Monday, April 19, 2010

இலங்கை இராணுவத்தின் வரலாறு ஒரு தமிழரால் எழுதப்பட்டது. என்.செல்வராஜா.

இலங்கையிலிருந்து 1991இல் புலம்பெயர்ந்து சென்று லண்டனில் வசித்துவரும் நூலகவியலாளர் திரு. என். செல்வராஜா அவர்கள் தற்போது குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இதுவரை 25 நூல்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டுள்ள இவரின் எழுத்துலக பணியில் ‘நூல்தேட்டம்’ எனும் ஆவணவாக்கல் நூற்றொகுதி முக்கிய இடத்தைப் பெறுகின்றது. நூல்தேட்டம் தொகுதியில் இதுவரை 06 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த 06 தொகுதிகளினூடாகவும் இலங்கையைச் சேர்ந்த மொத்தம் 6000 தமிழ் நூல்களை பதிவாக்கியிருப்பது பெரும் சாதனையாகும். இலங்கை எழுத்தாளர்களின் இத்தனை நூல்களை ஒரே பார்வையின் கீழ் வேறு எந்த தனிப்பட்ட நபரோ, நிறுவனமோ இதுவரை பதிவாக்கவில்லை என்று துணிவாகக் குறிப்பிடலாம். தற்போது நூல்தேட்டம் தொகுதி 07க்கான தேடல் முயற்சிகளை பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் மேற்கொண்டுவரும் நூலகவியலாளரும், எழுத்தாளரும், வெளியீட்டாளரும், பன்னூலாசிரியருமான திரு. என். செல்வராஜா அவர்களுடன் ஞாயிறு தினக்குரல் வாசகர்களுக்காக புன்னியாமீன் அவர்களால் மேற்கொண்ட நேர்காணல் கீழே தொகுத்து தரப்படுகின்றது.

கேள்வி: நூல்தேட்டம் என்றால் என்ன? இந்த நூல்தேட்ட நூல் வெளியீட்டின் மூலமாக நீங்கள் இதுவரை எதனை சாதித்துள்ளீர்கள்?

என்.செல்வராஜா: நூல்தேட்டம் இலங்கையில் இதுவரை அச்சில் வெளிவந்த தமிழ் நூல்களையும், இலங்கையரால் தமிழாக்கம் செய்யப்பட்ட பிறமொழி நூல்களையும் உள்ளடக்குகின்றது. இலங்கை எழுத்தாளர்கள் தமது நூல்களை இலங்கையில் மட்டுமல்லாது தமிழகத்திலும், ஐரோப்பாவிலும் வேறும் புலம்பெயர்ந்த நாடுகளிலிலிருந்தும் வெளியிட்டு வருகிறார்கள். இவற்றின் இருப்பை ஓரிடப்படுத்தி பதிவு செய்து கொள்வதற்காகவும், ஆய்வாளர்களின் விரிவான ஆய்வுத் தேவைகளுக்காகவும் நூல்தேட்டம் உருவாக்கப்பட்டது. இதுவரை காலமும் துறைசார்ந்த சிறு பட்டியல்களாக மட்டுமே அறியப்பட்டு வந்த இத்தகைய நூல்விபரங்கள் நூல்தேட்டத்தின் வாயிலாகவே விரிவான பதிவுக்குள்ளாகியுள்ளமை ஒரு சாதனை என்று நான் கருதுகின்றேன்.

கேள்வி: அப்படியென்றால் இதுகால வரை இலங்கையில் இதுபோன்றதோர் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்று கருதுகின்றீர்களா?

என்.செல்வராஜா: ஆரம்பத்தில் எப்.எக்ஸ்.ஸி நடராஜா, கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராஜன் போன்றோர் சிறு நூல்களாகவும் நூல்களின் பின்னிணைப்புகளாகவும் இலங்கையில் வெளிவந்த தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் முயற்சியை அவ்வப்போது மேற்கொண்டிருந்தார்கள். இவை சிறு பட்டியல் வடிவிலேயே அமைந்திருந்தன. நூலின் தலைப்பு, ஆசிரியர் பெயர், சிலவேளை வெளியிட்ட ஆண்டு போன்ற விபரங்களே அவற்றில் இடம்பெற்றிருந்தன. இவை எவற்றிலும் முறையான நூலியல் பதிவுகளோ, அந்த நூல்கள் பற்றிய குறிப்புகளோ இடம்பெற்றிருக்கவில்லை. இவர்கள் பெரும்பாலும் இலக்கியத்துறை தொடர்பான நூல்களையே பதிவுக்குள்ளாக்கியிருந்தார்கள்.

