இலங்கையில் மனித உரிமைகளை பேணும் புதிய சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். AI
இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் மற்றும் அவசரகால விதிகள் ஆகியவற்றை நீக்கி மனித உரிமைகளைப் பேணும் சட்டங்களைப் புதிய அரசு உருவாக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையின் போர் முடிவுற்ற பின்னர் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றம் அந்த நாட்டில் பலவருட காலங்களாக நடைமுறையில் உள்ள கொடுமை மிகுந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும்.அவசரகாலச் சட்டத்தின் கீழேயே அந்த நாட்டில் பரவலாக மனித உரிமைகள் மீறப்பட்டும், நசுக்கப்பட்டும் வந்துள்ளன.
போர் முடிவுற்ற பின்னரான முதலாவது நாடாளுமன்றம் நாளை 22 ஆம் தேதி கூடவுள்ள நிலையில் சர்வதேச மன்னிப்புச் சபை இந்தக் கோரிக் கையை விடுத்துள்ளது.
1971 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக, இடைவிடாது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் மற்றும் அவசரகால விதிகள் ஆகியவற்றை நீக்கி மனித உரிமைகளைப் பேணும் சட்டங்களைப் புதிய அரசு உருவாக்க வேண்டும்.
இலங்கை முன்னேறிச் செல்ல வேண்டுமானால் மக்களின் மனித உரிமைகளை மலினப்படுத்தி அவற்றை மீறி தட்டிப்பறிக்கும் இச் சட்டங்களை முற்றாகக்களைந்து, மனித உரிமை மீறல்களை ஊக்குவிக்கும் சட்ட விதிகளை நீக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசிபிக் பிராந்திய உதவி இயக்குநர் மல்கோத்ரா தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், பொதுசன பாதுகாப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகள் என்பன இலங்கையின் பாதுகாப்புப் படைகள் மனித உரிமைகளை மீறத் தூண்டுதல் அளித்தும் உதவி புரிந்தும் வந்திருக்கின்றன என்றும் மல்கோத்ரா கூறினார்.
இலங்கையில் போர் முடிந்து விட்டது. ஆனால் அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை நசுக்குவதற்கும் மனிதாபிமான உரிமைகளை உரிய முறைப்படி நடைமுறைப்படுத்துவதை தடுப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.
நீதித்துறை செயலற்றுப் போகும் விதத்தில் இதனை நடைமுறைப்படுத்துகின்றது.அவசரகாலச் சட்டத்தின் கீழாக விதிகளை அமைத்துள்ளது.
இப்போதுள்ள நடைமுறை நீக்கப்பட்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் மல்கோத்ரா மேலும் வலியுறுத்தியுள்ளார்
0 comments :
Post a Comment