ஜெனரல் பொன்சேகாவிற்கான இராணுவ நீதிமன்று மே 4 இற்கு ஒத்திவைப்பு.
நாட்டின் ஆட்சியை இராணுவப் புரட்சி மூலம் கைப்பற்ற முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்றின் விசாரணைகள் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. நண்பகல் வரை இடம்பெற்ற இராணுவ நீதிமன்றின் விசாரணைகளில் ஜெனரல் பதிவியிலிருந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சில கொள்வனவுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு மீண்டும் மே மாதம் நான்காம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் பொன்சேகா கொழும்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ள நிலையில் இன்று இடம்பெற்ற இராணுவ நீதிமன்றினூடாக அவரை குற்றவாளியென தீர்ப்பளித்து பாராளுமன்று செல்வதை தடுப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது என அவர் தலைமை தாங்கும் கட்சியான ஜனநாயக தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் ஜேவிபி யின் முன்னணி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் இராணுவ நீதிமன்ற பிற்போடப்பட்டுள்ளது.
அதே நேரம் ஜெனரல் பாராளுமன்று வருவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அவரது கட்சியின் பொதுச் செயலாளர் பாராளமன்ற பொதுச் செயலாளருக்கு எழுத்து மூலம் வேண்டியதை அடுத்து இன்று அவர் பாதுகாப்புச் செயலரின் அனுமதி வேண்டி கடிதம் எழுதியுள்ளார்.
பாராளுமன்றுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதி நிதி ஒருவர் பாதுகாப்பு செயலரின் அனுமதியைப் பெற்றே பாராளுமன்று செல்லவேண்டிய நிலைமை தோன்றியுள்ளது என இவ்விவகாரம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
எது எவ்வாறாயினும் ஜெனரல் பாராளுமன்று அனுமதிக்கப்படுவார் என்ற செய்தி இதுவரை உத்தியோகபூர்வமாக அரச தரப்பிலிருந்து வெளிவரவில்லை. அவ்வாறு அவர் பாராளுமன்று வந்தால் அங்கு அவரது கன்னிப்பேச்சு எவ்வாறு அமையப்போகின்றது என்பதை யாவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதை அறியமுடிகின்றது.
0 comments :
Post a Comment