாய ஜெயரட்ண தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பு தொடர்பாக முறைப்பாடுகளை தேர்தல்கள் ஆணையாளருக்கு முன்வைப்பவர்கள் கீழ்க்காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் கோரியுள்ளார்.

நாவலப்பிட்டி வாக்கெடுப்புப் பிரிவு - 011-2877608
திருகோணமலை வாக்கெடுப்புப் பிரிவு - 011-2877609

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com