கேள்வி: இலக்கியத்துறைக்குப் புறம்பாக வேறு துறைசார்ந்த நூல்களையும் நீங்கள் பதிவு செய்துள்ளீர்களா? அவ்வாறு பதிவு செய்திருப்பின் அது பற்றி சற்று விரிவாக குறிப்பிட முடியுமா?


என். செல்வராஜா: இலங்கையின் நூலியல் பதிப்புத்துறை வரலாற்றில் இலக்கியத் துறைசார்ந்த நூல்களே பெருமளவில் வெளியிடப்பட்டு வந்திருக்கின்றன. இருப்பினும் இவை மட்டும்தான் இலங்கையின் நூலியல் வரலாறாகாது. உளவியல், சமயம், சமூகவியல், மொழியியல். விஞ்ஞானம், தொழில்நுட்பம், கவின்கலைகள், வரலாறு…. என்று பல்வேறு துறைகளிலும் இலங்கையில் நூல்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. நூல்தேட்டம் இவையனைத்தையும் பதிவு செய்யும் ஒரு பெரும் பணியிலேயே ஈடுபட்டிருக்கின்றது. இதன் மூலமே இலங்கையின் நூலியல் வரலாற்றை முழுமையாக தரிசிக்க முடியும்.

கேள்வி: இத்தகைய பதிவிற்கு ஏதேனும் சிறப்பான வகுப்புத் திட்டமொன்றை நீங்கள் கைகொள்கின்றீர்களா?

என். செல்வராஜா: நூல்தேட்டத்தின் நூல்கள் யாவும் 10 பிரதான வகுப்புகளுக்குள் அடங்குகின்றன. இது நூலகங்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் டூவி தசாம்ச பகுப்பு முறையை (Dewey Decimal Classification) அடிப்படையாகக் கொண்டது. இப்பகுப்பு முறையின் கீழ் எமது எழுத்து வளங்கள் அனைத்தையும் பொது விடயங்கள், உளவியல், சமயம், சமூகவியல், மொழியியல், தூய விஞ்ஞானம், தொழில்நுட்பம், கவின்கலைகள், இலக்கியம், வரலாறு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு பிரிவும் மேலும் 10 உப பிரிவுகளாக வகுக்கப்படுகின்றன. உதாரணமாக சமூகவியல் என்ற பிரிவுக்குள் புள்ளிவிபரவியல், அரசியல், பொருளியல், சட்டம், பொதுநிர்வாகம் போன்ற அறிவுத்துறைகள் உப பிரிவுகளாக உள்ளடங்கும். நூல்தேட்டத்தின் பகுப்பு இவ்வாறே அமைகின்றது.


கேள்வி: இலங்கை தமிழ் நூல்களின் ஆவணவாக்கல்களை தனிப்பட்ட நபர்கள் தவிர்ந்து நிறுவனங்களோ அல்லது அரசாங்கமோ பதிவுகளுக்கு உட்படுத்தவில்லை எனக் கருதுகின்றீர்களா?

என். செல்வராஜா: இலங்கை தேசிய நூலக சேவைகள் சபை உருவாக்கப்பட்ட காலகட்டங்களில் தேசிய நூற்பட்டியல் என்று ஒன்று தொடங்கப்பட்டது. அதில் இலங்கையில் அச்சிடப்பட்ட மும்மொழி நூல்களில் பதிப்பகச் சட்டத்தின் கீழ் அச்சகங்களால் வழங்கப்படும் நூல்களின் தகவல்களை அடிப்படையாக வைத்து இப்பட்டியல் பதிவுசெய்யப்பட்டது. இது காலாண்டுக்கொரு முறையும் பின்னர் மாதாந்தமாகவும் இலங்கையில் இன்றளவில் வெளியிடப்பட்டு வருகின்றது. இன்று இப்பணியை இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கொழும்பிலிருந்து மேற்கொள்கின்றது. இப்பட்டியலில் தமிழ் நூல்களும் இடம்பெறுகின்றன. ஆனால், அவை பெரும்பாலும் அரச வெளியீடுகளையும், ISBN இலக்கம் பெறப்பட்ட நூல்களையுமே உள்ளடக்கி வருகின்றன. இதில் இலங்கைத் தமிழரின் அனைத்து நூல்களும் என்றுமே முழுமையாக உள்ளடக்கப்படாது என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.

