பிரசாரப் பணிகள் யாவும் நிறைவு : இராணுவம், அதிரடிப்படை உஷார்
பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், பாதுகாப்பு நாடு முழுவதும் கடுமையாகப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். 58,700 பொலிஸாருடன் இராணுவத்தினரும் விசேட அதிரடிப் படையினரும் இன்று முதல் சேவைக்கு அழைக்கப்படவுள்ளனர்.
தேவையைப் பொறுத்து இராணுவத்தினரும் விசேட அதிரடிப் படையினரும் அழைக்கப்படுவார்கள் என அவர் கூறினார். கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் பிரசார நடவடிக்கைகள் யாவும் முடிவடைந்துள்ளன. தேர்தல் சட்ட திட்டத்தின்படி, தேர்தல் தினம் வரை எவரும் பிரசாரங்கள் செய்ய முடியாது. அதே நேரம் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் எதனையும் முன்னெடுக்கவும் முடியாது. இதேவேளை குழப்பங்கள் விளைவிப்போர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும்படி பொலிஸாருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சிறுசிறு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் தேர்தல் வன்முறையினால் நேற்று ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகமயில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பொதுவாக கட்சிகளுக்கிடையிலேயே வன்முறைகள் அதிகரித்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல், மட்டக்களப்பு, அனுராதபுரம், பதுளை ஆகிய 4 மாவட்டங்களில் வன்முறைகள் ஈடுதலாக இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராய்ச்சி தினகரனுக்குத் தெரிவித்தார்.
இந்த நிலையில், தேர்தலை மிகவும் அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்தி முடிப்பதற்கு ஏற்ப பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை, நாட்டின் ஏழாவது பாராளுமன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடத்தி முடிப்பதற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்குரிய ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதுடன், வாக்கெடுப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களைத் தயார் செய்யும் பணிகளும் மும்முரமாக இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
8ம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் கடந்த பெப்ரவரி மாதம் 19ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரை நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டன.
மாவட்ட ரீதியாக 196 ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 7625 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
0 comments :
Post a Comment