நெதர்லாந்தில் புலிகளின் 7 நிதிசேகரிப்பாளர்கள் கைது : புலனாய்வுத்துறை திடீர் நடவடிக்கை.
தமிழ் விடுதலைபுலிகளுடன் தொடர்பு வைத்த குற்றத்திற்காக 7 பேரை கைது செய்தனர் நெதர்லாந்து நாட்டு காவல்துறையினர். இலங்கையில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டுவந்த விடுதலை புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டிய சந்தேகத்தின் பேரிலேயே மேற்படி 7 பேரும் நெதர்லாந்து காவல்துறையால் கைது செய்யப்பட்டனர் என நெதர்லாந்தில் உள்ள சிறிலங்க தூதரகம் தெரிவிக்கின்றது.
டி.வி.டி, சுவரொட்டிகள், மற்றும் சட்டத்திற்கு புறம்பான பரிசுசீட்டுக்கள் விற்பனை மூலம் இவர்கள் விடுதலைபுலிகள் இயக்கத்திற்கு நிதி உதவி அளித்து வந்ததாக அந்நாட்டின் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.
சுமார் 16 வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் நடந்த தேடுதல் வேட்டையில் கணினி, தொலைபேசி, புகைப்படம், டி.வி.டி உள்ளிட்ட மொத்தம் 53,000 டாலர்களுக்கும் அதிகமான மதிப்புடைய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட இந்த குழுவினர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
2006 ஆம் ஆண்டு விடுதலைபுலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தால் தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது. அதனால் இந்த இயக்கத்திற்கு நிதி உதவியளிப்பது சட்டப்படி குற்றம். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குற்றப்பின்னணியுள்ள இயக்கத்தின் பிரதிநிதிகளாக செயலாற்றியதற்கான வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் சிலர் நெதர்லாந்த்தில் உள்ள பல வேறு தமிழ் அமைப்புக்களின் தலைவர்களாக உள்ளதும் தெரிய வந்துள்ளது. அதனால் இந்த தமிழ் அமைப்புக்கள் சர்வதேச அளவில் இயங்கி வரும் விடுதலைபுலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டிருக்கலாம் என அந்நாட்டு நீதி அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழர் ஒருங்கிணைப்பு கழகம், தமிழர் புனர்வாழ்வு கழகம், தமிழ் இளைஞர் அமைப்பு, தமிழ் மகளிர் அமைப்பு, நெதர்லாந்து தமிழ் கலை மற்றும் கலாச்சார அமைப்பு ஆகியவற்றின் தலைவர்கள் சந்தேகிக்கப்படும் சிலர் எனவும் நம்பப்படுகிறது. [கவிநிலா] .
0 comments :
Post a Comment