கேள்வி: எந்த அடிப்படையினை வைத்து நீங்கள் இவ்வளவு உறுதியாக குறிப்பிடுவீர்கள்?

என்.செல்வராஜா: இலங்கைத் தமிழர்களின் வெளியீடுகளை நீங்கள் அவதானிப்பீர்களாயின் அவற்றில் கணிசமான அளவு தமிழகத்தில் அச்சிடப்படுகின்றன. இவை இலங்கை ISBN
இலக்கம் பெறப்பட முடியாதவை. மணிமேகலை போன்ற தமிழகப் பதிப்பாளர்களால் வெளியிடப்படும் இலங்கையர்களின் நூல்களில் பெரும்பாலும் ISBN இலக்கங்களை காணமுடிவதில்லை. இவை இலங்கை தேசிய நூற்பட்டியலில் இடம்பெறும் தகுதியற்றவையாகி விடுகின்றது. மேலும், இலங்கை தமிழர்கள் உலகெங்கும் புலம்பெயர்ந்து பரந்து வாழும் சூழலில் அங்கெல்லாம் வெளியிடப்படும் மிகத் தரமான பல நூல்கள் இலங்கை மண்ணை அடைவதே இல்லை. இந்நிலையில் அவை பற்றிய அறிதலை தேசிய நூலகம் கொண்டிருக்குமா என்பது கேள்விக் குறியாகவேயுள்ளது.

கேள்வி: தேசிய நூலக ஆவணவாக்கல் சபையில் வெளியிடப்படும் நூற்பட்டியலில் ISBN
இலக்கம் பெறப்பட்ட நூல்கள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டீர்கள். ஆனால், இலங்கையைப் பொறுத்தமட்டில் நூல்களுக்கு ISBN இலக்கம் வழங்கும் முறை 1980 களிலே அறிமுகஞ் செய்யப்பட்டது. இதற்கு முன்புள்ள நூல்களின் பதிவு நிலை குறித்து நிறுவன ரீதியான அமைப்புகளின் செயற்பாடு பற்றி எத்தகைய கருத்துக்களைக் கொண்டுள்ளீர்கள்?


என்.செல்வராஜா: ஆரம்பத்தில் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு அச்சகம் தான் அச்சிடும் எந்தவொரு நூலிலும் குறிப்பிட்ட சில பிரதிகளை தேசிய நூலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது சட்டபூர்வமானதாகும். ஆனால், தமிழ் பதிப்பாளர்களைப் பொறுத்தவரையில் இது அன்று முதல் இன்று வரை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. இதனை அரசாங்கமும் உறுதியாக நடைமுறைப்படுத்தவும் இல்லை. இதன் காரணமாக தேசிய நூலகப் பதிவுகளில் ஆரம்ப காலம் முதல் தமிழ் நூல்கள் இடம்பெறுவது குறைவாகவே இருந்தது. இன்று கூட ISBN இலக்கமிடப்படுவதும் அச்சகங்கள் தமது நூல்களை தேசிய நூலக ஆவணவாக்கல் சபைக்கு அனுப்பி வைப்பதும் ஒழுங்காக நடப்பதில்லை. இதை நாங்கள் கண்கூடாகக் கண்டும் வருகின்றோம். இதனை கட்டாயமாக்கும் அரசாங்கத்தின் இறுக்கமான கொள்கைகள் எதுவுமில்லை.

கேள்வி: இலங்கை எழுத்தாளர்களால் இலங்கையிலோ அல்லது உலகளாவிய ரீதியிலோ வெளியிடப்படக் கூடிய நூல்கள் யாதோ ஒரு அமைப்பின் கீழ் பதிவு செய்யப்படாமையினால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுமெனக் கருதுகின்றீர்கள்?

