Monday, April 5, 2010

சண்டியரும் வண்டியரும் தாண்டவக்கோனே! எம்மை வறுத்தெடுக்கிறார்கள் தாண்டவக்கோனே! - சதா. ஜீ.

'தமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்தால் பின்விழைவுகளை சந்திக்க வேண்டிவரும்' என்று சண்டியரின் சண்டித்தனத்தையிட்டு யாரும் கடுமையாக யோசிக்க வேண்டியதில்லை. அவர் குறிப்பிட்டது 'பிராண வாயு'வை. இதைத்தவிர்ப்பதற்கு யாரும் அவருக்கு பின்பக்கமாக நிற்காமல் விட்டால் சரிதானே! இந்த கோமாளி இப்படியென்றால்:'கூட்டமைப்பை தடைசெய்வதன் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கின் தமிழ் அரசியல் பிரதிநித்துவங்களை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளுமாயின் இலங்கை வாழ் தமிழர்கள் தனிநாட்டை கோருவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு தமிழர்களை இலங்கை அரசாங்கம் தள்ளிவிடக் கூடாது' என வண்டியர் சுரேஸ் முழங்கியிருக்கிறார்.

ஆகமொத்தத்தில் சண்டியரும் வண்டியரும் முள்ளிவாய்காலில் பலியிட்டது போதாது தமிழினத்தையே பலிகொடுத்தாவது தனிநாட்டை அடைவது. இது வெறும் வாய்ச் சவாடல் என்பது ஒருபுறமிருக்க, இவர்களின் வம்சம் வெளிநாடுகளில் தழைத்தோங்குகிறது என்பது ஒருபுறமிருக்க, பாராளுமன்ற கதிரையை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்கிற அவாதான் இது. பாராளுமன்றக் கதிரையை பிடித்துவிடுவதற்கு என்ன தில்லுமுள்ளையும் இவர்கள் அரங்கேற்றத் தயங்கமாட்டார்கள்.

இவர்களுடைய வெற்றி என்னவென்றால் தமது அபிலாசைகளை தமிழர்களின் உரிமையோடு சமன்செய்வதுதான். இதில் முரண்நகையும் இருக்கிறது. தாம் அரசாங்கத்திடம் சோரம் போய்க்கொண்டே தமிழர் சோரம்போகக்கூடாது என்று தலையிலடித்துக்கொள்வார்கள். அஃதானப்பட்டது பாராளுமன்ற சிறப்புரிமையின் கீழ் அரசாங்கம் வழங்கும் சம்பளத்திலிருந்து குண்டூசி வரை எல்லாவற்றையும் ஜனாதிபதி, பிரதமர் ஊடகாகப் பெற்றுக்கொள்வர். தமிழர்களுக்கு வாய்ப்பந்தல் போட்டுக்கொடுப்பார்.

ஆனால் தமிழர்களின் வாய்க்கொன்றும் தேவையில்லை. அவர்களுக்குத் தேவை சுயநிர்ணயம், சுயாட்சி, தமிழ் தேசியம் இன்னபிற கண்றாவியள். பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் தங்களின் தர்மத்தை கூட்டிக்கொடுத்து காசு பார்த்துக்கொள்கிறார்கள். பாவப்பட்ட ஜனங்களோ சொறிந்துவிடும் வெறும் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு காலகாலம் அணிலேறவிட்ட நாயைப்போல காலத்தை கழிக்கிறார்கள்.

மக்களின் சுயசிந்தனையை தூண்டிவிடாது அவர்களின் உணர்சிகளை தூண்டிவிட்டு எழும் நெருப்பில் குளிர்காயவே கூத்தமைப்பு தொடர்ந்தும் முயற்சிக்கிறது. இதற்கெதிராக மக்களின் சுயசிந்தனையைத் தூண்டிவிடும் தலைவர்களும் கட்சிகளும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்களுக்கான பரந்துபட்ட மக்கள் தொடர்புகள் இல்லை. துரதிஸ்டம் உண்மையாக செயற்படுகின்ற தமிழ் ஊடகங்களும் இல்லை.
பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் செய்வதெல்லாம் எரியிற நெருப்பில தம்மாலான எண்ணையை ஊற்றிவிடுவதுதான்.

இறுதியாக புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தைவிட புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வீதி விபத்துக்கள் மிகமிக அதிகம் (மருதனாமடச் சந்தியில் புலியின் வாகனம் மோதி ஒரு கர்ப்பிணித்தாய் இறந்தார்) ஆனால் அதையெல்லாம் மூடிமறைத்த யாழ் ஊடகங்கள், இராணுவத்தினால் ஏற்படும் சிறு விபத்துக்களையும் ஊதி பூதாகரமாக்கின. எப்படியெல்லாம் ஊடகம் இருக்க முடியாதோ அதுமாதிரி மிக கேவலமாக நடந்துகொண்டன. நடந்துகொள்கின்றன.

தேர்தலுக்கு முன்னும் பின்னும் கூத்தமைப்பு பேச்சு பேச்சுத்தான். கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஜனாதிபதி தமிழ் தரப்புடன் பேசுவதாக அறிவித்திருக்கிறார். எனவே எம்மை தெரிவு செய்யவேண்டும் என்றும் பல கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். தேர்தலில் தேர்ந்தெடுக்ப்பட்ட பின்னர் 'சிங்கள தலைவர்களுடன் பேச முடியாது, இனவாதிகள் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்' என்றவாறு பல கதைகள் சொல்வார்கள். மகுடமாக இந்தியா 'நுள்ளுது' சர்வதேசம் 'கிள்ளுது' என்றும் கதைசொல்வார்கள். கதைகேட்டு கதைகேட்டு வளர்ந்த தமிழ் சமூகம் முதன்முறையாக கதைகேட்டு ஏமாறப்போகிறது என்பதல்ல.

வடக்குக் கிழக்கை அபிவிருத்தி செய்வதே எனது பிரதான நோக்கங்களில் ஒன்று என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்திருக்கிறார். தமிழர்கள் தம்மை வளப்படுத்தவும் தமது பொருளாதார அபிவிருத்தியை விருத்திசெய்யவும் முன்வரப்போகிறார்கள் என்றால் கூத்தமைப்பையும் கூட்டாளிகளையும் தவிர்ந்தவர்களை தெரிந்தெடுப்பது புத்திசாலித்தனம்.
ஏனெனில் பொருளாதார அபிவிருத்தியே இன்றைய காலகட்டத்தில் முதன்மையான நிலையில் உள்ளது. அதுவும் தமிழர் பிரதேசம் சகலவிதங்களிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனவே பொருளாதார அபிவிருத்தி முதன்மையானதும் இன்றியமையாதுமாகும். பொருளாதார அபிவிருத்தி அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு இலகுவான வழிகோலாக அமையும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com