பிரபாகரனின் தாய் இந்தியாவினுள் நுழைய அனுமதி மறுப்பு.
மலேசியாவிலிருந்து விமானம் மூலம் சென்னை சென்னை சென்ற புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி நாட்டினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவர் மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையும், தாயார் பார்வதி அம்மாளும் இலங்கை அரசின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்தனர். சமீபத்தில் வேலுப்பிள்ளை இறந்து விட்டதை அடுத்து பிரபாகரனின் குடும்பத்தினர் இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்ட தொடர்புகளை அடுத்து, சிவாஜிலிங்கத்தின் தேர்தல் பிரச்சார செயற்பாடுகளுக்கு ஏதுவாக அவர் மலேசியா அனுப்பட்டார். மலேசியாவில் சுமார் ஒருமாதகாலம் தங்கியிருந்த அவர் இந்தியா செல்ல முற்பட்டுள்ளார்.
இந்தநிலையில், சென்னை விமான நிலையத்துக்கு, மலேசியாவில் இருந்து, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்றிரவு 10.45 மணி அளவில் வந்து சென்றிறங்கியது. அந்த விமானத்தில் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இருப்பதாக தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி விசாரணை நடத்தினர். அதில், பிரபாகரனின் தாயார் பெயரைக் கொண்ட பார்வதியம்மாள் என்ற 70 வயது பெண் இருப்பது தெரியவந்தது. அவருடன் மற்றொரு பெண்ணும் வந்திருந்தார். அவர்கள் இருவரைத் தவிர்த்து மற்ற பயணிகள் அனைவரையும் விமானத்தில் இருந்து இறங்கிச் செல்ல குடியுரிமை அதிகாரிகள் அனுமதித்தனர்.
அதன்பிறகு, அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் வந்திருப்பது பிரபாகரனின் தாயார்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. தனக்கு பக்கவாத நோய் இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை பெறுவதற்காகவுமே சென்னை வந்ததாக அதிகாரிகளிடம் பார்வதிஅம்மாள் கூறினார்.
ஆனால், இந்தியாவுக்குள் நுழைவதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. எனவே, நீங்கள் திரும்பிச் சென்றே தீரவேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரை விமானத்தில் இருந்து இறங்குவதற்கும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அதன்பிறகு, அந்த விமானத்திலேயே மலேசியாவுக்கு பார்வதிஅம்மாளும், அவருடன் வந்த பெண்ணும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
0 comments :
Post a Comment