என்.செல்வராஜா: நூல் வெளியீடு என்பது மிக பணச் செலவானதும், காலச் செலவானதுமான ஒரு முயற்சியாகும். ஒரு சமூகத்தின் அறிவின் அளவுகோலாக அச்சமூகத்தினால் வெளியிடப்படும் நூல்கள் அமைகின்றன. இவை வெளியிடப்படும்போது எங்காவது ஓரிடத்தில் பதிவு செய்யப்பட வேண்டியது முக்கியமானதாகும். புள்ளிவிபரத்துக்காக மட்டுமன்றி எதிர்காலத்தின் வரலாற்றுத் தேவைக்காகவும் இத்தகைய பதிவுகள் முக்கியமாகும். இத்தகைய பதிவுகளின் காரணமாக ஒரு நூலின் வரவை உலகளாவிய ரீதியில் மற்றவர்கள் அறிந்து கொள்கின்றார்கள். குறிப்பாக ஒரு ஆய்வாளர் தனது ஆய்வுத் தேடலுக்காக முனையும்போது நூலின் இருப்பை, தனது ஆய்வுத் தேவைக்குப் பொருத்தமான நூல்களின் வரவை இத்தகைய பதிவு ஆவணங்களின் ஊடாக இலகுவில் அடையாளம் கண்டு கொள்கின்றான். இன்று இலக்கியத்துறையை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் தமிழில் இலங்கையரால் எத்தனை நூல்கள், எத்தனை நாவல்கள், எத்தனை சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன என்று உறுதிபட கூற முடியாதுள்ளது. இன்றைய ஆய்வாளர்கள் இலங்கை தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும்போது ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள இத்தகைய முழுமையடையாத பட்டியல்களை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். இருட்டு அறைக்குள் கருப்புப் பூனையைத் தேடும் இந்நிலை மாற வேண்டுமானால் அந்த அறைக்கு படிப்படியாக ஒளியூட்ட முனையும் நூல்தேட்டம் போன்ற பாரிய தொகுப்புக்கள் மேற்கொள்வதன் அவசியத்தை படைப்பாளிகள் உணர வேண்டும்.

கேள்வி: இத்தகைய அவசியத்தினை தற்போதைய தமிழ் எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் எவ்வளவுதூரம் உணர்ந்திருக்கிறார்கள்

என்.செல்வராஜா: என்னைப் பொறுத்த வரையில் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் எனது பணியை எனது சுய தேவையின் நிமித்தமும் வர்த்தக நோக்கம் கருதியதாகவும் மேற்கொள்வதாகவே பலரும் இன்றளவில் கருதுவதாக நான் உணர்கின்றேன். இப்பணிக்கு உலகெங்கும் திரிந்து நான் தேடலில் ஈடுபடுவதில் உள்ள பொருளாதார கால செலவை கணிப்பிட்டால் அது என் வாழ்வின் பெரும்பகுதியை விழுங்கி விட்டதை நான் உணர்கின்றேன். இவ்வளவு தனிப்பட்ட இழப்பின் பின்னர் ஆறு தொகுதிகளை உருவாக்கி அதில் இலங்கை எழுத்தாளர்களின் 6000 நூல்களை பதிவு செய்து எனது இனத்திற்கு வழங்கியுள்ள இந்நிலையிலும் நூல்தேட்டம் பற்றிய உணர்வினை படைப்பாளிகள் கொண்டிருக்கிறார்களா என்ற சந்தேகமே எனக்கு எழுகின்றது. அண்மையில் கொழும்பில் ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு பேசிய பிரபல எழுத்தாளர் ஒருவர் ஈழத்து இலக்கியத்தை ஆவணப்படுத்தியவர்களாக சில்லையூர் செல்வராசன், கனக செந்திநாதன் ஆகியோரையே சிலாகித்து குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். அன்று ஆவணப்படுத்தல் பற்றிப் பேசிய எவருமே தங்கள் கண்ணெதிரில் விரிந்து கிடக்கும் நூல்தேட்டத்தின் 6000 நூல்களின் தொகுப்பைப் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாதது எனது சந்தேகத்தை வலுப்படுத்தியிருந்தது.

கேள்வி: ஆய்வாளர்கள் மத்தியில் நூல்தேட்டம் எவ்வளவுதூரம் உள்வாங்கப்பட்டுள்ளது.


என்.செல்வராஜா: நூல்தேட்டம் பிரதிகள் ஐரோப்பிய நூலகங்களின் தமிழியல் பிரிவு, அல்லது தென்னாசியப் பிரிவு இயங்கும் நூலகங்களில் இடம்பெற்றுள்ளதால் அங்கு ஓரளவு அறியப்பட்டதாக உள்ளது. லண்டனில் என்னுடன் மேற்கொள்ளப்படும் பல்வேறு தொலைபேசி உரையாடல்களிலிருந்து இதை அறிந்து கொள்ள முடிகின்றது. இலங்கையில் நிலைமை தலைகீழாக உள்ளது. நூல்தேட்டம் பிரதிகளை பிரதான நூலகங்கள் இருப்பில் கொண்டிருக்கின்றன என்று அறிகின்றேன். ஆயினும் ஆய்வாளர்கள் இதனை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய முடியவில்லை. ஏனெனில் அண்மையில் வெளிவந்த எந்தவொரு ஆய்வு நூலிலும் தமது உசாத்துணை பதிவுகளாக ஆய்வாளர்களினால் நூல்தேட்டம் குறிப்பிடப்பட்டதை நான் அறியவில்லை.

