மனித உரிமை மீறல்கள்: பிரிட்டன் புகாருக்கு இலங்கை ஆட்சேபம்
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மனித உரிமைகள் குறித்து பிரிட்டன் தெரிவித்துள்ள கருத்துக்கு இலங்கை அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் அயலுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சிறிலங்காவுடனான உறவு தொடர்பாக மூன்று முக்கிய விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
முதலாவதாக வன்முறைகளை பற்றி குறிப்பிட்டிருந்த அவர், வன்முறை எந்த நாட்டுக்கும், சமூகத்திற்கும் உதவப்போவதில்லை எனவும், அதனை கட்டுபடுத்தவேண்டும் எனவும், இரண்டாவதாக மனித சமூக பொருளாதாரங்கள் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் அனைத்து தரப்பினரும் சமமாக நடத்தப்படவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக ஜனாதிபதி தேர்தல்காலத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாகவும், ஊடக சுதந்திரம் தொடர்பாகவும் அவர் கவலை வெளியிட்டிருந்தார். ஒரு சமூகத்தில் சிறந்த ஐனநாயகம் தேர்தல்களை நடத்துவதில் மாத்திரமல்லாமல், சுதந்திரமாக தகவல்களை வெளியிடுவதிலும், சுதந்திரமான நீதித்துறையிலும் இருந்துதான் உருவாகிறது என அவர் மேலும் கூறியிருந்தார்.
இந்நிலையில்,இலங்கையில் தேர்தல் நடைபெற இன்றும் ஒருவாரம் இருக்கும் காலப்பகுதியில் பிரிட்டன் வெளியிட்ட இந்த கருத்துகள் குறித்து இலங்கை சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு அதனை நிராகரித்தும் உள்ளது.
விடுதலைப்புலிகளுக்க எதிராக இலங்கை அரசு போரில் மேற்கொண்ட வெற்றியினை மழுங்கடிக்க பிரிட்டன் முயல்வதாகவும், அரசு உயர்மட்ட குழு ஒன்று இதற்கு தகுந்த பதில் அளிக்கும் என்றும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment