Thursday, April 8, 2010

ஏகபிரதிநிதித்துவக் கோட்பாடு ஜனநாயக விரோதமானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகப் பாராளுமன்றத்துக்கு வருவார்கள் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் கூறுகின்றார். நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இப்படியான ஒரு எதிர்பார்ப்பை வெளியிடுவதற்கு அவருக்குள்ள உரிமையை நாம் மறுதலிக்கவில்லை. ஆனால் ஏகபிரதிநிதித்துவக் கோட்பாடு சர்வாதிகாரச் சாயல் படிந்தது மாத்திர மன்றித் தமிழ் மக்களின் விமோசனத்துக்குப் பாதகமானதும் கூட என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.

கூட்டமைப்பினர் புலிகளிடமிருந்து இரவல் வாங்கியதே ஏகபிரதிநிதித்துவம் என்ற கருத்துருவம். முதலில் புலிகளை ஏகபிரதி நிதிகளாக ஏற்றுக்கொண்ட கூட்டமைப்பினர் இப்போது தங் களை அவ்வாறான பிரதிநிதிகளாக இனங்காட்ட முயற்சிக் கின்றனர். புலிகளின் பாதையிலேயே இவர்கள் இப்போதும் பயணிக்கிறார்களா என்ற கேள்வியை இது எழுப்புகின்றது.

புலிகள் மக்களின் அங்கீகாரத்துடன் ‘ஏகபிரதிநிதிகள்’ ஆக வில்லை. மாற்றுக் கருத்து உள்ளவர்களைக் கொலை செய்தும் ஆயுத பலத்தின் மூலம் மக்களை அடக்கிப் பணிய வைத் துமே ஏகப்பிரதிநிதிகளாகத் தங்களை இனங்காட்டினார்கள். புலிகளின் இந்தச் சர்வாதிகார நடைமுறைக்குக் கூட்டமைப் பினர் மெளன அங்கீகாரம் அளித்தார்கள் என்பதைத் தமிழ்ச் சமூகம் நன்கறியும். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், வெற்றிவேலு யோகேஸ்வரன் போன்ற தலைவர்கள் புலிகளால் கொலை செய்யப்பட்டதை மெளனமா கச் சீரணித்துக் கொண்டே இவர்கள் புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்படத் தொடங்கினார்கள். புலிகளுடன் சேர்ந்து செயற்படத் தொடங்கிய பின்னரும் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கொலை செய்யப்பட்டதைக் கூட இவர்கள் மெளனமாக அங்கீகரித்தார்கள். புலிகளின் தவறான கொள்கை காரணமாகத் தமிழ் மக்கள் பேரழிவைச் சந்தித்த நிலையில் கூட்டமைப்பினரிடம் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்த வர்களுக்குப் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் தெரிவித்த கருத்து ஏமாற்றத்தை அளிக்கின்றது.

ஏகபிரதிநிதித்துவம் என்பது தமிழ் மக்கள் மத்தியிலுள்ள சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை மூடிமறைத்துச் சுரண்டலுக்கும் சமூக அடக்குமுறைக்கும் வழிவகுக்கும் பிற்போக்குத்தனமான கோட்பாடு. இனப்பிரச்சினை மாத்திரம் தமிழ் மக்களின் ஒரே பிரச்சினையல்ல. தீண்டாமை இன்னும் முற்றாகத் தீரவில்லை. நிலப் பிரபுத்துவச் சுரண்டல் இன்றும் தொடர்கின்றது. ஏனைய சமூகங்களைப் போலவே தமிழ்ச் சமூகமும் வர்க்க ரீதியாகப் பிரிந்திருக்கின்றது. சுரண்டும் வர்க்கத்துக்கும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் இடையிலான முரண்பாடு தமிழ் மக்கள் மத்தியில் இல்லாமலில்லை.

இந்த முரண்பாடுகளை மூடிமறைக்கும் போர்வை தான் ஏகபிரதிநிதித்துவக் கோட்பாடு. கூட்டமைப்பின் முன்னோடிக் கட்சிகள் வேறு கோஷங்களின் மூலம் இக் கோட்பாட்டைப் பின்பற்றி வந்திருக்கின்றன. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகத் தமிழ் மக்கள் ஐக்கியப்பட வேண்டும் என்பதும் மற்றைய பிரச்சினைகள் பற்றிப் பின்னர் பார்க்கலாம் என்பதுமே அக் கோஷங்கள். ஆனால் இவ்வளவு காலமும் இக் கோஷங்களை முன்வைத்தும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண அவர்களால் முடியவில்லை. தீர்வுக்கென பல சந்தர்ப்பங்களைத் திட்டமிட் டுத் தட்டிக்கழித்ததைப் பார்க்கும் போது, சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தொடர்ந்து பின்தள்ளு வதற்காக இனப் பிரச்சினை தீராதிருப்பதை விரும்பினார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது.

ஏகபிரதிநிதித்துவம் என்பது ஜனநாயக விரோதக் கோட்பாடு. இக் கோட்பாட்டை வலியுறுத்துபவர்கள் தமிழ் மக்கள் அனைவ ருக்கும் தலைவர்களாக முடியாது. இனப் பிரச்சினைத் தீர்வுக் காக ஐக்கியப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் அதேவேளை, தமிழ்ச் சமூகத்தின் வெவ்வேறு பிரிவினரது சமூக, பொருளாதார நலன்களும் அணுகுமுறைகளும் வெவ் வேறானவை என்பதையும் அங்கீகரித்தாக வேண்டும்.

Thanks Thinakaran

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com