கேள்வி: நூல்தேட்டத்தை அடிப்படையாக வைத்து ஏதேனும் ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?

என்.செல்வராஜா: உடத்தலவின்னையிலிருந்து கலாபூஷணம் பி.எம்.புன்னியாமீன் நூல்தேட்டம் முதல் நான்கு தொகுதிகளை விரிவாக ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ‘நூல்தேட்டம்- இலங்கைத் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டிய ஒரு பெருநதி” என்ற தலைப்பில் இது 2007இல் ஒரு நூலாகவும் வெளிவந்திருந்தது. அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ப்பிரிவின் நூலகர் திரு. மகேஸ்வரன் இலங்கை தமிழ் நூல்களை தேசிய நூற்பட்டியலில் ஆவணப்படுத்துவது பற்றிய ஒரு ஆய்வினை மேற்கொண்டு வருகின்றார். இதில் தேசிய நூற்பட்டியலுடன் நூல்தேட்டம் பதிவாக்கத்தையும் ஒப்பீட்டு அடிப்படையில் ஆய்வு செய்து வருகின்றார். விரைவில் அவரது ஆய்வு நிறைவுபெரும் என்று அறிகின்றேன். ஈழத்தமிழர் நூல்களை பீ.டீ.எப். வடிவில் இணையநூலகமாகப் பதிவேற்றிவரும் நூலகம் இணையத்தளத்தின் நூல் தேடுகையின் ஆரம்பப்பதிவுக்குறிப்பாக நூல்தேட்டம் பதிவுகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கியிருக்கிறேன். அதிலும் நூல்தேட்டம் விரிவான பாவனையில் உள்ளது. பல்கலைக்கழகங்களில் இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவர்கள் நூல்தேட்டத்தை பெருமளவில் பயன்படுத்தித் தமக்கு வேண்டிய ஆய்வுத் தேவைக்கான நூல்களின் இருப்பினை அறிந்து அந்நூல்களை தேடுவதில் ஆர்வம் கொள்வதையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் தங்கியிருந்த மூன்று வார காலத்தில் நேரில் கண்டு புளங்காகிதம் அடைந்தேன்.

கேள்வி: ஆறு தொகுதிகளை வெளியிட்டுள்ள நீங்கள் சில வருடங்களுக்கு முன்னர் முதலாவது தொகுதியின் வெளியீட்டின் பின்னர் வழங்கிய ஒரு நேர்காணலில் ஆறுதொகுதிகளில் நூல்தேட்டத்தை பதிவுசெய்ய தீர்மானித்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். இன்றைய நிலையில் இன்னும் எத்தனை தொகுதிகளில் பதிவுசெய்வதாக உத்தேசித்திருக்கிறீர்கள்?

என்.செல்வராஜா: ஆரம்பத்தில் எனது தேடலின் வேகத்தை அனுமானித்து ஆறு தொகுதிகளுக்குள் ஈழத்து நூல்களை அடக்கலாம் என்று கனவு கண்டிருந்தேன். இன்று அந்த எண்ணம் மேலும் பல தொகுதிகளை நூல்தேட்டத்தில் காண முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியுள்ளது. இன்றளவில் நூல்தேட்டம் ஏழாவது தொகுதிக்கான பதிவில் 80சதவீதமான பதிவுகளை சேகரித்துக்கொண்ட திருப்தியுடன் லண்டன் திரும்புகின்றேன். விரைவில் ஏழாவது தொகுதியும் முடிவடைந்து விடும். இன்றளவில் இலங்கையில் எததனை நூல்கள் வெளிவந்திருக்கின்றன என்ற உறுதியான கணிப்பினை வழங்கும் ஆவணங்கள் எதுவுமே இல்லை. அதனால் எத்தனை தொகுதிகளை நான் வெளியிடலாம் என்ற எதிர்வுகூரலை மேற்கொள்ளமுடியாது.

கேள்வி: இலங்கையில் 1800களின் முன்னரைப் பகுதியிலிருந்து தமிழ் நூல்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இந்த ஆரம்பகால நூல்களைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றீர்களா?

