Wednesday, April 7, 2010

நக்ஸல் தாக்குதல்: 75 பொலிசார் பலி

இந்தியாவின் மத்திய மாநிலமன சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில், எழுபதுக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ள மிகப் பெரிய இந்தத் தாக்குதல் தன்தேவாடா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனத்தின் மீது நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் சேர்ந்து திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். முக்ரானா என்ற அடர்ந்த வனப் பகுதியில், மாவோயிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்தச் செல்லும் பாதுகாப்புப் படையினருக்காக அங்கு வழியை ஏற்படுத்திவிட்டு, 120 பேர் கொண்ட போலீஸ் படையினர் திரும்பிக் கொண்டிருந்தபோதே அவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.

உயரமான மலைப்பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனங்கள் நிலைகுலைந்தன. அதைத் தொடர்ந்து நிலக்கண்ணிவெடித் தாக்குதலும் நடத்தப்பட்டது.

குண்டு துளைக்காத அந்த வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்த நிலையில், அதே இடத்தில் பல வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களை மீட்பதற்காக அனுப்பப்பட்ட மேலும் இரு குழுக்கள் மீதும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த கமாண்டன்ட் உள்பட 74 பேரும், மாநில காவல்துறையின் தலைமைக் காவலர் ஒருவரும் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஹெலிகாப்டரும் மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் தெரிவித்தார். காயமடைந்த 7 வீரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

அந்தச் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல் குறித்து பிரதமரிடம் விளக்கமளித்த மத்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை, பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மாவோஸிஸ்டுகள் வைத்த அழுத்த வெடியில்தான் அதிக இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் தவறு நடந்திருக்கிறது என்றும், அது தொடர்பான முழுவிவரங்கள் அதிகாரிகளிடமிருந்து வந்த பிறகு தெரிவிக்கப்படும் என்றும் உள்துறைச் செயலர் தெரிவித்தார்.

ஆனால், பாதுகாப்புப் படையினருக்கு எதிரான இந்தத் தாக்குதல் 'பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கை' என்று மாவோயிஸ்டுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களைச் சுற்றித் துப்பாக்கிகள் குறிபார்த்துக் கொண்டிருக்கும்போது பேச்சுவார்த்தை நடத்த முடியாது. சிறையில் உள்ள எங்கள் தோழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். எங்களுக்கு எதிரான நடவடிக்கையை அரசு நிறுத்த வேண்டும்.


மாவோயிஸ்ட் பேச்சாளர் கோபால்

இதுதொடர்பாக, பிபிசியிடம் பேசிய ஜார்க்கண்ட் மற்றும் வடக்கு சத்தீஸ்கர் பிரிவுகளுக்கான மாவோயிஸ்டுகளின் சார்பில் பேசவல்ல கோபால் கூறும்போது, "எங்களுடைய தோழர்கள் இருவரை சமீபத்தில் மகாராஷ்டிர போலீசார் பிடித்துச் சென்றனர். பின்னர் அவர்களை ஆந்திர மாநிலத்தில் வைத்து கொன்றுவிட்டார்கள். அதற்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை இது. தவிர கிரீன் ஹன்ட் என்ற பெயரில் மாவோயிஸ்டுகளுககு எதிராக மத்திய, மாநில அரசுகள் துவக்கியிருக்கும் நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். " என்று தெரிவித்துள்ளார்.

Thanks BBC

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com