ஜனாதிபதிக்கு மன்மோகன் சிங் , அமெரிக்கா வாழ்த்து
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றியீட்டியுள்ளதைத் தொடர்ந்து உலக நாட்டுத் தலைவர்களிடமிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு வாழ்த்துச் செய்திகள் வந்த வண்ணமுள்ளன.
பல தசாப்தங்களுக்குப் பின்னர் நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு இது இரட்டிப்பு வெற்றியாகும் என்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்து பொருளாதார அபிவிருத்தி அதிகாரப் பரவலாக்கம் இன நல்லிணக்கம் என்பவற்றை மேற்கொள்வதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்களென்றும் அமெரிக்கா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாகத் தெரிவாகியூள்ள அரசாங்கத்தோடு வரலாற்று ரீதியான உறவை வலுப்படுத்திக் கொள்ள முடியுமென நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுடன் உரையாற்றினார். இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றிருப்பது தனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவித்த அவர், ஜனாதிபதி மஹிந்தவின் அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளுக்கு வாழ்த்துக்களையும் கூறினார்.
0 comments :
Post a Comment