என்.செல்வராஜா: நூல்தேட்டம் ஈழத்துத் தமிழ் நூல்களின் முழுமையான ஆவணமாக அமையவேண்டும் என்பதே எனது அவா. அவ்வகையில் புராதன அச்சு நூல்களையும் பதிவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளது. எனது தேடலின் போது 1895ம் ஆண்டளவில் வெளியிடப்பட்ட சில நூல்கள் அண்மையில் பேராதனையில் கிட்டியது. இதற்கு முன்னரும் மலாயாப் பல்கலைக்கழகத்திலும் சிலநூல்கள் கிடைத்து பதிவாக்கியிருக்கிறேன். தற்போதுள்ள நூல்தேட்டம் பதிவுகள் யாவும் கண்ணால் கண்ட நூல்களையே பதிவு செய்வதாக உள்ளது. இன்று அழிவடைந்துவிட்ட நூல்களையிட்டு இலங்கை சுவடிகள் ஆவணக்காப்பகத்தில் தேடலை மேற்கொள்ளவிருக்கின்றேன். அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. முதலில் கைக்கெட்டும் நூல்களில் கவனம் செலுத்தி பதிவுகளை மேற்கொண்டபின் ஒரு கட்டத்தில் இந்த எட்டாக் கனிகள் பற்றிய தேடலுக்குள் நுழைவேன். இன்று எளிதில் பெறக்கூடிய நூல்களைப் பெற்றுக்கொள்வதிலேயே அதிக உழைப்பையும், நேரத்தினையும் ஒதுக்கவேண்டியுள்ளது.

கேள்வி: தங்கள் முயற்சிகள் வெற்றியடையப் பிரார்த்திக்கின்றோம். அதே நேரம் சமகால எழுத்தாளர்கள் இம்முயற்சிக்கு எந்தளவு ஆதரவு நல்குகின்றனர். உங்கள் பணிக்கு அவர்களது உதவிகளை எந்தவழியில் எதிர்பார்க்கின்றீர்கள்?

என்.செல்வராஜா : இன்று சமகால வெளியீடுகளை அச்சிடும் இலங்கைப் பதிப்பகங்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றேன். குமரன் பதிப்பகம், சேமமடு பொத்தகசாலை, ஞானம் பதிப்பகம், மலையக வெளியீட்டகம் ஆகியவை தாம் அச்சிடும் அல்லது வெளியிடும் நூல்களில் ஒவ்வொரு பிரதியை எனக்காக ஒதுக்கிவைத்து காலத்துக்குக் காலம் என்னிடம் சேர்ப்பிக்கிறார்கள். இதற்கான ஒழுங்குகளை கொழும்பிலுள்ள எனது சகோதரியின் வாயிலாக நான் மேற்கொண்டு வருகின்றேன். சில எழுத்தாளர்கள் தபால்மூலம் நேரடியாகவே எனக்கு லண்டனுக்கு அனுப்பிவைக்கிறார்கள். இவர்களது அக்கறையின் பயனாகவே நூல்தேட்டத்தின் தொகுப்பினை நான் நம்பிக்கையுடன் துரிதப்படுத்த முடிகின்றது. இந்தப் பணியை எனது காலத்திலேயே முடித்துவிடவேண்டும். அதற்கான பாதையை நான் உருவாக்கி, அனுபவங்களின் வாயிலாக அதனைச் செப்பனிட்டு அதில் பயணித்து வருகின்றேன். எனக்குப் பின்னர் இப்பணியைத் தொடர்பவருக்கு இலகுவாக இருக்கவேண்டும் என்பதே என் சிந்தையில் நிரந்தரப் பதிவாக உள்ளது. நூல்தேட்டம் தொகுப்பு என்பது என்னுடன் தொடங்கி என்னுடனே முடிவடையும் ஒன்றல்ல.


கேள்வி: இலங்கை நூல்தேட்டம் தவிர மலேசிய நூல்தேட்டம், இலங்கைத் தமிழருக்கான ஆங்கில நூல்தேட்டம், சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி ஆகியவற்றையும் வெளியிட்டதாக அறிகின்றோம். இவை பற்றி சுருக்கமாக குறிப்பிட முடியுமா?

என்.செல்வராஜா: மலேசிய, சிங்கப்பூர் தமிழர்களின் நூலியல் வரலாறு இலங்கைத் தமிழருடன் பின்னிப் பிணைந்தவை. அந்நாடுகளில் ஆரம்பகால தமிழ் நூல்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டவையாகும். இந்நூல்களைத் தேடி அந்நாட்டுக்குச் சென்றபோதுதான் முழு உலகத்தாலும் மறக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு இருந்த மலேசிய தமிழர்களின் ஆழமான பல நூல்கள் பற்றி அறியமுடிந்தது. இவர்களது படைப்புக்கள் பற்றி இலங்கைத் தமிழர்கள் அறிந்திராதது துரதிர்ஷ்டம் என்றே கருதினேன். இதன் பயனாக 2200 பதிவுகளுடன் எழுந்ததே மலேசிய, சிங்கப்பூர் நூல்தேட்டமாகும்.

இலங்கைத் தமிழரின் பல நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. இலங்கை இராணுவத்தின் வரலாறு ஒரு தமிழரால் எழுதப்பட்டது. கொழும்பு மாவட்டத்தின் வரைபடம் (ளுவசநநவ யுவடயள) ஒரு தமிழரால் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையின் சனத்தொகைக் கணிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு தமிழராலேயே மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய பல வரலாற்று முக்கியத்துமான நூல்களை தந்த அந்த தமிழர்களையோ, அவர்களது நூல்களையோ அண்மைக்காலத்தில் ஆங்கிலத்தில் வெளிநாடுகளில் வெளிவந்த இலங்கை தொடர்பான நூல் விபரப்பட்டியல்கள் உள்ளடக்கியிருக்காதது எனது கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாக எழுந்ததே ஆங்கில நூல்தேட்டமாகும். இது முற்றிலும் தமிழர் அல்லாதவர்களுக்காக ஆங்கில மொழியில் உருவாக்கப்பட்ட ஒரு நூல்தேட்டம்.

இலங்கைத் தமிழரின் நூலியல் பாரம்பரியத்தில் முக்கிய இடம் வகிப்பது சிறப்பு மலர்களாகும். பல தமிழ் அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சிறப்பு மலர்களில் வந்து குறுகிய வட்டத்திற்குள் தங்கி விடுவதாலும் குறுகிய கால வரலாற்றைக் கொண்டதாலும் ஆய்வு மாணவர்களால் கண்டு கொள்ளாமல் போய்விடும். இதைத் தவிர்க்கும் நோக்குடன் தேர்ந்த 150 தமிழ் மொழியிலான சிறப்பு மலர்களை எடுத்து அவற்றிலிருந்த 2000க்கும் அதிகமான கட்டுரைகளை கண்டறிந்து அவற்றிற்கான ஒரு வழிகாட்டியை (சுட்டி) தயாரித்திருந்தேன். இதனை நூலுருவிலும் கொண்டுவந்து பிரதான நூலகங்களுக்கு வழங்கியிருந்தேன். இது இன்றளவில் நல்லதொரு உசாத்துணை வழிகாட்டி நூலாக பயன்படுத்தப்படுவதை அறிகின்றேன்.

கேள்வி: இலங்கைக்கு வந்து கடந்த மூன்று வாரங்களாக பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் நூல் தேடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த நீங்கள் எதிர்வரும் வாரம் மீளவும் லண்டன் செல்லவுள்ளீர்கள். நூல்தேட்ட தேடல் நடவடிக்கைகளுக்குப் புறம்பாக இக்காலகட்டத்தில் வேறு ஏதாவது இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டீர்களா?

என். செல்வராஜா: கடந்த மூன்று வாரங்களாக பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் எனது பெரும் பொழுதை கழித்த வேளையில் தமிழ் துறையின் அழைப்பின் பேரில் பல்கலைக்கழக தமிழ்துறை மாணவர்களுடனும், விரிவுரையாளர்களுடனும் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்றேன். புலம்பெயர் வாழ்வியல் தொடர்பான பல கருத்துப் பரிமாற்றங்களை அந்நிகழ்வில் மேற்கொள்ள முடிந்தது. எதிர்வரும் 12ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடி மகாவித்தியாலயத்தில் ஆசிரியை சுதாகரி மணிவண்ணன் எழுதிய ‘அரங்க அலைகள்’ என்ற நாடக நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இருக்கின்றேன். அதன் போது 11ஆம் திகதி கிழக்கிலங்கை எழுத்தாளர்களை சந்திக்கும் ஒரு நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பின்னர் 16ஆம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தில் அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வில் உரையாற்றவும் இருக்கின்றேன். இவற்றை தவிர முடிந்தவரையில் எழுத்தாளர்களையும், நூல் வெளியீட்டாளர்களையும், பதிப்பகங்களையும் தொடர்பு கொண்டு நூல்தேட்டத்திற்கான நூல் சேகரிக்கும் நிகழ்ச்சிகளிலும் ஈடுபடவுள்ளேன். எனது உரையாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் நூல்தேட்டத்தையும், அதன் தேவையையும், எமது சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதாகவே அமையும் என்று நம்புகின்றேன்.

கேள்வி: மிக்க நன்றி திரு செல்வராஜா அவர்களே. தங்கள் பணிகள் தற்போதைய நிலையில் இலக்கிய ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்படாவிடினும் கூட நிச்சயமாக எதிர்காலத்தில் இதுவொரு விலைமதிக்க முடியாத ஒரு ஆவணமாக திகழும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இறுதியாக ஞாயிறு தினக்குரல் வாசகர்களிடம் நூல்தேட்டம் தொடர்பாக நீங்கள் ஏதாவது விசேட செய்தியை தெரிவிக்க விரும்புகின்றீர்களா?

என். செல்வராஜா: ஞாயிறு தினக்குரல் வாசகர்கள் எனக்கு புதியவர்கள் அல்ல. எனது கட்டுரைகளையும், எனது பணிகள் தொடர்பான செய்திகளையும், நேர்காணல்களையும் தினக்குரல் நிறுவனம் எப்பொழுதும் வெளியிட்டு வருகின்றது. அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய நிலையில் எம்மக்கள் மத்தியில் நூல்தேட்டம் தொகுப்பு பற்றிய செய்தி தீவிரமாக வலியுறுத்தப்பட வேண்டும். நூல்தேட்டத்தின் இருப்பை அறிந்து கொள்ளும் எந்தவொரு ஆய்வாளரும் தனது தேடலில் செலவிடும் பெரும் பங்கு நேரத்தை சேமித்துக் கொள்ள முடியும். இலங்கையிலுள்ள படைப்பிலக்கிய வாதிகளும் உலகெங்கும் பரந்து வாழும் தமது சகோதர படைப்பாளிகள் என்ன செய்கின்றார்கள் என்பதை நூல்தேட்டத்தின் பதிவுகள் வாயிலாக எளிதில் அறிந்து கொள்ள முடியும். நூல்தேட்டத்தின் உருவாக்கத்தின் வெற்றி அதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையிலேயே தங்கியுள்ளது. இந்த தொடர்பாடலை தினக்குரல் வாயிலாக எமது படைப்புலக சகோதரர்களுக்கு விடுப்பதினூடாக அவர்களது பங்களிப்பினையும் நான் எதிர்பார்க்கின்றேன். நூல்தேட்டம் செல்வராஜா என்ற ஒரு தனி மனிதனுடைய ஆய்வு நூலல்ல. அவனது புகழையோ, பொருளாதார வளத்தையோ மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் ஒரு சாதனமுமல்ல. இது அர்ப்பணிப்புடன் தனி மனிதனால் முழுச் சமூகத்துக்குமாக மேற்கொள்ளப்படும் ஒரு வாழ்நாள் முயற்சி. இதனால் உலகில் அடையாளப்படுத்தப்படப் போவது படைப்பாளிகளும், அவர்களது படைப்புக்களுமேயாகும். இதை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு படைப்பாளி தனது உளமார்ந்த பங்களிப்பாக எதைச் செய்திருக்கின்றான் என்ற கேள்வியை ஒவ்வொருவரது மனதிலும் தினக்குரல் வாயிலாக எழுப்ப வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.

4 comments :

munas ,  April 20, 2010 at 5:41 AM  

who is the reporter, meaningless heading for writer's opinion.earlier also he wrote so many useless articles. the website should neglect his writings.

mathy ,  April 20, 2010 at 2:54 PM  

முனாஸ் நானா,

தலையங்கம் எதுவாயிருந்தாலும் கருத்துக்களையல்லோ கவனிக்கவேண்டும். எழுத்தாளரின் கருத்துக்கள் உங்களுக்கு பயன்படவில்லை என்றாலும் என்போன்ற சிற்றறிவு கொண்டோருக்கு பலன்தந்துள்ளதையா. சும்மாபோய் ஆங்கிலத்தில வெழுத்துவாங்கிறயள். தமிழ் வாசிக்க மட்டும்தான் தெரியுமா?

Anonymous ,  April 20, 2010 at 5:37 PM  

history of srilanka written by karuna amman.ok

reji ,  April 20, 2010 at 6:47 PM  

karuna does not know how to hold the pen. with what he has written.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com